தோழர்கள் – 12 – அபூதல்ஹா அல் அன்ஸாரீ – أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ

Share this:

அபூதல்ஹா அல் அன்ஸாரீ

‏أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ

மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலம். கடல் தாண்டி நிகழவிருந்த போர் ஒன்றுக்கு முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அவரும் முஸ்லிம் படைகளுடன் கலந்து கொள்ள ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அவருடைய மகன்களுக்கு அதிர்ச்சி! ‘இந்தத் தள்ளாத வயதில் போர்க் களமா? என்ன இது?’ என்று வருத்தமுற்றவர்கள், தந்தையை மரியாதையுடன் அணுகினார்கள். அவரது மனத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகவும் பாந்தமாய்ப் பேசினார்கள்.

“தந்தையே, அல்லாஹ் உங்கள்மேல் இரக்கம் கொள்வானாக! உங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. நீங்கள் பார்க்காத யுத்தமா, ஈடுபடாத போரா? முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்து போரிட்டிருக்கின்றீர்கள். பின்னர் அபூபக்ரு, உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது படைகளில் போரிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நாங்கள்தான் போருக்குச் செல்ல வேண்டும். தயவுசெய்து எங்கள் வேண்டுகோளுக்கு உடன்படுங்கள்”

அமைதியாக அதைக் கேட்டுக்கொண்ட அந்த முதியவர் தீர்க்கமாகத் தன் மகன்களிடம் கூறினார்:  “அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் தெரியுமா? ‘நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.’ (9:41)”.

சிறுவருக்கும் முதியோருக்கும் போரில் ஈடுபடுவதில் விலக்கு இருப்பதை எடுத்துச் சொல்லித் தந்தையைத் தடுத்து நிறுத்த முயன்றனர் பிள்ளைகள். அறப்போரில் பங்கு பெற்று, வீரத்தியாகியாக இறப்பெய்யும் அவரது பேராசைக்கு முன்னால் பிள்ளைகளின் முயற்சிகள் தோல்வியுற்றன.

போர்! அதுவும் நிலத்தில் பயணம் சென்று எதிரியைச் சந்திக்கும் போரல்ல. கடல் தாண்டிய பயணம். அந்தப் போர்ப் பயணத்திற்கு, அளவற்ற மனஉறுதியுடன் அந்தத் தள்ளாத வயதிலும் கிளம்பினார் அந்த வயோதிகர்.

அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

oOo

ஸைத் இப்னு ஸஹ்லு அந்நஜ்ஜாரீ. அதுதான் கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர். யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி!

ருமைஸா பின்த்தி மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா எனும் பெயருடைய பெண் ஒருவர் யத்ரிபில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரின் கணவன் மாலிக் பின் நாதர். மனமொப்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மகன்களும் இருந்தனர். இந்நிலையில் யத்ரிபிலிருந்து மக்காவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் முஹம்மது நபியைச் சந்தித்து முதல்அகபா உடன்படிக்கை ஏற்பட, அதைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் யத்ரிபில் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தார் என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றிலேயே பார்த்தோமல்லவா? அந்தப் பிரச்சாரம் ருமைஸாவின் நெஞ்சக் கதவைத் தட்டியது. இஸ்லாத்தின் சத்தியத்தைப் புரிந்துகொண்ட அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டார். ஆனால் அவருடைய கணவன் மாலிக்கிற்குத் தனது மூதாதையரின் பழைய வாழ்க்கை முறையை விடமுடியவில்லை.

கணவன் மனைவிக்கிடையே அதைத் தொடர்ந்து பிரச்சினை. மாலிக் தன் மனைவியைப் புதிய மார்க்கத்திலிருந்து மீட்டெடுத்துவிட மிகவும் பிரயாசைப்பட்டார். எதுவும் சரிவரவில்லை. ருமைஸா தனது கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். அத்தோடில்லாமல், தன் மகன் அனஸ் இப்னு மாலிக்கையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த அனஸ் இப்னு மாலிக், அல்லாஹ்வின் தூதரின் அன்பையும் அணுக்கத்தையும் அதிகம் பெற்றவர். பிற்காலத்தில் மிகவும் அறியப்பட்ட தோழர். அவரைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

மனைவியுடன் சண்டையிட்டார் மாலிக்; பொறுத்திருந்து பார்த்தார்; கடைசியில் கோபமாய் சிரியா கிளம்பிச் சென்றுவிட்டார்.  மரணம் அவருக்கு அங்குக் காத்திருந்தது. அவருடைய எதிரி யாரோ ஒருவன் அவரைக் கொன்றுவிட்டான். அங்கு அவர் இறந்துபோனார். இங்கு ருமைஸா விதவையானார்.

ருமைஸாவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு. ஆனால் வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா.

இந்த உம்முஸுலைம் விதவையாகிப்போன செய்திதான் அபூதல்ஹாவை அடைந்தது; அவரை உற்சாகம் தொற்றியது. காரணம் இருந்தது. அப்போதைய யத்ரிபில் உம்முஸுலைம் மிகச் சிறந்த நல்லொழுக்கங்கள் நிறைந்த மாது. அறிவாற்றலில் மிகைத்திருந்தவர். இத்தகைய ஒரு மங்கையை மனைவியாக அடைவது பாக்கியம் என்று நிறைய ஆண்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களை, தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார் அபூதல்ஹா.

அபூதல்ஹா அழகானவர் மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர். ஏராளமான சொத்து இருந்தது; சமூகத்தில் நல்ல அந்தஸ்து இருந்தது. உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.

படைவீரர் என்றாலே பாட்டும் கூடவே இருக்கும் போலும். அவர் பாடுவார் :

أنا أبو طلحة واسمي زيد

أوكل يوم في سلاحي صيد

ஒவ்வொரு நாளும்

எனது வில்லுக்கு

ஓயாத வேட்டையின் வேட்கை!

என் பெயர் ஸைத்;

நான் அபூதல்ஹா!

இத்தகைய தகுதிகள் அமையப்பெற்ற தன்னை மணம் முடிக்க உம்முஸுலைமிற்கு ஆட்சேபம் இருக்க முடியாது என்று அவருக்கு திட்டவட்டமாகத் தோன்றியது. உடனே பெண் கேட்கக் கிளம்பிவிட்டார்.

வழியில்தான் அவருக்கு அந்த எண்ணம் வந்து ஓடியது. ‘மக்காவிலிருந்து வந்திருக்கும் முஸ்அப் பின் உமைர் எனும் முஸ்லிம் பிரச்சாரகர் சொல்கேட்டு, அந்தப் பெண் முஹம்மதை ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தைத் தழுவியுள்ளாரே! அதனால் தன்னை வேண்டாம் என்று மறுத்து விடுவாரோ?’

‘மறுக்க மாட்டார்! அவருடைய முதல்கணவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லையே! எனவே அது ஒரு பிரச்சனையாக அமைய வாய்ப்பில்லை’ என்று தன்னைத்தானே தோள் குலுக்கித் தேற்றிக் கொண்டார்.

உம்முஸுலைம் வீட்டை அடைந்து, உள்ளேவர அனுமதி கேட்டார். கிடைத்தது. தாயும் அவருடைய மகன் அனஸும் இருந்தார்கள். சுற்றி வளைக்கவில்லை நேரடியாக, தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்துவிட்டார் அபூதல்ஹா.

“அபூதல்ஹா! உம்மைப் போன்ற ஒரு கண்ணியவானை மணமுடிப்பது நற்பேறு. தட்டிக்கழிக்க முடியாத வரன் நீர். ஆயினும், நான் உம்மை மணந்து கொள்ள முடியாது. ஏனெனில் எனக்கு நீர் வேற்று சமயத்தவராக ஆகிவிட்டீர்”

தன்னுடைய பதிலையும் உடனே நேரடியாகத் தெரிவித்துவிட்டார் உம்முஸுலைம்.

அபூதல்ஹாவிற்கு நம்ப முடியவில்லை. அந்த பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லை. மதத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு சாக்குபோக்காகத்தான் இருக்க வேண்டும். அனேகமாய்த் தன்னைவிட செல்வந்தனையோ, தனது கோத்திரத்தைவிட சக்தி வாய்ந்த கோத்திரத்தைச் சார்ந்த வேறு எவரையோ அவர் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

“உண்மையைச் சொல்லுங்கள். ஏன் என்னை மணம் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் உம்முஸுலைம்?”

“வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ன?”

“ஆம். மஞ்சளும் வெள்ளையும்”

“அதாவது?”

“மஞ்சளும் வெள்ளையும். தங்கமும் வெள்ளியும்”

“தங்கமும் வெள்ளியுமா?” ஆச்சரியமாகக் கேட்டார் உம்முஸுலைம்.

“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது”

“அபூதல்ஹா! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றுமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்”.

இங்கு இதை நன்கு கவனித்தல் நலம். ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றிலும் பார்த்தோம். மணமகன்தான் மணக்கொடை வழங்குவதற்குப் போட்டி போடுகிறார். என்றால், இங்கே மணப்பெண் ஒருபடி மேலே போய், பணமாவது, நகையாவது, என்று இகலோக வஸ்துகளை உதறித் தள்ளிவிட்டு, மணம் புரிய இருவுலகிற்கும் மேன்மை சேர்க்கும் மன மாற்றம் கேட்கிறார். இத்தகைய சரியான புரிதல்களில் அமைந்தன அவர்களது மார்க்க நம்பிக்கையும் குடும்ப வாழ்க்கையும்.

என்னவாகும்? பிற்காலத்தில் அவர்களைத் தானாய் வந்தடைந்தன, புகழும் செல்வமும்.

உம்முஸுலைமின் பதில் அபூதல்ஹாவை மிகவும் யோசிக்க வைத்தது. அவருக்கு அவரது சிலை நினைவிற்கு வந்தது. அரிய, விலையுயர்ந்த மரத்தால் வடிக்கப்பெற்ற கடவுள் சிலை அது. அவருடைய குலமரபுச் சின்னம். அவர் குலத்தின் மேட்டிமையின் அடையாளம். அதை எப்படித் துறப்பது? ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய அவரை,

“அபூதல்ஹா! நீங்கள் கடவுள் என்று வணங்கும் அந்தச் சிலை பூமியிலிருந்து முளைத்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே?” என்று கேட்டார் உம்முஸுலைம்.

“ஆம்”

“ஒரு மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதியைச் சிலையாக வடித்து நீங்கள் கடவுள் என்கின்றீர்கள். மீதப் பகுதிகளை எடுத்துச் சென்றவர்கள் அதை நெருப்புக்காகப் பயன்படுத்திக் குளிர்காயவோ, சமையலுக்கோ உபயோகப்படுத்துகின்றார்கள். இது உங்களுக்கு விந்தையாகவோ, சங்கடமாகவோ தோன்றவில்லையா?

அபூதல்ஹா! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், மீண்டும் கூறுகிறேன், அதுவே நீங்கள் எனக்களிக்கும் மணக்கொடை”.

யோசனையின் இறுதியில் இணங்கினார் அபூதல்ஹா. “நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?”

“கூறுகிறேன். மிக எளிது. ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே! வீட்டிற்குச் சென்றதும் உங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்”.

“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”.

பூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி, ரலியல்லாஹு அன்ஹு!

அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா. நகரெங்கும் அதே பேச்சு. அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிராத விசித்திரம் அது.

“கேட்டியா செய்தியை! உம்முஸுலைம் அடைந்ததைப்போல் சிறப்பான மணக்கொடையை இதுவரை எந்தப் பெண்ணுமே பெற்றதில்லை. தன்னை மணக்க விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். என்னே சிறப்பு!”

அன்று வந்து நுழைந்தாரே அபூதல்ஹா? நிரூபித்தார் ஒரு செய்தியை. வெறும் காதல் மயக்கத்திலோ, தான் நாடிய பெண்ணை எப்படியோ மணமகளாய் அடைந்தால் போதும் என்ற குறுகிய நோக்கத்திலோ அவர் நின்றுவிடவில்லை. இஸ்லாத்தை நேசித்தார். உள்ளார்ந்த நேர்மையுடன் பின்பற்ற ஆரம்பித்தார். மணமகனாய் நுழைந்தவர், மாபெரும் இஸ்லாமியச் சேவகனாய் ஆகிப் போனார்.

வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது அகபா உடன்படிக்கை பற்றி ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோமே? நபியவர்களை அகபாவில் சந்தித்து சத்தியப் பிரமாணம் செய்த 75பேர்கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலைமும். அன்றைய உடன்படிக்கையின்போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.

நபியே! உமக்காக “உயிர், பொருள், செல்வம்” அனைத்தையும் கொடுப்பேன் என்று, அன்று, மற்றொரு திருப்புமுனையுடன் துவங்கியது அபூதல்ஹாவின் வாழ்க்கை.

oOo

நபியவர்கள்மேல் அபூதல்ஹா பாசம் கொள்ள ஆரம்பித்தார். சடுதியில் வளர்ந்த அது, அவரது உள்ளத்தில் ஆழப்பாய்ந்து வேரூன்றியது. அவரது இரத்த நாளமெல்லாம் ஊடுருவி ஓடியது. இவையெல்லாம் ஏதோ உவமைக்குச் சொல்லும் மிகையான உதாரணங்கள் அல்ல. அவரது வாழ்க்கை சாட்சி கூறுகிறது.

நபியவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் அலாதி ஆனந்தம் அடைந்தார் அபூதல்ஹா! கண்கள் அசதி மறந்தன. நபியவர்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு அளவிலா இனிமையாய் இருந்தது.

நபியவர்களிடமே ஒருநாள் கூறினார், “உங்களுக்காக நான் என்னுடைய ஆவியைத் தரத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய திருமுகத்திற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் நான் என்னுடைய முகத்தைக் கொண்டு தடுப்பேன்”.

அது கபடமற்ற பேச்சு. விரைவில் நிரூபணம் ஆனது.

அவர் பெண் கேட்கச் சென்று கொண்டிருந்தபோதே அறிமுகப்படுத்திக் கொண்டோம் அபூதல்ஹா ஒரு வீரர் என்று. மாவீரர். நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்தபின் நிகழ்வுற்ற போர்களிலெல்லாம் அவர்களுடன் இணைந்து படுதுணிவாய், வீரமாய்ப் போரிட்டவர் அபூதல்ஹா. அதில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ஒரு போர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹுதுப் போர்.

அன்று முஸ்லிம் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, குரைஷிகளின் படை முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் அவர்கள் முஸ்லிம்களைச் சூழ ஆரம்பித்திருந்தனர். நிலைமை மிகவும் கடுமையடைந்து, நபிகளாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. அவர்களது நெற்றியில் ஆழமான வெட்டு, உதட்டிலும் வெட்டுக் காயம். அந்தக் களேபரமான சூழ்நிலையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி ஒன்று தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. அது குரைஷிகள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் வீரர்களையோ அது மேலும் பலவீனப்படுத்தி, பலர் செயலிழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட, மிகச் சிறிய அளவிலான படைக்குழு ஒன்று மட்டுமே நபியவர்களை அப்பொழுது சூழ்ந்திருந்தது; எஞ்சியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் அபூதல்ஹா.

‘ஈமான் கொண்டேன், அல்லாஹ்வும் நபியும் என் உயிரினும் மேல்’ என்று சொல்வதெல்லாம் எளிதுதான். ஆனால் தருணங்கள் சில தோன்றும். அதுதான் ஈமானைத் தரம் பிரித்துக் காட்டும்.

அந்தச் சிறிய அளவிலான தோழர்கள் கடும் ஆக்ரோஷத்துடன் முஹம்மது நபியைச் சுற்றி அரண் அமைத்தார்கள். அதுவரை முஸ்லிம் படைகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை வலிமையாய் அத்துடன் தடுத்து நிறுத்தினார்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் ஒரு மனிதக் கேடயமாக வந்து குதித்தார் அபூதல்ஹா. நபிகள் நாயகத்தின் மீது மேற்கொண்டு யாரும் எதுவும் தாக்க இயலாவண்ணம் ஒரு மலை போல் நின்று கொண்டார். வில்லைப் பூட்டினார். அம்பெய்ய ஆரம்பித்து விட்டார். குறி தவறாது பாய்ந்து சென்றன அவரது அம்புகள். குரைஷிப் படை வீரர்களைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தன. அதேநேரத்தில் களத்தில் நபியவர்கள் தாக்கப்படாமலிருக்க, அவர்களின் காப்புக் கேடயமாகச் சுழன்று கொண்டிருந்தார் அபூதல்ஹா. முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் காண அவரது தோளைத் தாண்டி முஹம்மது நபி காண முற்படும்போதெல்லாம், அவர்களைத் தடுத்து பின்னுக்கு நகர்த்தி,

“அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பெற்றோரை உங்களுக்குப் பகரமாய் இழப்பேன். தயவுசெய்து நீங்கள் எதிரிகளைக் காண முற்பட வேண்டாம். அவர்கள் உங்கள்மீது அம்பெய்தி விடலாம். அதைவிட எனது கழுத்திலும், மார்பிலும் அது தைப்பது எனக்கு மிகவும் உவப்பானது. நான் உங்களுக்காக என்னையே இழக்கத் தயாராயிருக்கிறேன் யா ரஸூலல்லாஹ்!” என்று பதட்டமானார் அபூதல்ஹா..

தெறித்து ஓடிய படையிலிருந்து எஞ்சி நின்று, தனது உடலையும் உயிரையும் பணயமாக வைத்து, கொல்லப்படக்கூடிய அத்துணைச் சாத்தியங்களுடன் சத்தியம் பேசும் அந்தச் சூழ்நிலையையும் ஈமானையும் முதலில் நம்மால் ஆழ்மனதில் உணர முடிந்தால், அது போதும் நமது ஈமானின் வலு உணர!.

அம்பறாவில் அம்புகளுடன் யாரேனும் களத்தில் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களை நோக்கிக் கூவினார்கள் நபிகளவர்கள், “உங்களது அம்புகளை இங்கே அபூதல்ஹாவிடம் கொட்டுங்கள். அதையும் தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள்”.

பலத்த ஆக்ரோஷத்துடன், ஒப்பிட இயலாத வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார் அபூதல்ஹா, அம்பெய்து அம்பெய்து, அவருடைய கைகள் களைப்படையவில்லை. ஆனால் மூன்று வில்கள்தான் உடைந்தன. எண்ணற்ற குரைஷி வீரர்கள் அவரால் அன்று கொல்லப்பட்டனர். எண்ணற்றக் காயங்களுடன் வரலாற்றில் தனது அத்தியாயத்தை அன்று பதிவு செய்தார் அபூதல்ஹா.

ஒவ்வொரு நாளும்

எனது வில்லுக்கு

ஓயாத வேட்டையின் வேட்கை!

என் பெயர் ஸைத்;

நான் அபூதல்ஹா!

oOo

அபூதல்ஹா காலையில் எழுந்து சுப்ஹுத் தொழத் தயாராவார். நபிகள் நாயகத்துடன் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுதுவிட்டு, அவருடன் ஏறக்குறைய பாதிநாள் அளவு தங்கியிருப்பார். பிறகு வீட்டிற்கு வந்து குட்டித் தூக்கம், உணவு, நண்பகல் தொழுகை. பிறகு மீண்டும் தயாராகி கிளம்பிச் செல்பவர், தனது தொழில், அலுவல் எல்லாம் பார்த்து முடித்து இரவு இஷா நேரத்தில்தான் வீடு திரும்புவார். அனாவசியங்களில் நேரத்தைத் தொலைக்காத வாழ்க்கை.

மதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா. அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. முஹம்மது நபி அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.

ஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:

“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”

மூன்றாவது அத்தியாயத்தின் 92-ஆவது வசனமாக குர்ஆனில் இடம்பெற்றுள்ள வாசகம் அது. அந்த வசனத்தை அபூதல்ஹா அறிய வந்தார். விரைந்து நபிகள் நாயகத்திடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, ‘நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;’ என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனது செல்வத்திலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா. அதை அல்லாஹ்வினுடைய பாதையில் நான் தானமாக அளிக்கிறேன். அதனுடைய நற்கூலி எதுவோ, அது எனக்காக அல்லாஹ்விடம் சேமிக்கப்பட்டிருக்கட்டும். அல்லாஹ் உங்களுக்கு எப்படி அறிவிக்கிறானோ அதன்படி இதைத் நீங்கள் அளித்துவிடுங்கள்”.

