பொய் சத்தியம் செய்துவிட்டால் …

ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நான் மீற முடியாத காரணத்தினால் குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்து விட்டேன். இதை நினைத்து தினமும் மனது கவலை அடைகின்றது. அல்லாஹ் இந்தப் பெரும் பாவத்தை மன்னிப்பானா? இல்லை, இதற்கு ஏதும் பிரார்த்தனை இருக்கிறதா?

– சகோதரர் jainulabadheen

தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன், நன்கறிந்தவன்.

உங்கள் சத்தியங்களுள் வீணானவற்றுக்கு அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும், உங்கள் உள்ள(உறுதியுடன் நீ)ங்கள் செய்த(சத்தியத்)துக்காக அவன் உங்களைக் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத்தன்மை உடையவன் (அல்குர்ஆன் 2:224-225).

“சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்கள் – புகாரி 3836, முஸ்லிம் 3383, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).

அல்லாஹ்வைத் தவிர வேறு எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்தல் கூடாது! அதனால் குர்ஆன் மீது சத்தியம் செய்தல் இஸ்லாத்திற்கு முரணாகும். மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதும் நன்மை செய்வதற்கும், இறைவனை அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இதுபோன்ற நன்மையானவற்றுக்குத் தடையாகவும் இருக்கக்கூடாது. அதாவது, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இனிமேல் நல்லறங்கள் செய்யமாட்டேன்” என்றோ, “அல்லாஹ்வை அஞ்சி வாழமாட்டேன்” என்றோ “பிணங்கிக் கொண்டவர்களிடையே இணக்கம் ஏற்படுத்த மாட்டேன்” என்றோ சத்தியம் செய்யலாகாது.

வீணான, உறுதிப்படுத்திட முடியாத, எதற்கெடுத்தாலும் வெற்று வார்த்தையாகச் சொல்லப்படும் அர்த்தமற்ற ‘வல்லாஹி’ சத்தியங்களுக்காக அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை. உள்ளத்தில் திட்டமிட்டு, பிறரை மோசடி செய்யும் நோக்குடன் சத்தியம் செய்வதை அல்லாஹ் குற்றம் பிடிப்பான், தண்டிப்பான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து விளங்கலாம்.

பொய் சத்தியம் செய்தல்

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை?” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “இறைவனுக்கு இணை கற்பிப்பது” என்றார்கள். அவர், “பிறகு எது?” என்றார். நபி(ஸல்) அவர்கள், “பிறகு தாய் தந்தையரின் மனத்தைப் புண்படுத்துவது” என்றார்கள். அவர், “பிறகு எது?” எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், “பொய் சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது” என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) (நூல்கள் – புகாரி 6920, திர்மிதீ, நஸயீ, அஹ்மத், தாரிமீ).

புகாரி 6675வது ஹதீஸில் பெரும் பாவங்களில் ஒன்றாக ”கொலை செய்வது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொய் சத்தியம் செய்வதைப் பெரும் பாவங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது இஸ்லாம்.

 

  1. இறைவனுக்கு இணை கற்பித்தல்

  2. பெற்றோரைத் துன்புறுத்தல்

  3. கொலை செய்தல்

  4. பொய் சத்தியம் செய்தல்

ஆக, இறைவனுக்கு இணை கற்பித்தலும் பொய் சத்தியம் செய்வதும் சம குற்றமாகக் கருதப்படும் என்பது தெளிவு. பொய் சத்தியம் செய்வது இந்த அளவுக்குக் கடுமையான குற்றமா? என்பதை ஆய்வுசெய்தால், தனக்கு உரிமையில்லாத, பிறரின் பொருளை அபகரிப்பதற்காகப் பொய் சத்தியம் செய்வது கடுமையான குற்றம் என்பது புலனாகும்! அதாவது, திட்டமிட்டு மோசடி செய்யும் உள்நோக்கத்துடன் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்யப்படுவதால் இக்குற்றத்திற்கு இணை வைத்தலுக்கு இணையான தண்டனை வழங்கப்படும்!

பிறரை மோசடி செய்வதற்காகப் பொய் சத்தியம் செய்வது குறித்து அநேக அறிவிப்புகள் எச்சரிக்கின்றன. எல்லாமே கருத்து ஒன்றுதான் என்பதால் விரிவஞ்சித் தவிர்த்துள்ளோம்.

பொய் சத்தியத்திற்கான பரிகாரம் என்ன?

அறிந்தும், அறியாமலும் செய்யும் தவறுகளுக்காக வருந்தி, பின்னர் அதிலிருந்து விலகிக்கொள்வதே இதற்கான பரிகாரமாகும். பொய் சத்தியம் செய்து, அந்த சத்தியத்தால் சொல்லாலும் செயலாலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கி அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீளுவதே பரிகாரமாகும்!

யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 4860, முஸ்லிம் 3384, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

இறைவனுக்கு இணை கற்பித்தல் கூடாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! ஓரிறைக் கொள்கைக்கு எதிராகச் சொல்லும் செயலும் இருந்தால், ”லாயிலாஹா இல்லல்லாஹ்” எனக் கூறி, ஏக இறைவனை நினைவு கூர்ந்து அந்தப் பாவத்திலிருந்து விலகி மீண்டும் அத்தவறைச் செய்யாமல் உறுதியுடன் இருப்பதே இணை கற்பித்தலுக்கான பரிகாரமாகும்.

பெற்றோரைத் துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகிய பாவங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து திருந்திக்கொள்வதே பரிகாரமாகும்!

கேள்வியில் கேட்டுள்ளபடி குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்தது முரண் என்றாலும், பொய் சத்தியத்தால் சம்பந்தப்பட்டவர் எவ்வகையில் பாதிக்கப்பட்டார் என்பதை நீங்களே அறிவீர்கள்! அதை அறிந்து அதற்கான பரிகாரம் செய்திடுக! மீண்டும் பொய் சத்தியம் செய்வதிலிருந்து விலகிக்கொள்க!

அல்லாஹ் அனைத்தையும் மன்னிப்பவன்; பெரும் கருணையாளன்!

(இறைவன் மிக்க அறிந்தவன்).