குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!

Share this:

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது.

சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை  10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கி பிழிந்து, வடிகட்டி கொடுத்தால் பலூனில் காற்று இறங்குவது போன்று இறங்கிவிடும்.

 

குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், சுக்கு தட்டிப்போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து வெளிப் போக்கு ஆகி சரியாகிவிடும்.

 

பச்சிளங்குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் நீளமான முழு மஞ்சள் ஓன்றை எடுத்து, ஒரு முனையில் கருப்பாகச் சுட்டு, சிறிது சுண்ணாம்புடன் விழுதாக  தயாரிக்கவும். கரண்டியில் இந்த விழுதை லேசாக சுடவைத்து மிதமான சூட்டில் குழந்தையின் மூக்கு மற்ற்றும் நெற்றியில் தடவினால் ஜலதோஷம் பறந்து போய்விடும்.

 

பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்க, தினந்தோறும் உள்நாக்கில் தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வரலாம். இது உடனடியாக உடனே உறிஞ்சப்படுவதால் "அக்கரம்" நீங்கும்;  மூளை தூண்டப்படும்;  கபம் சேராது;  நல்ல ஜீரணசக்தி வரும்;  மந்தம், மலச்சிக்கலும் வராது.

 

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர்  நகம் வெட்ட வேண்டும். எளிதாகவும், சுத்தமாகவும் வேலை முடியும்.

 

பரங்கிக்காய் மற்றும் ச்சவ் ச்சவ் (பெங்களூர் கத்திரிக்காய்) முதலியவற்றை அரியும்போது முத்து முத்தாக நீர் வரும். அந்த நீரைக் குழந்தைகளின் புண்களுக்குத் தடவினால் புண்கள் விரைவாக ஆறிவிடும்.

 

குழந்தை அழுது, கையை காதுப்பக்கம் கொண்டு போய் வத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.

 

குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளைநிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளி விடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

 

குழந்தைகளிடம் அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா? என்று கேட்கக் கூடாது. அவர்களுக்கு இருவருமே வேண்டும். இவ்வாறான கேள்வியால் அவர்கள் மனதில் யாராவது ஒருவர் போதும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு.

 

காலில் முள்குத்தி இருந்தால் எடுக்கும்போது வலி தெரியாமலிருக்க முதலில் சிறிது ஐஸ் வைத்து மரத்துப் போகச் செய்து விட்டு பிறகு எடுக்கலாம்.

 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால், 10 பசலைக்கீரையை எடுத்து பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

 

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் இருக்கும்.

 

குழந்தைகளுக்கு இரவில் பேரீச்சம்பழம் 4 அல்லது 5 கொடுத்து உடன் பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

 

"குழந்தை வளர்ப்பான்" ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்து விட்டால் எறும்பு மட்டுமல்ல, கொசு மற்றும் பிற பூச்சிகளும் வராது.

 

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈத்தொல்லை அவதியாக இருந்தால் குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கி போட்டால் ஈக்கள் அந்த பக்கமே வராது.

 

குழந்தைகளுக்குப் பால் ஜவ்வரிசியில் கஞ்சி போட்டுக் கொடுத்தால் மிகவும் நல்லது.  நைலான் ஜவ்வரிசியை எண்ணெய் விடாமல் வறுத்து, மிக்சியில் திரித்து கஞ்சி செய்து கொடுக்கலாம்.

 

குழந்தைகளுக்குத் தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்து சாப்பிட கொடுக்கலாம். பசும்பாலைவிட அதிகச்சத்து வாய்ந்தது.

 

சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தரையை கூட்டிப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பாதிக்கும்.

 

சிறு குழந்தைகள் கீழே விழுந்து நெற்றியில் வீங்கிக் கொண்டு விட்டால் வீங்கிய இடத்தில் இரண்டு மூன்று முறை மண்ணெண்ணெயைப் போட்டு விட்டால் வீக்கம் குறையும்.

 

தொகுப்பு : உம்மு ஷமீம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.