90. புறா விடு தூது
தொடர்ந்து சதி, சூழ்ச்சி, வியூகம், முற்றுகை, சண்டை, கத்தி, இரத்தம், கொலை என்றே பல அத்தியாயங்கள் ஓடிவிட்டன.
சிலுவைப்போர் மூலகாரணியாய் வீற்றிருக்கும் வரலாற்றில் வேறு எது முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது? எல்லாம் போர் மயம். அவற்றுக்குச் சிறு இடைவேளை அளித்து விட்டு அமைதியான மற்றொன்றைப் பார்ப்போம்.
புறா!
இப்பறவையின் பெயரைச் சொன்னதும் நம்மில் பலருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது எது? வெள்ளை நிறத்தில் ஒரு புறா. அதன் வாயில் சமாதானக் குறியீடாய் ஒலிவ இலைகள். சாதுப் பறவை! அந்த சாதுப் பறவைக்குள் அபார ஆற்றல் ஒன்றைப் புகுத்திவிட்டான் படைத்தவன். அதன் அந்த ஆற்றல் இன்றைய நம் அஞ்சல், கூரியர் துறைகளின் முன்னோடி.
புறாக்களின் மூலம் தகவல் பரிமாறும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே இருந்திருக்கிறது. ஆடு, மாடு, கோழிகளைப் போல் புறாக்களையும் அக்கால மக்கள் இறைச்சிக்காக வளர்த்திருக்கிறார்கள். அவற்றை உண்ட நேரம் போக, தங்களின் பிராணிகளையும் பறவைகளையும் அவர்கள் கவனித்தபோது, புறாக்கள் மிகத் தொலைவில் இருந்து தம் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துச் சென்று சேர்வதைக் கண்டனர். தொலைவு என்றால் பக்கத்துத் தெரு, அடுத்த ஊர் போலன்று. வெகு தூரம். ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு பறக்கும் தூரம். புறாக்கள் தம் பூர்வீக இருப்பிடத்தை விட்டு எத்தனை மாதங்கள் பிரிந்திருந்த போதினும், இரவில் மட்டும் ஓய்வெடுத்துக்கொண்டு தொடர்ந்து மூன்று நாள்கள் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பன்னிரெண்டு மணிநேரம் பறந்து சமர்த்தாகத் தம்முடைய வீட்டை மீண்டும் வந்து அடைந்து விடுகின்றன என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். உள்ளங்கைக்குள் அடங்கி விடும் ‘பக் பக் பக்’ புறாவுக்கு அப்படி ஓர் ஆற்றல்.
அவற்றின் இந்த ஆற்றலைக் கண்டுபிடித்த பின், அக்காலக் காதலர்கள் காதல் கடிதம் பகிரவும் தம்பதியர் இரசாபாச மடல்கள் அனுப்பவும் புறாக்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், ஃபாத்திமீக்கள் காலத்தில் புறாக்களின் அஞ்சல் சேவை வெகு வித்தியாசமாக இருந்திருக்கின்றது. ஏறக்குறைய சரக்கு விமான சேவை. பதினான்காம் நூற்றாண்டின் எகிப்திய வரலாற்று ஆசிரியர் அல்-மக்ரிஸி (Al-Maqrizi) அதைப் பதிவு செய்துள்ளார்.
ஐந்தாவது ஃபாத்திமிய கலீஃபா அல்-அஸீஸ் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செலுத்தியவர். அவருக்கு செர்ரிப் பழங்கள் மீது பெருவிருப்பம். அதுவும் பால்பெக் செர்ரி என்றால் அவரது வாயில் நீர் வடியும். லெபனானில் இருக்கும் பால்பெக் நகருக்கும் கெய்ரோவுக்கும் இடையிலான தரைவழி தூரம் சற்றொப்ப ஆயிரம் கிலோமீட்டர். பழத்தின் புதுத்தன்மை மாறாமல் எகிப்திற்கு அதை எப்படிக் கொண்டு வருவது? அவருடைய வஸீர் தம் கலீஃபாவை ‘குஷி’ப்படுத்த அதற்கு ஓர் ஏற்பாடு செய்தார். 600 புறாக்கள்! ஒவ்வொரு புறாவின் காலிலும் சிறு பட்டுப் பை. அதனுள் ஒரு செர்ரிப் பழம். காலையில் அப்புறாக்களை பால்பெக்கில் பறக்க விட்டார்கள். இரு நகரங்களுக்கும் இடையிலான வான்வெளி தூரமான சுமார் 600 கிலோ மீட்டரைக் கடந்து அவை மாலையில் எகிப்தை வந்தடைந்தன. ‘செர்ரிப் பழத்துடன் கொண்டாட்டம்…’ என்று கலீஃபாவுக்கும் விருந்தினர்களுக்கும் கெய்ரோவில் விருந்துணவு பரிமாறப்பட்டது.
