படம் பிடித்து பகிரங்கப்படுத்திய காட்டுமிராண்டித்தனம்!

லெப்டினென்ட் முஆத் அல் கசியாஸ்பே என்ற ஜோர்டன் விமானியை உயிருடன் கொளுத்திய கொடூரச் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. இது இஸ்லாத்துக்கு விரோதமான ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

எந்தவொரு காரணத்துக்காகவும் மனிதர்களையோ பறவைகள், மிருகங்கள் மற்றும் எறும்பு போன்ற சின்னஞ்சிறு படைப்புகளையோ உயிருடன் எரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.  

இப்னு மஸ்வூத் என்ற நபித் தோழர் தெரிவிக்கிறார்: ஒருமுறை நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நாங்கள் பயணத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது குருவி வகை தாய் பறவை ஒன்று தனது குஞ்சுகளுடன் இருப்பதைக் கண்டோம். நாங்கள் குஞ்சுகளை எடுத்துக்கொண்டோம். தாய் பறவை இதனைப் பார்த்து அலறியது. அப்போது நபிகளார் அங்கே வந்து ‘குஞ்சுகளைப் பறித்துக்கொண்டு இந்தப் பறவைக்கு துன்பத்தை விளைவித்தது யார்? குஞ்சுகளைத் தாயிடம் ஒப்படையுங்கள்’ என்று கட்டளையிட்டார். நாங்கள் எரித்த எறும்பு புற்று ஒன்றையும் அந்தப் பயணத்தின்போது நபி பார்த்தார்கள். ‘இதனை எரித்தது யார்?’ என்று கேட்டார்கள். ‘நாங்கள்தான்’ என்று  பதிலளித்தோம். அப்போது நபி அவர்கள் ‘நெருப்பின் அதிபதியை தவிர வேறு யாரும் வேறு எவரையும் இதுபோல் தண்டிக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தினார்கள்.

(அபூதாவூத்) இறைவன் திருக்குர்ஆனில்: ”நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும்விட அவர்களை (மனிதர்களை) மேன்மைப்படுத்தினோம்’ (17:70) என்று கூறுகின்றான்.

இறைவனின் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பான மனிதனை உயிருடன் கொல்வது மனிதனுக்கு இறைவன் அளித்துள்ள கண்ணியத்தை சிறுமைப்படுத்துவதாகும். ஜோர்டான் நாட்டு விமானியை உயிருடன் கொளுத்தி, அந்தக் காட்சியை காணொளியாகப் பரப்பியதும், இதே போல் பணம் கேட்டு மிரட்டி இரண்டு அப்பாவி ஜப்பானியர்களை கழுத்தறுத்துக் கொன்றதும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இறைவனுக்கு எதிரான, அண்ணல் நபி அவர்களுக்கு எதிரான, மனித குலத்துக்கு எதிரான, கொடுஞ்செயல்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் நடவடிக்​கைகள் மூலம் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டுக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். இஸ்லாமிய அரசு என்று தங்களுக்குத் தாங்களே அவர்கள் பெயர் சூட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வது அண்ணல் நபி அவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள். அப்படியெனில், அவர்களது வழிகாட்டிகள் யாராக இருக்க முடியும்?

2004-ல் ஈராக்கில் உள்ள பலுஜாவில் வாழ்ந்த மக்கள் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெள்ளை பாஸ்பரஸ் உட்பட ரசாயனம் கலந்த  நெருப்பு மழை குண்டுகளை பொழிந்து ஆயிரக்கணக்கான ஈராக்கின் குடிமக்களைக் கொன்று குவித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகள் நடத்தி வரும் கொடூரங்களைப் போன்றதுதானே இந்த காட்டுமிராண்டித் தாக்குதலும்? நாபாம் என்ற தீ பிழம்புகளை ஏற்படுத்தும் குண்டுகளுக்கு இணையான நெருப்பு மூட்டும் மார்க் 77 போன்ற தடை செய்யப்பட்ட குண்டுகளை சதாம் கால்வாய் மற்றும் டைகிரீஸ் ஆற்றின் அருகே தாங்கள் பயன்படுத்தியதாக அமெரிக்க தளபதிகள் பிறகு ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை உருவாக்கி இஸ்லாத்தின் சிறப்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் சதித்திட்டத்தை நடைமுறைப்​படுத்தியிருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழிமுறைகளைத்தான் அந்தக் காட்டுமிராண்டி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் பின்பற்றியுள்ளது. கூண்டில் விமானியை அடைத்து, அவரை நெருப்​பிட்டார்கள் அந்த பயங்கரவாதிகள். அமெரிக்காவும் இஸ்ரேலும் நவீன குண்டுகள் மூலம் தீ மழையைப் பொழிய வைத்து அப்பாவி மக்களை ஹிரோசிமா, நாகாசாகி தொடங்கி இன்று வரை அந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் தனது காட்டுமிராண்டிச் செயலை படம் பிடித்து பகிரங்கப்படுத்தி இஸ்லாத்தைக் களங்கப்படுத்த முயன்று வருகின்றது. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பயங்கரவாதச் செயல்களை மூடி மறைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

பன்னாட்டு நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து மனிதர்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவிப்பதில் அபூபக்கர் பக்தாதியும், பராக் ஒபாமாவும், பெஞ்சமின் நெட்டன்யாஹீமும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கிறார்கள். அதனால்தான் நாம் சொல்கிறோம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு வழிகாட்டி, இறைத்தூதர் முஹம்மது நபி அல்ல; ஒபாமாவும்   நெட்டன்யாஹீமும்தான்.

– ஜுனியர் விகடன் (18-02-2015)