உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 29, 2014 (ஞாயிறு) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இறையாணை பெற்றிங்கே இஸ்லாமின் உயர்நெறிகள்
முறையான உள்ளச்சம்; முகிழ்க்கின்ற நற்பயிற்சி
மறைஞானம் அளித்துநல்ல மனக்கட்டு செய்துவைக்க
நிறைவான ரமளானே நீவந்தாய்; மகிழுவமே!
மலர்கின்றாய் வானத்தில்; மனமெல்லாம் ஞானத்தில்!
உளமொன்றி வணக்கங்கள்; உலகெங்கும் இணக்கங்கள்
பலங்கொள்ளும் மேன்மக்கள்; பண்புநிறை ஆன்மாக்கள்
வளங்கூட்டச் செய்வதிலே உயர்வெற்றி வாழ்விதிலே!
வழிகாட்டும் வான்மறையை வாழ்வினிலே பிணைத்துவிட
பழிபாவம் தவிர்ந்திடுதே! பசிதாகம் தவிப்பிலையே!
விழிப்பாகும் இதயந்தான் உண்மைக்குக் கண்திறக்க
அழுக்கெல்லாம் எரிகிறதே! ஆன்மாவும் ஒளிர்ந்திடுதே!
மண்ணிதிலே நடப்பெல்லாம் மாநபிகள் கடந்தபடி!
கண்துயிலும் போதினிலும் செவிமடுப்போம் போதனைகள்.
எண்ணமது சிறந்துவிடின் எல்லாமே சிறந்துவிடும்
விண்ணகமே எம்மிலக்கு; உலகமிது ஓர்களமே!
கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
இறைமறை அருளப்பட்ட இப்புனித மாதத்தில் நல்லறங்கள் பல புரிந்து அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.