91. யாசாக் படை
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் தகவல் தொடர்புத் துறை புறாக்களின் அற்புத சேவையுடன் நின்றுவிடவில்லை. அத்துறை வெகு சிறப்பாக நிறுவப்பட்டு “திவானுல்-பரீத்” என்று பெயர் பெற்றது. அரசு ஊழியர்கள் அதன் பணிகளை மேற்கொண்டனர். அய்யூபிகள் நிறுவிய தபால் தகவல் பரிமாற்ற அமைப்புகள் சிலுவைப்படையினரின் அமைப்புகளைவிட பிரமாதமாகவும் பிரபலமாகவும் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலாகிக்கின்றனர்.
ஃபலஸ்தீனின் ரம்லாவில் போர் ஒன்று நிகழ்ந்தது. அதில் ஸலாஹுத்தீன் அய்யூபியின் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டு, ‘ஸலாஹுத்தீன் கொல்லப்பட்டுவிட்டார்’ என்று எகிப்தில் வதந்தியும் பரவிவிட்டது. (அந்தப் போரை விரிவாகப் பின்னர் பார்ப்போம்). ‘திண்ணை எப்பொழுது காலியாகும்’ என்று எகிப்தில் ஆட்சியைக் கவிழ்க்கக் காத்திருந்த குழுக்களின் காதில் தேனாய்ப் பாய்ந்தது அது. ஸலாஹுத்தீனால் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த கிளர்ச்சியாளர்கள் அவர்கள். அடுத்து எகிப்தில் குழப்பம் உருவாகும் என்பதை உணர்ந்தார் ஸலாஹுத்தீன். ஆகையால், ‘அபிலாசையில் துள்ள வேண்டாம். சுல்தான் உயிருடன் இருக்கின்றார்’ என்ற தகவலுடன் எகிப்தின் எல்லையிலிருந்து கெய்ரோவுக்குத் தூதர்களுடன் விரைந்தன ஒட்டகங்கள். ‘சுல்தான் கெய்ரோவுக்குத் திரும்பி வருகின்றார்’ என்பதை அறிவிக்க ரம்லாவிலிருந்து பறந்தன அஞ்சல் புறாக்கள்.
மற்றோர் ஆண்டு. ஸலாஹுத்தீன் கெராக் கோட்டையைத் தாக்கி முற்றுகையிட்டிருந்தார். ஆனால் எதிரிகள் தாக்குப் பிடித்து நின்றிருந்தனர். முற்றுகை நீடித்து ஸலாஹுத்தீனின் படையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. வேறு வழியின்றி, முற்றுகையைக் கைவிட்டு அவர் எகிப்துக்குத் திரும்பும் வழியில், அவருடைய மாமன் தபூரியா, கெராக் போரில் வென்ற நற்செய்தியை அஞ்சல் துறைத் தூதர்கள் விரைந்து வந்து தெரிவித்தனர். ஸலாஹுத்தீனின் தகவல் பரிமாற்ற அமைப்பு அந்தளவு மிகவும் துல்லியமானதாகவும் விரைவானதாகவும் அமைந்திருந்தது என்று பதிவு செய்துள்ளார் அக்கால வரலாற்று ஆசிரியர் முஹம்மது இப்னு தகீயுத்தீன் உமர். சுல்தான் ஸலாஹுத்தீனுடன் அந்தப் பயணத்தில் இணைந்திருந்தவர் அவர்.
ஸலாஹுத்தீன் உருவாக்கியிருந்தது வெறுமே அஞ்சல் துறையன்று. தகவல் கொண்டுவந்து சேர்ப்பிக்கும் உளவாளிகளும் உள்ளடங்கிய மிக விரிவான வலையமைப்பு அது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பாதுகாப்பு வழங்கிய சிலுவைப்போர் வீரர்கள் சிலரும் அதில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் பரங்கியர்களின் மொழியை அறிந்தவர்கள்; அவர்களைச் சார்ந்தவர்கள் என்பதால் முஸ்லிம்கள் ஊடுருவிப் பெற முடியாத கடினமான தகவல்களெல்லாம் இவர்கள் மூலம் எளிதாக வந்து சேர்ந்தன.

ஜெர்மானியர்களின் படையெடுப்பு, மற்றொரு சந்தர்ப்பத்தில் சிலுவைப்படை இரவில் முஸ்லிம் படைகளின் மீது திடீர்த் தாக்குதல் நடத்த வகுத்திருந்த திட்டம், ஏக்கர் (Acre) மீது (அரபு மொழியில் இந்நகரம் ’அக்கா’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரும் பின்னர் விவரிக்கப்படும்) தாக்குதல் தொடுக்க ஆயிரத்து ஐநூறு தினார்கள் செலவில் மாபெரும் கவண் எந்திரம் தயாரிக்கப்பட்டிருந்த (Mangonel) இராணுவ இரகசியம் போன்றவை எல்லாம் இவர்கள் அளித்த தகவல்களே.
