விடியல் ! (கவிதை)

வெள்ளி விழித் தெழ
விடிகாலை வெளிச்ச மிட
வைகறை வரவுக் கென
வழிவிட்டு இருள் நீங்க

தூக்கத்தை விடச் சிறந்தது
தொழுகை எனக் குறித்து
வணங்க வரச் சொல்லி
வாங்கொலி விளித் தழைக்க

சேவல் சிணுங்கிக் கூவ
சிறு வண்டுகள் ரீங்கரிக்க
குருவிகள் கிரீச்சிட்டு
கலந்தொரு மெட்டுக் கட்ட

அகிலத்தின் விடியல்தனை
அழகாய்ப் படைத் தமைத்த
அவனிடமே நாடிவிடு
அத்துணைப் பாதுகாப்பும்

படைத்தவனின் பரிபாலிப்பில்
பலவிதப் படைப்பினங்கள் -அவை
சொல்லிலும் செயலிலுமான
தீங்கைவிட்டும் காக்கக் கேள்!

விழியைக் குருடாக்கும்
ஒளியை அழித்தொழிக்கும்
இருள்மேவும் இராப்போதின்
தீதைவிட்டும் காக்கக் கேள்!

அன்பின் ஆற்றலறியாத
அறிவால் தேற்றவியலாத
பண்பையும் பாழாக்கி
பாசமெனப் பசப்பியும்…

சூதையும் வாதையும்
சுருக்கிட்டு முடிச்சாக்கி -அதில்
மந்திரக் காற்றூதும்
மங்கையரின் தீங்கைவிட்டும்

தன்னுழைப்பில் தானுயரா
தன்னிலையில் நிறைவடையா
தன்மையான மானுடர்தம்
தீங்கிழைக்கும் தீயதுவாம்…

பொறாமை கொள்பவரின்
பொல்லாங்குத் தீண்டாமல்
காக்கக்கேள் கையேந்தி
கருணையாளன் இறைவனிடம் !

(மூலம்: அல் குர்ஆன் சூரா 113: அல் ஃபலக்)

-Sabeer Ahmed abuShahruk