அதிர்வு!

தாங்கி நிற்கத் தளமு மின்றி
 
தொங்கிக் கொள்ள கயிறு மின்றி
 
அண்ட வெளியில் அந்தரத் தில்
 
சுழலும் பூமி அதிரும் போது

 
தன்னில் தழைத்த இயற்கை வளமும்
 
மனிதன் அமைத்த செயற்கை யாவும்
 
குளித்தக் குருவி சிலுப்பும் உடல்போல்
 
சிலிர்த்து   பூமி, உதிரும் போது
 
 
கண்டதே காட்சி கொண்டதே கோலமென
 
கண்ணால் காணாத எதையும் நம்பாத
 
மானிடன் வியந்து மனத்திலே பயந்து
 
என்ன இதுவென வினவும் போது
 
 
சிற்சில அதிர்வெனவும் சிலபல புதிரெனவும்
 
சூறைக் காற்றெனவும் சுழற்றியப் புயலெனவும்
 
எச்சரித்து வந்தபூமி நிச்சயித்து அறிவிக்கும்
 
அந்நாளைப் பற்றிய திடமானச் செய்தியை
 
 
படைத்துப் பரிபாலித்து பாதுகாப் பவனும்
 
விதைத்து விருத்தியாக்கி விளைவிப் பவனும்
 
அருளாலும் அன்பாலும் ஆள்பவனு மாகிய
 
அல்லாஹ்வின் கட்டளையே இது வென !
 
 
நம்பிக்கை யுற்றும் நம்பிக்கை யற்றும்
 
செய்வினைச் சுமையோடு சிதறுண்ட மக்கள்
 
பொய்யெனக் கருதியவை மெய்யாதல் கண்டு
 
செயலுக்கான கூலிக்காக அந்நாளில் மீள்வர்
 
 
நல்லெண்ணத் தோடு நல்லறம் செய்தோர்
 
பொல்லாச் செயற் பதிவு இல்லாத மாந்தர்
 
வல்லவன் வகுத்த வழியிலே வாழ்ந்தோர்
 
எல்லா விதத்திலும் நற்கூலி பெறுவர்
 
 
தீயவை எண்ணி தீங்கையே பண்ணி
 
தேவைக்கு ஏற்பப் பாவங்கள் செய்தோர்
 
தீமைகள் தட்டுக் கனம்கூடிப் போக
 
தீர்வாய்க் காண்பர் கொடுந் தண்டனையை!

 

(அத்தியாயம் 99 ஜில்ஜாலைத் தழுவி)

– சபீர் அபூஷாரூக்