சிலுவைப்படையின் ஏக்கர் நகர் முற்றுகையின் போது, பகைவர்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து, ஒவ்வொரு மணி நேரமும், விடிய விடிய ஸலாஹுத்தீனுக்கு வந்தபடியே இருந்தன. முற்றுகையிடப்பட்ட ஏக்கர் நகரின் படைகளுடன் அனைத்து வகையான தகவல் தொடர்பு முறைகளும் பயன்படுத்தப்பட்டன. அவர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து தேவையான உதவிகளை அனுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அஞ்சல் புறாக்களும் திறமையான நீச்சல் வீரர்களின் சேவையும் அதற்குப் பெரிதும் உதவின. அதில் ஈஸா என்ற நீச்சல் வீரரின் துணிச்சல் மிகவும் பிரபலமான ஒன்று.
இக்கரையிலிருந்து பரங்கியர் முற்றுகையிட்டிருக்கும் ஏக்கர் நகரின் அக்கரைக்கு ஈஸா நீந்திச் செல்வார். ஸலாஹுத்தீனின் ஆணைகள் அடங்கிய கடிதம், பணமெல்லாம் இவரது இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். ஏக்கர் நகரை அடைந்ததும் புறாவைப் பறக்க விடுவார் ஈஸா. அவர் பாதுகாப்பாக இலக்கை அடைந்துவிட்டார் என்பதை அது சுல்தானுக்கு அறிவிக்கும்.
ஓர் இரவு மூன்று பைகளைத் தமது இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார் ஈஸா. அதில் ஆயிரம் தீனார்களும் படைத்தலைவர்களுக்குக் கடிதங்களும் இருந்தன. ஆனால் நகரை அடையும் முன் ஏக்கர் கடற்கரை அருகே கடலில் மூழ்கி இறந்துவிட்டார் அவர். புறா வரவில்லை என்றதும் ஏதோ அசம்பாவிதம் என்பது ஸலாஹுத்தீனுக்குத் தெரிந்து விட்டது. சில நாட்களுக்குப் பிறகு கரை ஒதுங்கிய அவரது பிரேதத்தின் இடுப்பில் தங்க நாணயங்களும் கடிதங்களும் பத்திரமாக இருந்தன; ஏக்கர் முஸ்லிம்களை அடைந்தன.
வரலாற்று ஆசிரியர் இப்னு ஷத்தாத் இதைக் குறித்து, ‘தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியை ஒருவர், தாம் இறந்த பின்னரும் கொண்டு சேர்ப்பித்ததாக நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை – இந்த மனிதரைத் தவிர!’ என்று வியந்து எழுதி வைத்துள்ளார்.
oOo
‘யாசாக்’ என்றொரு போராளி அமைப்பு ஸலாஹுத்தீனிடம் இருந்தது. யாசாக் என்பது பாரசீக வார்த்தை; அதன் பொருள் சாரணப் படை. ஸலாஹுத்தீனின் யாசாக்குகள் பகைவரின் நடவடிக்கைகளையும் திட்டங்களையும் நெருக்கமாகக் கண்காணித்துத் தகவல் அளிக்கச் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார்கள். சுல்தானின் படை முன்னேறுவதற்கு முன்பாக, யாசாக்குகள் பகைவர் நிலைகொண்டிருக்கும் திசையில் அனுப்பப்படுவார்கள். அவர்கள் எதிரிப் படைகளின் தகவல்களை அறிந்து தங்களின் படைத் தளபதிகளுக்கு விபரங்களை விரைவாக அனுப்பி வைப்பார்கள்.
யாசாக் அமைப்பு வெகு முக்கியமான ஒன்றாக இருந்ததால் நேர்மையானவர்களாகவும் துணிச்சல் மிக்கவர்களாகவும் உள்ளவர் மட்டுமே அதன் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் முதன்மைப் பணி பகைவரின் பலத்தை மதிப்பிடுவதும் அவர்களின் பலவீனங்களைக் கண்டறிவதும் மட்டுமே என்பதால் இவர்கள் பகைவருடன் சண்டையில் ஈடுபடுவதைக் கூடுமானவரை தவிர்த்தனர். அதனால், இவர்களுக்குக் கவசம் இல்லை, கேடயம் இல்லை; வேறு எந்தக் கனமான ஆயுதங்களையும் இவர்கள் சுமப்பதில்லை. விரைவாய் நகர்வதற்கு இடையூறாய் இருக்கும் எதுவும் அவர்களுக்குத் தடை. அஞ்சி ஓடாத, விரைவான, வலுவான குதிரைகள்தாம் அவர்களது வாகனம். அவர்களின் படை எண்ணிக்கை அவர்கள் அச்சமயம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையைப் பொருத்து மாறுபடும். அதில் பெருமளவில் குதிரைப்படை வீரர்கள் இருப்பர்.
