அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

Share this:

கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளின் முகத்தையும், வேர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த ஆவணப்படம். 2002 குஜராத் வன்முறைகளையும், அதன் பின்னணியில் உருவேற்றிய ‘வெறுப்பின் அரசியலால்’ விளைந்த வெற்றியையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தில் ஆராய்கிறது.


Final solution என்னும் இந்த வார்த்தைகள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவே நடுங்க வைத்தவை. யூதர்களைக் கொல்வதே ஜெர்மனியின் சாபவிமோசனம் என்று நியாயம் கற்பித்து, இரத்தவெறி பிடித்த ஹிட்லரின் மூளையில் முளைத்த வார்த்தைகள். இலட்சக்கணக்கில் யூதர்களை உயிரோடு புதைத்த மரணக்குழிகளை மூடிய மண்ணில் பிணவாடையோடு அழுகிப்போன வார்த்தைகள். அங்கிருந்து இந்துத்துவா சக்திகள் எடுத்துவந்த ஒரு பிடி மண், காந்தி பிறந்த பூமியை உருக்குலைத்து போட்ட வரலாற்று பயங்கரவாதத்தை நேர்மையோடு பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். தீராத வலியும், ஆறாத வடுக்களும் கொண்ட மனிதர்களின் உரையாடல்களிலிருந்து பார்வையாளனை ஓர் இறுதி முடிவுக்கு (final solution ) அழைத்துச் செல்வதே இந்தப்படத்தின் நோக்கமாயிருக்கிறது. யார் மீதும் வன்மங்களை விதைக்காமல், ஐயோ இனி இது போல நிகழவேக்கூடாது என்று கதறவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதாக் கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை கொண்டாடுகிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. வாகனங்கள் அலறும் சத்தத்தின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் “பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி” என்கிறான். “கடவுளுக்கு நன்றி…முஸ்லீம் தாய்களை புணருங்கள்” என்கிறான் பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன். இன்னொருத்தன் கல்லெறிகிறான். காரின் கண்ணாடி உடைகிறது. காட்சி மங்கி, சில மாதங்களுக்கு முன்பு இருந்த குஜராத்துக்குள் நுழைகிறது.

கிண்டர் கார்டனில் படித்துக் கொண்டிருக்கும் இஜாஸ் நம்மோடு பேசுகிறான். தாயையும், தந்தையையும் கொன்று, அன்பும், பாசமும் மிக்க தன் சகோதரியை கண்முன்னால் நிர்வாணப்படுத்தி கூட்டம் கூட்டமாய் சிதைத்த கொடுமைகளை பார்த்தவன் அவன். 1992ல் அயோத்தியில் 450 வருட பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்படுவதும், இந்துத்துவா அரசியல் முன்னுக்கு வருவதும், 2002 பிப்ரவரி 27ம் தேதி, அயோத்திக்குச் சென்று வந்த கரசேவகர்கள் வந்த ரெயில் பெட்டி கோத்ராவில் எரிந்து போவதும், அதிலிருந்து பற்றிய தீ குஜராத்தில் மூஸ்லீம் வீடுகளின் மீது பற்றிக்கொள்வதும் சொல்லப்படுகிறது. காகங்கள் பறக்கும் வானத்துக்கு அடியில் சொந்த தேசத்திற்குள்ளேயே அகதிகளாகிப்போன மனிதர்கள் குடியிருக்கும் முகாம்கள் காட்டப்படுகின்றன. முகங்கள் வெட்டப்பட்ட குழந்தைகள். கந்தலாகிப்போன பெண்கள். சர்வமும் வற்றிப்போன கண்கள். இழந்த வாழ்க்கையை அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். நெருப்பும், வாளும், மிருகத்தனமும் குதறிப்போட்ட கதைகள் அவை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தாங்க முடியாமல் இருக்கின்றன. அனுபவித்தவர்கள் அவர்கள். சூன்யத்தில் புதைந்த முகங்கள் நம்மை பரிதவிக்க வைக்கின்றன.

குல்பர்க் சொஸைட்டியில் 49 பேருக்கும் மேலே கொல்லப்பட்ட சம்பவம், தீப்பிடித்த சுவர்களின் வழியாக சொல்லப்படுகிறது. துதேஷ்வர் மயானத்தில் ஊதுபத்தி புகையோடு கைவிரித்து, நேற்றுவரை கூட இருந்த மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். டெம்போக்களில் கொண்டு வந்து கொட்டிய கருகிய மனித உடல்கள் கொஞ்சம் சதையும், மீதி எலும்புகளுமாய் இருந்தன என்று மரணக்குழி தோண்டியவன் சொல்கிறான். டெலோல் கிராமத்தை சேர்ந்த சுல்தானா சிதைக்கப்பட்ட இடம் வயல்வெளி தாண்டி காட்டப்படுகிறது. அந்த பயங்கரத்தை செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார்கள் என்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்த மரங்கள் காற்றில் கதறுகின்றன. அழகிய தன் பெண்கள் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் நேர்ந்ததை தாய் சொல்கிறாள். பஞ்ச்மஹாலில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பிணங்கள் வந்து கொட்டப்பட்ட கிணற்றை காண்பிக்கிறார்கள். வார்த்தைகளும், காட்சிகளும் இரக்கமற்ற உண்மைகளாக நீண்டுகொண்டே இருக்கின்றன.

