ராணுவ ரகசியங்கள் கசிவு!
அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பஹல்காம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பூங்காக்கள் மூடப்பட்டன.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு நாடே பதற்றம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய சூரஜ் மற்றும் பாலக் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள், அமிர்தரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட தகவல்களை, பாலக் ஷெர் மாஸி மற்றும் சூரஜ் மாஸி ஆகிய இருவர் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தகவல்.