இராப்போது! (ஸூரத்துல் லைல்)

இராப்போது!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 92: அல்லைல்)

மையிருட்டுப் போர்வை கொண்டு
பொய்யிருட்டைச் சூழ்ந்து கொள்ளும்
இராப்போதின் மீதாணை!

நிழல் உமிழும் நிஜங்களை
நிறம் ஒளிரச் செய்கின்ற
பகற் பொழுதின் மீதாணை !

ஆணென்ற இனம் படைத்து
பெண்ணென்ற இணை கொடுத்த – எம்
ஆற்றலின் மீதாணை!

வாழ்வதற்கும் வசதிகட்கும்
வளங்களைச் சேர்ப்பதற்கும்
முயற்சிகள் ஏராளம் -உங்கள்
முன்னெடுப்புப் பலவாகும் !

எனினும் –
இறைக்கும் கேணியையே – நீர்
நிறைக்கும் என் றுணர்ந்து
இறைவனுக்கு அஞ்சி,
ஏழைகளுக் கீந்து,

நல்லெண்ணம் கொண்டு,
நற்செயல் யாவையும்
உவப்புடன் செய்கின்றாரே…

அவருக்கே இலகுவாகும்
அழகுமிகுச் சுவனம் செல்ல
ஆண்டவன் வகுத்த வழி !

நேர் எதிர் வினையாக
சேர்த்தச் செல்வங்களை
நெல்லுக்குள் அரிசியென
உள்ளுக்குள் போர்த்திவைத்து,

தனக்கும் செல வழிக்காமல்
தான தர்மம் தராமல்
இருப்பே போதும்
இறையருள் வேண்டாமென
இறுமாந்து இருப்பவர்,

நல்லன அனைத்தையும்
அல்லன எனக் கொண்டு
பொய்யவை எனக் கூறி
பிதற்றித் திரிகின்றாரே…

அவருக்கு எளிதாக
ஆண்டவன் ஆக்கிடுவான்
நாசத்தின் தலைவாயாம்
நரகத்திற் கான வழி !

அவ்வழிச் சென்று
அந் நரகில் வீழ்ந்துவிட்டால்
அவர் சேர்த்தச் செல்வங்கள்
அவருக்கே உதவாது !

அருள்மறை அளித்து
அருமை நபி அனுப்பி
அழகு மார்க்கம் தந்தது
ஆண்டவன் அன்பாகும் !

இம்மை மறுமை எனும்
ஈருலக வாழ்க்கைகளும்
இறைவன் கைகளிலே

கொடுந்தீ நிரப்பிடும்
கொழுந்துவிட் டெரியும்
நரகத்து வேதனைகள்
நமக் கறிவிக்கப்பட்டன
அச்சமூட்டி, எச்சரித்து !

தூயவர் எவருக்கும்
துயர்மிகு நரகமில்லை;
துர்ப்பாக்கிய தீயோரே
தீனியாவோர் தீநரகில்

அவர்கள்
இறைவசனம் பொய்யென்றோர்
எடுத்தியம்ப, எதிர்த் துரைத்தோர்
ஏளனமாய்ப் புறம் பேசி
முகம் திருப்பிப் புறக்கணித்தோர்

நரகத்தின் வெகு தொலைவில்
நல்வேதம் நபிமொழியும்
நம்பியோர் நிலை பெறுவர்;

அத்தகையவர் எவரென்றால்
ஈட்டியச் செல்வத்தை
இறைவழியில் ஈந்து
உளத்தூய்மை அடைந்தவராம்!

பிறருடைய உதவி பெற்ற
பிரதிபலன் கடமையேதும்
இல்லாது இருந்தபோதும்…

எல்லாம் அறிந்தவனாம்
ஏகனிறை ஆண்டவனின்
அருள்நாடி மட்டுமே
பொருள் யாவும் கொடுத்திடுவார்

மாந்தர்களால் இயலாத
மதியுடையோர் கணிக்காத
மிகைத்த அருட் கொடையால்
வெகு விரைவில் மகிழ்ந்திடுவார் !

-Sabeer Ahmed abuShahruk