உள்நோக்கிப் பார்த்தால் இப்படி ஓர் அமைப்பு இயங்க அதற்கெனப் பெருமளவில் தனி நிர்வாகம் இருந்திருக்க வேண்டும் என்பது புரியும். ஏனெனில் மதுரையில் உள்ள ஏதோ ஒரு புறாவின் காலில் துண்டுச் சீட்டைக் கட்டி, ‘சென்னைக்குப் போய்க் கொடுத்துவிடு’ என்று சொன்னால் அது ‘பக்..பக்’ என்று கூண்டுக்குள் சென்று விடும். சென்னையில் பழக்கப்படுத்தப்பட்ட புறா மதுரையில் ஒப்படைக்கப்பட்டு, அங்குள்ளவர் அந்தப் புறாவைப் பறக்க விட்டால்தான் அது பழக்கப்பட்ட வழியில் பறந்து தன் இருப்பிடமான சென்னைக்கு வந்து சேரும். ஆகவே, ஒவ்வொரு நகரமும் புறாக்களை வளர்த்து, குழுக்களாகப் பிரித்து, அக்குழுக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பின்னர் அவற்றை இதர நகரங்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். அந்தந்த நகரமும் தத்தம் வசம் ஒப்படைக்கப்பட்ட புறாக்கள் எந்தெந்த நகரங்களைச் சேர்ந்தவை என்பதைப் பட்டியலிட்டுக் குறித்துக்கொண்டால், சென்னையில் பெரியப்பாவுக்கு, சேலத்தில் சித்தப்பாவுக்கு என்று நகர் வாரியாக மடலை அனுப்பிவிடலாம். தரையில் இவ்விதமான பயிற்சியும் பரிமாறலும் பல நகரங்களிலும் தொடர்ந்து நடந்தபடி இருந்தால்தான் புறாக்களின் வான் அஞ்சல் சேவை தங்கு தடையின்றித் தொடர முடியும்.
இப்படியான புறா நிர்வாக அமைப்பைத்தான் தம்முடைய ஆட்சிக் காலத்தில் பிரமாதமாகக் கட்டமைத்து அஞ்சல் புறாக்களைப் பறக்க விட்டார் நூருத்தீன். சிலுவைப்போர் காலத்து வரலாற்றை எழுதும் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் பலர், நூருத்தீனும் ஸலாஹுத்தீனும் கட்டமைத்த புறாக்களின் அஞ்சல் சேவை வலையமைப்பை வியந்து எழுதுகின்றனர்!
‘முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புகள் அஞ்சல் புறாக்களின் உதவியுடன் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கிடையே தகவல்கள் உடனடியாகப் பரிமாறப்பட்டன. அரபு ஆவணங்களில் இது ஒரு சாதாரணமான குறிப்பாக மட்டுமே தென்படுகிறது. ஒருவேளை இது அவர்களுக்கு மிகவும் வழக்கமாக இருந்ததால் அது விரிவாக எழுதுவதற்குத் தேவையற்றதாக அவர்கள் கருதியிருக்கலாம்’ என்று சமகால வரலாற்று ஆசிரியர் ஜான் மேன் தமது நூலில் குறிப்பிட்டு விட்டு (Saladin by John Man), அந்த வலையமைப்பை விரிவாகவும் எழுதியுள்ளார்.
அலெப்போவின் ஆளுநரான காலத்திலிருந்தே நூருத்தீன் அஞ்சல் புறாக்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். புறாக்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன; அவை வெவ்வேறு பகுதிகளுக்கு எப்படிச் சென்றடைகின்றன என்பதைத் தொடர்ந்து கவனித்துவிட்டு, ஹிஜ்ரி 567/கி.பி. 1172இல் சிறப்பான அஞ்சல் துறையாக அதை அவர் உருவாக்கிவிட்டார். தமது ராஜ்ஜியம் விரிவாக, விரிவாக அதற்கான தேவை அவருக்கு இன்றியமையாததாகி விட்டது. பரங்கியர்கள் இன்னின்ன பகுதிகளைத் தாக்குகிறார்கள் என்றொரு செய்தி அவருக்கு வந்து சேர்ந்து, அதற்கான எதிர் நடவடிக்கையை அவர் மேற்கொள்ளும் முன் பரங்கியர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றி முடித்திருப்பார்கள். மாறாக, அத்தகவல்கள் உடனுக்குடனே வந்து சேர்ந்தால்? அவற்றை அவருக்கு சாத்தியமாக்கின புறாக்கள்.