‘அதெல்லாம் உண்மையில்லை’ என மிகச் சாதாரணமாகச் சொல்கிறார்கள் பாட்டியாலாவில் வசிக்கும் பொட்டு வைத்த பவானி என்னும் பெண்ணும் அவள் சகோதரியும். “கோத்ராதான் உண்மை, இதெல்லாம் இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் திரித்து எழுதுபவை” என்கிறார்கள் அவர்கள். “எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா, டாக்டர்கள் ரிப்போர்ட் இருக்கிறதா?” என்று கேட்கிறார்கள். அந்தப் பெண்ணின் சகோதரன் கலவரத்தில் ஈடுபட்டதற்கு பொய்யாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். உண்மைகளும் அடையாளமற்று சிதைந்து போயிருப்பது பார்வையாளனுக்கு இயல்பாக உணரவைக்கப்படுகிறது. இதெல்லாம் அப்போது ஜனாதிபதி ஆட்சி அமல்செய்யப்பட்ட குஜாரத்தின் சொரூபமாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் தேர்தல் வருகிறது. மோடி கனத்த குரலில் பேசும் காட்சியில் கூட்டம் ஆரவாரிக்கிறது. “அவர்கள் 60 பேரைக் கொன்றர்களா, இல்லையா” என்று மோடி கேள்வி கேட்க, கூட்டம் “ஆம், கொன்றர்கள்” என்கிறது. “நாம் அவர்களைக் கொன்றோமா?” அடுத்த கேள்வி. “இல்லை” என்று பெரும் சத்தம்.”நாம் அவர்கள் கடைகளுக்கு தீ வைத்தோமா?”. “இல்லை”. “நாம் யாரையாவது கற்பழித்தோமா?”. “இல்லை”. “ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்” என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது. “நாம் தீவீரவாதிகளா” என்று கேள்வி. கூட்டம் “இல்லை” என்கிறது. “நாம் தீவீரவாதிகளானால்…” என்று நிறுத்தி, “பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது” என்று முடிக்கவும் கூட்டம் பொங்கி எழுகிறது. விரல்நுனி வரைக்கும் மதவெறியையும், விஷத்தையும் ஏற்றுகிற மோசடி வித்தையின் அரசியல் அதிர வைக்கிறது. தொகாடியா பேசுவது, ஆக்ரோஷத்தோடு “நமது பெருமைகள் மீட்கும் நேரமிது” என்று ஆச்சார்யா தர்மேந்திரா பேசுவது எல்லாம் தீயின் நாக்குகளாக சடசடக்கின்றன. இன்னொருபுறம் மசூதியில் அமைதியாக மண்டியிட்டு “குஜராத்தில் அமைதியும், நிம்மதியும் தரும் ஆட்சி வரட்டும்” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் கூட்டத்தில் ஆர்வமற்ற பார்வையாளர்களே மிஞ்சுகிறார்கள். வெறுப்பை விதைத்து, அதிகாரத்தை அறுவடை செய்கிற காரியம் நிறைவேறி விடுகிறது. ஆயிரமாயிரம் மூஸ்லீம் தலைகள் வீழ்ந்திருக்க, மோடியின் பக்கமே ‘குஜராத் ஜனநாயகம்’ பூவாய் விழுகிறது.

படத்தில் இந்து, மூஸ்லீம் கருத்தாக்கங்கள் குறித்த தர்க்கங்கள் பிரச்சினைகளோடு மேலெழுந்து வருகின்றன. ஆனால் இரண்டு சிறுவர்களின் பேட்டிகள் மொத்தப் படத்தின் நோக்கத்தை அதன் போக்கில் பதிவு செய்துவிடுகின்றன. பஞ்ச்சல் என்னும் சிறுமி. டாக்டராக வேண்டும் என்னும் கனவு இருக்கிறது. அவளது தாய் கோத்ரா ரெயிலில் தீயில் கருகிப் போனவள். “கரசேவகராக அம்மா போகவில்லை. அம்மாவின் படத்தை வாங்கி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பலியான கரசேவகராக வைத்திருக்கிறர்கள்” என்னும் உண்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு மூஸ்லீம் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களோடு அன்பாக பழகுவதாகவும் சொல்கிறாள்.

