இஸ்லாம், முஸ்லிம் & i Phone

திவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்:

  • இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும் வாழ்வியல் நெறிமுறை.

  • முஸ்லிம்=ஓரிறையின் வழிகாட்டல்களுக்குக் கட்டுப்பட்டு, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அறிவுரையின்படி தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்.

பரவலாக அறியப்பட்டுள்ள இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் இங்கு ஏன்?

சமீபநாட்களாக தோழர் ‘வினவு’ தளத்தில் இஸ்லாமிய அடிப்படைகளை அறிந்திராமல் எழுதப்படும் பதிவுகள் அவ்வப்போது வெளிவருவதும், அதற்கு சிலர் ஆதரவாகவும் சிலர் சிண்டுமுடியும் வகையிலும் ஆர்வக்கோளாறாய் சிலர் வக்காலத்து வாங்கும் வகையிலும் கருத்துப் போர் நடந்து வருகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவிலும் பதிவுடைய பின்னூட்டத்திலும் இஸ்லாம்-முஸ்லிம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெரியாமல் ஒருவருக்கொருவர் குழப்பிக் கொள்வதைப் பார்க்க பரிதாபமாக இருந்ததால் தோழர் வினவுக்கு உண்மைநிலையைத் தெளிவு படுத்தும் நோக்கிலேயே இந்தப் பதிவு.

முஸ்லிம்களுள் சிலர் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாத்தைச் சாடுவதும், அத்தகைய முஸ்லிம்களின் செயல்பாடுகள்தாம் இஸ்லாம் என்றும் தவறாக விளங்கிக் கொள்வதால் தோழர் வினவுக்கும் அத்தளத்தில் எழுதுவோருக்கும் இஸ்லாமிய அடிப்படை குறித்துத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

உதாரணமாக, சந்தையில் புதிதாக ஓர் ஐஃபோன் வாங்கி வருகிறீர்கள். கடைக்காரர் அதுகுறித்த செயல்முறைகளை விளக்கி, விளக்கக் கையேட்டையும் தந்தபிறகு, அவற்றில் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றாமல், நம் தவறான பயன்பாட்டால் அது பழுதடைந்துவிட்டால், அப்போது ஐஃபோனை அறிமுகப்படுத்தியவரையோ பயனர் கையேட்டையோ விற்பனை செய்தவரையோ குற்றம் சொல்ல மாட்டோம். மாறாக, அதைத் தவறாகப் பயன்படுத்தியவரையே குற்றம் சொல்வோம். இதுபோன்றே, இஸ்லாத்தையும் இறைவழிகாட்டல்களையும் சரிவர விளங்கிக்கொள்ளாமல் முஸ்லிம்கள் சிலரின் தவறான செயல்பாடுகளுக்கு இஸ்லாத்தைக் குறைசொல்வதும் நியாயமல்ல!

வினவு தளத்தில் கடந்த ஒருமாதத்தில் இஸ்லாம் குறித்த மூன்று விமர்சனப் பதிவுகளையும் தொடர்புடைய பின்னூட்டங்களையும் வாசிக்க நேர்ந்தது.

1) சவூதி ஓஜர் கம்பெனி
2) கடையநல்லூர் துராப்ஷா
3) கடிதம் மூலம் தலாக்

இதில், சவூதி ஓஜர் கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சிப்பதாகவும் அதற்கு அல்லாஹ்வும் இஸ்லாமும்தான் காரணம் என்று குற்றம்சுமத்தும் வகையிலும் ஓஜர் கம்பெனி பதிவும் கருத்தாடலும் நடந்திருந்தன. ஒருவேளை ஓஜர் நிறுவனம் சீனாவில் இருந்திருந்தால், அதற்கு புத்தரும் புத்தமதமும் காரணமாக இருந்திருக்குமோ என்னவோ? நேபாளில் அந்த நிறுவனம் இருந்து தொலைத்திருந்தால் காரணமானவரைக் கண்டுபிடிக்க வினவு என்ன செய்திருக்கும்? சவூதி என்பது (மட்டும்) அல்லாஹ்வின் தேசமல்ல என்பதும் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துவது உலகத்திலேயே ஓஜர் நிறுவனம் மட்டுமல்ல என்பதும் வினவுக்குத் தெரிந்திருந்தும் “சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்” என்று தலைப்பிலும் வெறுப்பை விதைக்கும் போக்கைப் பற்றி இனியாவது வினவுக்கு மறுசிந்தனை தேவை.

