எழு!

எந்த ஓர் இரவும்
விடியாமல் முடிவதில்லை
எந்த ஒரு வனமும்
மலராமல் உலர்வதில்லை!

புன்னகை விதைத்தவன்
பூசலை அறுத்ததில்லை
பூக்களை ரசிப்பவன்
புழுக்களைப் புசிப்பதில்லை!


காற்றின் திசை அறிந்தால்
கரை சேரத் தடையில்லை
முத்தெடுக்கக் குதிப்பவனுக்கு
முழுக் கடலும் ஆழமில்லை!

விழுவோம் என பயந்தால்
உயரம் தொட முடியாது
எழுவோம் என உணர்ந்தால்
எதுவும் தடை கிடையாது!

வகுத்த வரம்புகளுக்குள்
வாய்க்காலாய் ஊறாதே
கரைகளை வரையறுக்கும்
காட்டாறாய் ஓட்டம் காண்!

நடக்கும் வழியெல்லாம்
நன்மைகளை விதைத்துச் செல்
ஒற்றைப் பனைகூட உனக்கு
கற்றையாய் நிழல் தரும்!

விடியும் வரை காத்திருக்க
வீழ்ந்த இருளல்ல நீ
கூவித் துயிலெழுப்பி
நாள் துவக்கும் சேவல்!

இல்லாத சிறகுகளை
இப்பொழுதே விரித்துப் பற
வாய்க்காத வாழ்க்கையெலாம்
வாசல் வரும் வாரியெடு!

உன்னைச் சுற்றி யொரு
உணர் வலை மிதக்கவிடு
உன்னத எண்ணங்களா லதை
உத்தம மாக்கி விடு!

தன்னலம் பாராமல்
தொண்டுகள் நீ செய்
பிரளயம் வந்தாலும்
பிரார்த்தனைகள் உனைக்காக்கும்!

 

– சபீர்