அடுத்து இஜாஸ். படத்தின் ஆரம்பத்தில் பேசிய அந்தச் சிறுவன் மீண்டும் வருகிறான். “நீ என்னவாகப் போகிறாய்” என்று அவனிடம் கேள்வி கேட்கப்படுகிறது. ‘இராணுவ வீரனாக வேண்டும்” என்று இஜாஸ் சொல்கிறான். “எதற்கு இராணுவ வீரனாக ஆசைப்படுகிறாய்?” என்று அடுத்த கேள்வி. “இந்துக்களை கொல்வேன்”. “ஏன் கொல்வாய்?’ “அவர்கள் எங்களை அழித்தார்கள்” “நான் இந்துதான்.என்னைக் கொல்வாயா?” “இல்லை… மாட்டேன்.” “ஏன்?..நானும் இந்துதான்.” “இல்லை.நீங்கள் இந்து இல்லை…அவர்கள்தான் இந்துக்கள்”. படம் இந்தப் பதிலோடு முடிவடைகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும், சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நுட்பமாக உணர்த்தியதோடு, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்வதில்தான் அன்பும், நேசமும் மலர முடியும் என்பதையும் இறுதி முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

குஜராத் கலவரம் என்பது மிகத் திட்டமிடப்பட்ட, இனப்படுகொலை என்பதை பதற்றம் தொற்றிக்கொள்ள படம் சித்தரிக்கிறது. கலவர நேரத்தில் காமிரா அலைந்து திரிகிறது. இரண்டாயிரம் பேருக்கு மேல் ஆயுதங்களோடு திரண்டு வரும் வெறியர்களின் கூட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. போலீஸும், கலவரக்காரர்களும் சேர்ந்து தாக்கும் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கலவரக்காரர்கள் மொபைல் போன்களோடும், வாக்காளர் அட்டைகளோடும் வந்து தாக்கியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களை அடையாளம் தெரியாமல் சிதைக்கும் நோக்கத்தோடு மொத்த தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதை புரிய வைக்கிறது. உயிரைப் பயணம் வைத்து, உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல துணிந்திருக்கும் படப்பிடிப்புக் குழுவினர், வகுப்புவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேசத்தையும், இந்த மக்களையும், மக்களின் ஒற்றுமையையும் நேசிப்பவர்களால்தான் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புமிக்க காரியங்களைச் செய்ய முடியும்.

ஆனந்த் பட்வர்த்தனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகேஷ் சர்மா இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். மதவெறி சாதாரண மனிதர்களின் மூளைகளுக்குள் இரத்த தாகத்தோடு எப்படி பதுங்கி இருக்கிறது என்பதை இயக்குனர் அடையாளம் காட்டியிருக்கிறார். நேர்த்தியான ஒலிப்பதிவு, துணிச்சல் மிக்க ஓளிப்பதிவோடு இயக்குனரின் மனிதாபிமானமிக்க பார்வையும் சேர்ந்து ஆவணப்படத்தை சமகாலத்தின் மிக முக்கியமான பதிவாக நிறுத்தியிருக்கிறது. பேட்டி எடுப்பவரின் கேள்விகள் ஒன்றிரண்டு வார்த்தைகளிலேயே அசீரீரி போல ஒலித்து, படத்தில் பேசிக்கொண்டு இருப்பவர்களையும், பார்வையாளர்களையும் நகர்த்துகின்றன. மனவெளியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டு, அவைகளில் சிக்காமல் மிகக் கவனமாக செல்கிற உத்தி, இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம்.

பா.ஜ.க மத்தியில் ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுக்கவில்லை. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அயல்நாட்டுப் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையாயிருப்பதில்லை. அப்படியிருக்கும்போது இந்தியப்படங்களுக்கு மட்டும் ஏன் இந்த தணிக்கைச் சான்றிதழ் என்று கேட்டும், குஜராத்தில் மதவெறியைத் தூண்டும் படம் விஸ்வ ஹிந்து பரிஷத்தினால் தயாரிக்கப்பட்டு எந்த தடையுமில்லாமல் திரையிடப்பட்டதை குறிப்பிட்டும், ஒரு போராட்டத்தை ராகேஷ் சர்மா துணிச்சலாக நடத்தியிருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழா நடந்த அதே இடத்திற்கு எதிரே இன்னொரு இடத்தில் ‘சுதந்திரத்திற்கான திரைப்படம்’ (film for freedom) என்னும் அமைப்பினர் தடையை மீறி திரையிட்டு இருக்கின்றனர். மாற்று சினிமாவுக்கான, மக்களின் சினிமாவுக்கான கலகக்குரலை எழுப்பிய முக்கியமான படமாக final solution இருக்கிறது. மதத்தின் பேரால் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய அவர்களால் உண்மையை மட்டும் அழிக்கவே முடியவில்லை என்பதை இந்த ஆவணப்படம் உணர்த்துகிறது.

எல்லாம் முடிந்து போனதாய் வானம் பார்த்து கதறுகிற மனிதர்களின் குரல்கள் படம் முடிந்த பிறகும் நமக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அழிவுகளிலிருந்து மீள்வதற்கு வழியைத் தேடித் தேடிப் பார்க்கிற படம் இது.

பிற்சேர்க்கை: இந்தப் படத்தின் தொடர்பு கேட்டு mraja1961 எழுதிய பின்னூட்டத்திற்கு நண்பர் ajinomotto அதற்கான தொடர்பை கொடுத்து பின்னூட்டம் அளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

{google}3829364588351777769{/google}

நன்றி: திரு. மாதவராஜ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.