“துராப்ஷா” என்பவர், இறைத்தூதர்கள் என முஸ்லிம்கள் நம்புகின்றவர்களுள் ஒருவரான லூத் நபியைப் பற்றி இழிவுபடுத்திய ‘லூத் என்றொரு லூஸு’ எனும் பதிவொன்றைப் பகிர்ந்து கொண்டதால், அவரது கடையில் பொருட்கள் வாங்குவதை ‘முஸ்லிம்கள்’ தவிர்த்துக்கொள்ள வேண்டி அவரது ஊர் ஜமாஅத்தினர் எடுத்த முடிவுக்கு எதிரானது மற்றொரு பதிவு. (இங்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும் புரட்சிகர தோழர்கள் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல;-) துராப்ஷாவின் ஊரான கடையநல்லூர் தளத்தின் செய்தி, அவரைப் பற்றிய வினவின் இரு பதிவுகளையும் ஒன்றும் இல்லாமல் பொடியாக்கிவிட்டது. துராப்ஷா விஷயத்தில் அரைகுறைத் தகவல்களை வினவு தளம் வெளியிட்டதாக மனிதாபிமானி எனும் பதிவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

மூன்றாவது பதிவு, “கடிதம் மூலம் தலாக்” கூறியவர் தொடர்பானது! இதைச் செய்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர் என்று குற்றம் சுமத்தும் வினவு, அதனாலேயே இஸ்லாத்தில் பெண்ணுரிமை உண்டா? என்பது குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது!

இதற்கான விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு, இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கு மாறான வகையில் செயல்படுபவர் யாராக இருந்தாலும் அவர் செய்வதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்ற வகையில் அதனை வன்மையாகக் கண்டிப்போம். வினவு கூறுவது போன்று, அந்நபர் குறிப்பிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பின் அவரை அமைப்பிலிருந்து நீக்குவதோடு, மார்க்க வழிகாட்டலுக்கு மாறான வகையில் செயல்பட அமைப்பைக் கேடயமாகப் பயன்படுத்தியதற்கு அந்த அமைப்பு வழக்கும் தொடரலாம்.

இனி ஆண்/பெண் சம உரிமை குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெண்களை உயிருள்ள ஜீவன்களாகவே கருத்தில் எடுத்துக்கொள்ளாத காலகட்டத்திலேயே, ஆண்/பெண் என்று படைப்பில் எவருக்கும் எந்தவிதமான பாரபட்சத்தையும் விதைத்து விடாது அவர்தம் வாழ்வில் வெற்றிபெறத் தேவையான உரிமைகளை ஏராளமாக அள்ளித் தந்துள்ள ஒரே கோட்பாடு இஸ்லாம் மட்டுமே என்று உறுதியுடன் கூற இயலும்.

ஆண்/பெண் சமஉரிமைகள் குறித்துத் தோழர்களிடம் என்ன அளவுகோல் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால், இஸ்லாத்தைப் பொருத்தவரை ஆண்-பெண் இருவருமே சமமானவர்கள்; ஆனால் ஒன்றல்ல!

இதென்ன புதுக்கரடி? ஆம், இதை நான் சொல்லவில்லை. நவீன காலத்தில் எதற்கும் ஆதாரமாக முன்மொழியப்படும் அறிவியலும் அப்படித்தான் சொல்கிறது! ஆமாம்! Sex-determining chromosomes நியதிப்படி XX என்றால் பெண்! XY  என்றால் ஆண்! அதாவது உணர்வுகள் ரீதியில் ஆணும் பெண்ணும் சமமென்றாலும் உடற்கூறு ரீதியில் இருவரும் ஒன்றல்ல!  இதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் சொன்னதால் இஸ்லாம் பழமைவாதம் என்கிறார்கள்!! அது இருக்கட்டும், நாம் தலாக் விசயத்திற்கு வருவோம்!

