சிறை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் பெண்மணிக்கு வெற்றி!

தென் ஆப்ரிக்காவில்  ஹிஜாப் அணிந்ததன் பெயரில் வேலை நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணிக்கு மீண்டும் வேலை நியமனம் அளிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிந்து வேலைக்கு வந்ததைக் காரணம் காட்டி வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு ஹிஜாப் அணிந்து மீண்டும் வேலையில் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா கேப் டவுண் நகரத்திலுள்ள வேல்ஸஸ்டர் சிறைச்சாலையில் பணியாளராக இருந்தவர் ஃபைரூஸ் ஆதம்ஷா(37). இவர் பணிக்கு ஹிஜாப் அணிந்து வந்ததைத் தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகம் இவரை பணியிலிருந்து நீக்கியது. இதனை எதிர்த்து இவர் தாக்கல் செய்த வழக்கிற்கு நீதிமன்ற தீர்ப்பு வரவிருக்கவே இவருடைய வழக்கை ஏற்று நடத்தும் முஸ்லிம் வழக்காடு குழு (Judicial Council) விடம் சிறைத்துறை இவரை பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து சம்பளம் கொடுத்து அவரை பணியில் திரும்ப சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தது.

ஃபைரூஸை 2005 ஆம் ஆண்டு ஹிஜாபை காரணம் காட்டி பணியிலிருந்து சிறை நிர்வாகம் நீக்கியிருந்தது. இதனை எதிர்த்து ஃபைரூஸ் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் ஃபைரூஸிற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அஞ்சிய சிறைத் துறை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு வெளியே இப்பிரச்சினையை முடித்துக் கொள்ள முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணிக்கு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவிக்கும் நிறுவனங்களின் எண்ணம் தவிடுபொடியானது.

ஃபைரூஸுக்கும் தென் ஆப்பிரிக்கா சிறைத்துறைக்கும் இடையிலுள்ள இவ்வழக்கு தென் ஆப்ரிக்கா முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தங்களுடைய சுய உரிமைகளை போராடிப்பெற முஸ்லிம் பெண்களுக்கு இது தன்னம்பிக்கையை வழங்கும் என்றும் முஸ்லிம் வழக்காடு குழு (Judicial Council) உறுப்பினர் நபேவியா மாலிக் கூறினார். முஸ்லிம் பெண்கள் தங்களுடைய சுய உரிமைகளை போராடிப்பெற முன்வருவதற்கு அவர்களை இது உற்சாகப்படுத்தும் என ஃபைரூஸ் தனக்கு கிடைத்த வெற்றியைக் குறித்து குறிப்பிடும் போது கூறினார்.