இறைவசனம் என்று ஒன்று அருளப்பெற்றால், அது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதை ஓதுகிறார்கள். அது செய்யச் சொல்வதைச் செய்கிறார்கள். தடுக்கச் சொல்வதை அப்படியே தடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்! அவர்களுக்கு குர்ஆன் என்பது வண்ணக் காகிதத்தில் அழகாய் அச்சடிக்கப்பெற்ற நூலல்ல, வாழ்வியல் நெறி! அதிலுள்ளவை ஓதி நெஞ்சில் ஊதிக்கொள்ளும் வாசகங்கள் அல்ல, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை உணர்ந்து வாழ்ந்த சமூகம் அது.

அதனால்தான் அது உயர்ந்தது! உன்னதம் அடைந்தது!

“நீர் உரைத்ததைக் கேட்டேன். நன்று உரைத்தீர் அபூதல்ஹா! இது மிகச் சிறந்த நற்செயல்! ஆனால், இதை உமது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்து அளித்துவிடுங்கள்,” என்றார் முஹம்மது நபி.

“அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்றவர், திரும்பி வந்தார். தன் உறவினர்கள் சிலரை அழைத்து, “இந்தாருங்கள் பிடியுங்கள்” என்று தோட்டத்தை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தனது அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

ரலியல்லாஹு அன்ஹு!

உங்களது ஊரில், உறவில், தெருவில் நீங்கள் பார்த்திருக்கலாம். சொத்தில் பாத்தியதை இருக்கிறதோ இல்லையோ, வெட்டுப்பழி, குத்துப்பழி; கோர்ட், கேஸ் என்று வழக்காடிக் கொண்டிருக்கிறார்களே மக்கள், எதைச் சாதிக்க?

அதுமட்டுமல்ல, பிறிதொரு நிகழ்வும் அவர் வாழ்வில் நிகழ்வுற்றது.

பேரீச்ச மரங்கள், திராட்சைக் கொடிகள் நிரம்பிய அழகான தோட்டம் ஒன்றும் அபூதல்ஹாவிடம் இருந்தது. மதீனாவிலேயே உயர்ந்த மரங்களும், மிகச் சிறந்த கனிகளும், இனிமையான நீரும் அத்தோட்டத்தின் சிறப்பு.

ஒருநாள் அந்தத் தோட்டத்தில் மரநிழலில் அபூதல்ஹா தொழுது கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்தது அழகிய பறவை ஒன்று. அதன் பச்சை நிறமும், சிவப்பு அலகும், தொழுது கொண்டிருந்த அபூதல்ஹா கண்களை ஈர்த்து விட்டது. கிறீச்சிட்டுக் கொண்டு, கிளைக்குக் கிளை உல்லாசமாகத் தாவிப் பறந்து கொண்டிருந்தது அந்தப் பறவை. அவரையறியாமல் அதையே கண்கள் தொடர தொழுகையிலிருந்த அவருடைய கவனம் சிதறிவிட்டார் அபூதல்ஹா. சட்டென்று அந்த எண்ணம் அவரைத் தாக்க, தான் எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்பதைக்கூட நிர்ணயிக்க இயலாத நிலையில் இருந்தார் அவர்.

இரண்டா? மூன்றா? குழப்பம் ஏற்பட்டு விட்டது. ம்ஹும்! சரியாகக் கவனத்தில் வரவில்லை.

விக்கித்துப் போனார் அபூதல்ஹா. தொழுது முடித்தபின் விரைந்து நபியவர்களைச் சந்தித்து முறையிட்டார். தனது தோட்டத்தின் மரங்களும், கூவும் பறவையும் எப்படித் தன்னுடைய தொழுகையை பாதித்தது, கவனத்தைக் குலைத்தது, தனது ஆன்மாவை சஞ்சலத்திற்குள்ளாக்கியது என்று உலகமே கவிழ்ந்ததுபோல் கவலைப்பட்டு குறுகி நின்றார் அந்த வீரர் அபூதல்ஹா.

அது உள்ளார்ந்த கவலை. உள்ளம் நடுங்கிய கவலை. என்னவாவது செய்து தன்னுடைய தவறுக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமே என்ற கவலை.

