அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும்.
அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை.
ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? – அதுவுமில்லை!
ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம்.
எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள்.
உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள்.
பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன்.
"அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள்.
இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர்கள் தந்தது கொள்ளிக்கட்டையும் கள்ளிப்பாலும்.
"அடிக்கும் கை அணைக்கும்" என்றான்.
அம்மா அடித்தாள்; அழுதேன் அணைத்தாள்.
அப்பா சினத்தார்; அழுதேன் அணைத்தார்.
பன்னாட்டுப் பரதேசிகள் அடிக்கின்றார்கள் அத்துடன் அணைக்கவும் செய்கின்றார்கள் எம் கனவுகளை.
பத்துகாசு பட்டாசை பயந்திருந்தோம் ஒருநாளில்; பத்தடியை தாண்டி நின்று பத்த வைத்தோம் அந்நாளில்.
ஆனால் இந்த பத்தாம் பசலிகள் பொத்தென்று வீசுவதன் சத்தத்தால் மட்டுமே செத்துவிட்டோம் நித்தம் நித்தம்.
பின்லாதின், பதினொன்று, செப்டம்பர், அல்காயிதா – என்றேன். ஏதேனும் புரிந்ததா உங்களுக்கு? புலம்பல் மட்டும் தான்.
ஆனால் இதையே ஜார்ஜ் புஷ் அல்லது டோனி பிளேர் சொல்லிவிட்டால் கைக்கொட்டி மகிழ்வார்கள் இந்த சண்டாளச் சகோதரர்கள்.
தீவிரவாதம் மட்டும் தான் தீவிரமாய் வாதிக்கப்படுகின்றது. இவன்களின் பயங்கரவாதங்களோ பவ்யமாய் வாசிக்கப்படுகின்றது.
இவன்களின் இப்போதைய சொல்-செயல்கள் வெறும் கேள்விகள் தான்!
இதற்கான பதிலை எம் இறைவன் தந்து விடுவான்.
அதுவரை பிறருக்காக நான் அழுகிறேன், கொஞ்சம் கண்ணீர் இரவல் தாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு தங்கச்சி.
(மின்னஞ்சலில் வந்த ஒரு கவிதை)