விடாதே பிடி!

தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு …
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!

மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!

வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!

சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!

உச்சி  வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்

அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!

படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!

மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!


– சபீர்