ஊன தினம்!

ரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்…
காதலர் தினம் – ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த
கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!

காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்…
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!

கலவியென்று களித்தது
கற்காலக் காதல்…
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்
கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்
அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே
எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?

காதலர்தினம் எனும்
கண்றாவிப் புறக்கணிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு
இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்…
கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி!

– சபீர்

தொடர்புடைய பிற ஆக்கங்கள்:

பிப்ரவரி 14 – ஆபாசதினம்!
http://www.satyamargam.com/articles/common/february-14/ ‎