அதனால், ”அல்லாஹ்வின் தூதரே! நீங்களே சாட்சி. நான் எனது இந்தத் தோட்டத்தை அல்லாஹ்விற்காக தானமளிக்கிறேன். அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எது உவப்பளிக்குமோ அவ்வகையில் இதனைத் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்”.

ஒரு தொழுகை தட்டுக்கெட்டுப் போனதற்கு மொத்தத் தோட்டத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டார் அபூதல்ஹா. அந்தத் தோட்டத்தின் அழகுதானே இறைவனைத் தொழுவதில் சங்கடம் ஏற்படுத்தியது? எனில், “அப்படிப்பட்ட அந்தத் தோட்டமே வேண்டாம் போ!” அவ்வளவுதான். மிக எளிதான தீர்மானம்.

இந்த உதாரணத்தை செயல்படுத்தினால் நமக்கெல்லாம் சொத்தென்று சல்லிக்காசு மிஞ்சுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களோ ஒவ்வொரு நாளும் வாழ்ந்து மீந்த சொச்ச நேரத்தில் குனிந்து விழுந்து நிமிர்வதல்ல தொழுகை; அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ரலியல்லாஹு அன்ஹும்.

தொழுகை மட்டுமல்ல, அபூதல்ஹா நோற்ற நோன்புகளும் அலாதியானவை. வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின்படி அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு முன்னர் பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டதால் நோற்க முடியாமல்போன ஸுன்னத்தான நோன்புகளை நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இரு பெருநாள்கள் தவிர ஓராண்டின் பெரும்பாலான நாட்களிலும் அவர் நோன்பிருந்திருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.

தள்ளாத வயதை அடைந்த பின்னரும் இறைவனின் பாதையில் போரிடுவதை அவர் விடவில்லை.  வெகுதொலைவிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பிரயாசையுடன் பிரயாணித்து இஸ்லாமியப் பிரச்சாரம் புரிவது, அல்லாஹ்வின் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவிப்பது, அறப்போர் புரிவது என்று ஓய்வு ஒழிச்சலின்றித்தான் தொடர்ந்து கொண்டிருந்தது அவரது வாழ்க்கை.

oOo

இந்நிலையில்தான் மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டிய படையெடுப்பிற்கு அழைப்பு வந்தபோது மகன்களின் பாசத் தடையை மீறிக் கிளம்பிவிட்டார் அவர். கடலில் முன்னேறிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. அப்பொழுது அபூதல்ஹாவை வந்துத் தழுவியது நோய்!. வயோதிகம்; நடுக்கடல் என்பதால் பெரிய அளவில் சிகிச்சை ஏதும் அளிக்க இயலாத நிலை; பிரயாணத்தின் கடுமை வேறு. அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து இறுதியில் இறைவனின் பாதையில் தமது 51ஆவது வயதில் மரணமடைந்தார் அபூதல்ஹா.

முஸ்லிம்கள், அவரை நல்லடக்கம் செய்ய அருகில் ஏதும் நிலம் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் தீவு ஒன்று தென்பட்டது. ஆனால் அதற்குள் ஏழு நாட்கள் கழிந்துவிட்டன. அந்த அத்தனை நாட்களும், கப்பலில் இருந்த அவரது உடல், அப்படியே உறங்கிக் கொண்டிருப்பவரைப் போல், கெடாமல் பத்திரமாக இருந்துள்ளது!

யார் அவர்? அல்லாஹ் பொருந்திக் கொண்டவருள் ஒருவர்! வேறென்ன வேண்டும்?

நடுக் கடலில், மதீனாவை விட்டு வெகு தொலைவிலுள்ள ஏதோ ஒரு தீவில், குடும்பத்தினர் தோழர்கள் அனைவரையும் விட்டு தூரமாய், நல்லடக்கம் செய்யப் பெற்றார் அபூதல்ஹா. அவரது நல்லுடலை தன்னந்தனியாய் எங்கோ விட்டுவரும் கவலை யாருக்கும் ஏற்படவேயில்லை. அல்லாஹ்விற்கு நெருக்கமாகிவிட்டபின் ஊரென்ன, தொலைவென்ன?

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

< தோழர்கள்-8 | தோழர்கள்-9 | தோழர்கள்-10 | தோழர்கள்-11 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.