அக்கால வரலாற்றாசிரியர்களான இப்னு ஷத்தாதும் அல்-இஸ்ஃபஹானியும் தங்கள் நூல்களில் யாசாக்கைப் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட பல்வேறு பணிகளைப் பற்றியும் எழுதியுள்ளனர். அவற்றுள் யாசாக்குகளின் ‘தகவல் பணி’ ஒரு சிறு பகுதி மட்டுமே. சுல்தான் ஸலாஹுதீனின் காலத்தில் யாசாக்கின் பங்கு, பின்னர் எந்தளவு முக்கியமானதாக இருந்ததென்றால், அவருடைய சகோதரரும், மூத்த மகனும் வேறு சில மூத்த அமீர்களும் யாசாக்கின் தலைவர்களாக இருந்து வழிநடத்துமளவிற்கு இராணுவப் பணியாக உயர்வடைந்திருந்தது. பரங்கியர் வசமுள்ள நகரங்களைக் கண்காணிப்பது, அங்குள்ள குதிரைப்படை, காலாட்படை எண்ணிக்கையைக் கண்டறிவது, ஜெருசலம் நகரத்தைப் பற்றிய அன்றாடத் தகவல்களைத் திரட்டுவது போன்ற முக்கியப் பணிகள் யாசாக் இலாகாவுக்கு அளிக்கப்பட்டன.
அய்யூபிப் படையினரைப் பரங்கியர்களின் திடீர்த்தாக்குதல்களிலிருந்து யாசாக் பாதுகாக்கும். சில சந்தர்ப்பங்களில் யாசாக் போராளிக் குழுவாகப் பகைவர்களின் மீது திடீர்த்தாக்குதலும் நடத்தும். அதிலொன்று பதுங்குத் தாக்குதல். ஒருமுறை ஜாஃபா நகருக்கு எதிரிகளின் உணவுப் பொருட்களைக் கொண்டுவந்த வணிகக் கூட்டத்தையும் அதன் காவலுக்கு வந்த குதிரைப்படையையும் பதுங்கியிருந்து தாக்கியது யாசாக். கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் அவர்களை வென்றது யாசாக். பகைவர்கள் முப்பது பேர் கொல்லப்பட்டனர்; பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
யாசாக் சிலுவைப்படையுடனும் பல முறை மோதியது. ஒரு மோதலில்,‘சிங்க மகன் ரிச்சர்ட்’ (Richard the Lionheart) என்ற பட்டப்பெயர் கொண்ட மன்னர் ரிச்சர்டைக் கிட்டத்தட்ட பிடித்தேவிட்டனர். ரிச்சர்ட் குத்துண்டு காயமடைந்ததைக் கண்டதும் சிலுவைப்படையினருள் ஒருவன் ரிச்சர்டின் ஆடைகளைத் தான் அணிந்து, அவரைக் குத்திய யாசாக் போராளியின் கவனத்தைத் திருப்பியதில், உயிர் பிழைத்துத் தப்பித்தார் சிங்க மகன் ரிச்சர்ட். மாறிப் போனது வரலாறு. ஆனால் அந்தச் சண்டையில், ரிச்சர்டின் குதிரைப்படை வீரர்கள் பலர் யாசாக் போரளிகளால் கொல்லப்பட்டனர், பலர் சிறைபிடிக்கப்பட்டனர், மற்றவர்கள் அஞ்சி நடுங்கி ஓடினர்.
இவ்வாறு சிலுவைப்படையினருடனான மோதல்களிலும் யாசாக்கின் பணிகள் வளர்ச்சியடைந்து, எதிரிகளின் முகாம்களின் மீது திடீர்த் தாக்குதல் நடத்துவதிலும் பதுங்குத் தாக்குதல்களை ஏற்பாடு செய்வதிலும் திறன் பெற்றது. அய்யூபி இராணுவத்தில் முக்கியமான அமைப்பாகவே மாறிவிட்டது யாசாக்!
(தொடரும்)