பல்லாயிரக்கணக்கான புறாக்கள். அவற்றைப் பராமரிக்க நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எனப் புறா அஞ்சல்துறை வடிவமைக்கப்பட்டது. புறா வளர்ப்பவர்கள், அதற்குக் கூடு கட்டுபவர்கள், பயிற்சியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் கொண்ட மாபெரும் நிர்வாகத் துறை அது. இதன் விளைவாக முஸ்லிம்களின் தகவல் பரிமாற்றம் அக்கால அளவீட்டில் அதிவேக நிலையை எட்டியது. ஒருமுறை பரங்கியர்கள் முஸ்லிம் பிரதேசங்களைத் தாக்க, அதே நாளில் அச்செய்தி நூருத்தீனை வந்தடைந்தது. அதன் அண்டைப் பகுதிகளில் இருந்த தம் படையினருக்கு உடனே எதிர் இராணுவ நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துத் தகவல் அனுப்பினார் நூருத்தீன். வெகு தொலைவில் வீற்றிருக்கும் நூருத்தீன் வந்து சேர்வதற்குள் காரியத்தை முடிக்க நினைத்த பரங்கியர்கள் முஸ்லிம்களின் உடனடி எதிர் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தது நூருத்தீனின் படை.
இமாதுத்தீனின் ஆவணங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. அதில் அவர், ‘நூருத்தீன் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் தம் நகரில் வெறுமனே வீற்றிருப்பதில்லை. எல்லைகளைப் பராமரிக்கவும் எதிரிகளிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாக்கவும் சென்றுவிடுவார். அச்சமயம் எகிப்தின் நிலைமைகளை அறியும் ஆர்வமும் அவருக்கு மிகைத்திருக்கும். அதனால், அவர் புறாக்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். அஞ்சல் புறாக்களின் பயன்பாட்டைப் பின்வருமாறு விளக்கி அது குறித்துத் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கும்படி என்னிடம் தெரிவித்தார்.
இந்தப் புறாக்கள் செய்திகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்லும் அஞ்சல் தூதர்கள். குறுகிய காலத்திற்குள் வெகு தொலைவிலுள்ள இடங்களுக்கு ரகசியங்களைச் சுமந்து செல்லவும் எதிரிகளின் திட்டங்கள், அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைப் பற்றிய செய்திகளை முஸ்லிம் துருப்புகளுக்குத் தெரிவிக்கவும் முஸ்லிம்களின் செய்திகளை அவர்களின் முன்னணிப் படைப்பிரிவுகளுக்கு அனுப்பவும் இந்தப் புறாக்கள் பேருதவி செய்கின்றன. இந்தப் புறாக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. ஆபத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டு, சரியான பாதையைப் பின்பற்றி, எதிரிகளின் இரகசியங்களை நேர்மையாக நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன.’
காலில் கட்டப்பட்ட தபாலுடன் ஒரு புறா சுல்தானின் இருப்பிடத்திற்கு வந்து தரையிறங்கினால் புறாத் துறைக் காவலர்களோ அதிகாரிகளோ அதைப் பிரித்துப் படிக்கக் கூடாது என்பது விதி. கடிதத்தில் வந்துள்ள செய்தி ரகசியமானதாக இருக்கலாம் அல்லவா? அதனால், சுல்தான் உண்ணும் நேரமாக இருந்தாலும் சரி, உறங்கும் நேரமாக இருந்தாலும் சரி, வந்து சேர்ந்த தபாலை, தந்தியின் அவசரத்துடன் தலைமைக் காவலர் அவரிடம் எடுத்துச் செல்வார். சுல்தான் தாமேதாம் செய்தியைத் திறக்க வேண்டும். அந்தளவிற்குச் சட்டதிட்டங்களை வகுத்திருந்தார்கள்.
oOo
நூருத்தீன் உருவாக்கியிருந்த அமைப்பை, அவருக்குப் பின் ஸலாஹுத்தீன் அப்படியே எடுத்துப் பின்பற்றி அதன் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தினார். செய்திகள் எவ்வாறு எழுதப்பட்டுப் புறாக்களுடன் இணைக்கப்படுகின்றன, அப்பறவைகள் எவ்வாறு ஒவ்வொரு நகரங்களிலும் பெறப்படுகின்றன, செய்தி மடல்கள் எவ்வாறு திறக்கப்படுகின்றன, உரியவர்களுக்கு எப்படிப் பாதுகாப்பாய் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதற்கான அனைத்து நெறிமுறைகளும் ஸலாஹுத்தீன் அதிகாரத்துக்கு வந்துபோது நடைமுறையில் இருந்தன. ஆகவே, அதன் அடுத்தக்கட்டமாக, ‘புறா விமான அஞ்சல்’ முறையை எகிப்துக்கும் சிரியாவிற்கும் இடையே விரிவுபடுத்தியது அவரது அரசு. புறா அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. பல திசைகளுக்கும் கடிதப் போக்குவரத்து நடைபெறும் வகையில் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது.
