ஈகைப் பெருநாள் வாழ்த்து


ண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்

உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்

எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்

இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே!

நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்

நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்

என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே

இறையவனை வேண்டுகின்றோம் இந்நாளில் மகிழ்வுற்றே!

 

பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை

பண்பற்ற செயலில்லை; பாவமில்லை; பேதமில்லை

மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள்

மெய்ப்புலனில் மனநலனில் மாண்புடனே மாற்றங்கள்

உய்வுற்று வாழுதற்கே ஓரிறையின் சீர்பரிசாய்

உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற வாய்ப்பதனை

வானத்தின் மீதிருந்து வழங்கிவிட்டாய் நன்றிகளே!

 

இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப் பூமணக்கும்

இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம்

இறைவனுக்கே தலைதாழும் என்கின்ற உள்ளுறுதி

யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்

மறையதனை ஓதிவர மனத்துக்குள் தாழ்திறக்கும்

மண்ணுலகில் வாழ்வதற்கு மகத்தான வழிபிறக்கும்

பிறையுதிக்கும் நன்னாளில் பரிசளிக்கும் இறையோனின்

பேரருளில் நனைகின்ற பேராவல் பூத்திருக்கும்.

 

வாய்மையுடன் இறையச்சம் வளர்க்கின்ற பயிற்சியினை

வழங்கிடுதே ரமளானும் வல்லோனின் பெருங்கருணை

தாய்மையினும் மிகைக்கின்ற தூயோனாம் அல்லாஹ்வின்

தண்ணருளை வேண்டுவமே தகுதிகளைப் பெறுவதற்கே!

தூய்மையிலே நனைகின்றோம் துல்லியமாய் நோன்பாலே

துடைத்திட்ட பளிங்காகத் துலங்கிடுதே எம்மனங்கள்.

போய்வருக ரமளானே..புத்துணர்வை அளித்துவிட்டாய்

பல்லாண்டு உனைக்காணும் பாக்கியத்தைக் கேட்போமே!

நன்றி : சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

+966 050 7891953

www.ezuthovian.blogspot.com

www.mypno.com

 

சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்களுக்கும் அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!