எகிப்தின் தென்கோடி அஸ்வானிலிருந்து கெய்ரோவுக்கு; கெய்ரோவிலிருந்து சூயஸ் கால்வாய், பில்பைஸ் நகரத்திற்கு; பில்பைஸ் நகரிலிருந்து சிரியாவுக்கு; எகிப்தின் இரு வேறு நகரங்களுக்கு; அந்நகரங்களிலிருந்து கஸ்ஸாவுக்கு, அதன் வழியில் மற்றொரு நகருக்கு என்று விரிவானது புறாக்களுக்கான வான்வெளிப் பின்னல். கெய்ரோவின் கிழக்கே அமைந்துள்ள பில்பைஸ் எகிப்தில் தரையிறங்கும் புறாக்களுக்கான மைய முனை என்றால் ஃபலஸ்தீனத்தின் கஸ்ஸாவில் இருந்து ஹெப்ரான், லூத் அங்கிருந்து கானூன், என்று பின்னல் நீண்டது. பின்னர் அங்கிருந்து பல நகரங்களுக்கும் டமாஸ்கஸுக்கும். டமாஸ்கஸ் மையத்திலிருந்து பால்பெக்கிற்கும் வேறு நகரங்களுக்கும் என்று விரிந்து சிரியாவின் தெற்கே அலெப்போ, மெஸபெட்டோமியா என்று பறந்தன புறாக்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் இன்று கூரியரில் அனுப்பப்படுபவை எவ்விதம் பல நாடுகளுக்கும் பல நகரங்களுக்கும் பல விமானங்களின் மூலம் சென்று சேர்கிறதோ, அவ்விதமான ஓர் அமைப்பை –புறாக்களை அஞ்சல் விமானங்களாக – உருவாக்கியிருந்தார்கள் நூருத்தீனும் ஸலாஹுத்தீனும்.
ஆகவே அந்தந்த நிலையங்களிலும் இதர நகரங்களைச் சேர்ந்த ஏராள புறாக்கள். கெய்ரோவின் புறா விடுதியில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. போர் நடைபெறும் நேரத்தில் புறாக்களின் தேவை மேலும் அதிகரித்து விடும். அதனால் புறாக்களை வளர்க்கும் தொழில் மிகவும் பெரும் இலாபகரமானதாக ஆகிவிட்டது.
அல்-இஸ்ஃபஹானி தம்முடைய குறிப்புகளில், “அஞ்சல் புறா வளர்ப்பவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தத் தொடங்கினோம். அவர்களைச் சிறப்பாகப் புகழ்ந்து பாராட்டி அதிகமான பறவைகளைத் தருமாறு கேட்டுக்கொண்டோம். அவர்களது கையிருப்புத் தீர்ந்து போகும் வரை எங்களது தேவை நீடித்தது” என்று எழுதி வைத்துள்ளார்.
தேவை அதிகரித்தால் என்னாகும்? இந்தப் புறாக்களின் விலை எழுநூறிலிருந்து ஆயிரம் தீனார் வரை உயர்ந்தது. அதன் முட்டைக்கே இருபது தீனார் விலை. பொரித்துச் சாப்பிடுவதற்கன்று; அடைகாத்துக் குஞ்சு பிறப்பதற்கு!
அய்யூபி இராணுவம் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த புறாக்களைத் தன்னுடன் எடுத்துச் செல்லும். பறவைகளின் இறக்கைகளில் ஒரு ரகசியக் குறியீட்டை வரைந்து கடிதங்களை அனுப்பி வைக்கும். போர் ஒன்றில் ஸலாஹுத்தீன் அய்யூபிக்குப் பின்னடைவு ஏற்பட்டு, அவர் கொல்லப்பட்டதாக எகிப்தில் வதந்தி பரவிய போது, ஃபலஸ்தீனில் சுல்தான் பாதுகாப்பாக இருக்கும் தகவலை அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியாய் உடனே சுமந்து சென்றன புறாக்கள்.
காழீ அல்-ஃபாதில் இந்தப் புறாக்களைக் குறித்துக் கூறியுள்ளது வரலாற்று நூல்களில் பிரசித்தம். மலக்குகள் வானத்திலிருந்து நபிமார்களிடம் செய்தியுடன் வந்து இறங்குவதைப் போல், இந்த அஞ்சல் புறாக்கள் வானத்திலிருந்து சுல்தான்களிடம் இறங்குகின்றன என்று அவற்றை அவர் மகிழ்வுடன் வர்ணித்த சொல்: “சுல்தான்களின் மலக்குகள்”!
(தொடரும்)