முதல் பத்தியில் சொன்னதுபோல் ஓரிறையின் வழிகாட்டல்களை இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் சொன்னபடி முழுமையாகப் பின்பற்றுபவரே முஸ்லிம். தலாக் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்,

விவாகரத்து (தலாக்) செய்வதைவிட வேறுஎதையும் அல்லாஹ் மிகவும் வெறுப்புடன் அனுமதித்தது இல்லை. அதாவது விவாக ரத்தானது அல்லாஹ் அனுமதித்திருந்த போதிலும், அல்லாஹ் அதை விரும்பவில்லை” (அபூதாவுத்).

மற்ற இசங்களில் திருமணத்தை, ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்றும், ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை’ என்றும் கூறிக் கொண்டிருக்கையில், மிகமிக எதார்த்தமாக இஸ்லாம் மட்டுமே திருமணத்தை ஓர் வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகிறது. அதாவது வேண்டாத கணவனை மனைவியோ, மனைவியைக் கணவனோ, மேற்கொண்டு சேர்ந்து வாழவே முடியாத அளவுக்குத் தகுந்த காரணங்கள் இருப்பின் விவாகரத்து செய்து கொள்ளலாம். வினவு பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் கடிதத்தில், கடித தலாக் கூறிய கணவர், அதற்கு முன்னர் மனைவியிடம் நேரடியாகவும் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தம்பதியினர் கருத்து வேறுபட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் பிரிந்து வாழ்வதாகவும் எழுதப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. மேலும் கடிதம் கொடுத்தவர் மனைவிக்கு மட்டும் கொடுக்காமல் முறைப்படி ஊரறிந்து கொள்ளவேண்டி ஜமாஅத்துக்கும் சேர்த்தே கொடுத்திருக்கிறார்.

வழக்கு நீதிமன்றத்திற்கு போனால் வருடக்கணக்கில் இழுக்குமே என்று பயந்து, இந்த விலைவாசியிலும் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டிய நிலைக்கோ அல்லது கேஸ் ஸ்டவ் வெடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கோ அவசியமில்லை. அதுபோல்,கணவன் மற்றும் குடும்பத்தார்கள்மீது பொய்வழக்குப் போடவேண்டிய அவசியமோ, அல்லது அமெரிக்க பாணியில்  கேர்ள் ப்ரெண்டோடு கணவனும், பாய் ப்ரெண்டோடு மனைவியும் குடும்பம் நடத்த – அதாவது இருவரும் தனித்தனியாகக் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு, உலகின் முன்னிலையில் போலியான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை.

முஸ்லிம் கணவன் ஒருவன் விவாகரத்து நாடினால், தக்க காரணங்களுடன் பெண்ணின் பொறுப்பாளர்களையும் பெண் விவாகரத்து நாடினால் தக்க காரணங்களுடன் தன்னுடைய பொறுப்பாளர்களையும் நாடலாம். இரு தரப்பினருக்கும் இடையில் நியாயமான வகையில் தீர்ப்பினை ஜமாஅத் நிறைவேற்றிக் கொடுக்கும். இதில், வினவு பதிவில் குறிப்பிட்டுள்ளபடி கடிதம் மூலமாக “தலாக், தலாக், தலாக்” என ஏக காலத்தில் ‘முத்தலாக்’ விடுவதற்கும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அதனாலேயே இதனை ஜமாஅத் கண்டித்தும் உள்ளது. இதனைத் தோழர் வினவு தம் பதிவிலேயே குறிப்பிட்டும் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.

ஆக, ஆண்-பெண் சம உரிமையின் உச்சகட்ட உரிமைதான், ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள இஸ்லாமிய முறையிலான விவாகரத்து முறை என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

எனவே,தோழர் வினவு மற்றும் நண்பர்களுக்கு அழகான முறையில் நாம் தெளிவுறுத்த விரும்புவது என்னவென்றால், ஐஃபோனை தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டிக்கும் சாக்கில் ஐஃபோனை உருவாக்கியவரையும் பயனர் கையேட்டையும் விற்பனைப் பிரதிநிதியையும் சாடுவது நியாயமும் நேர்மையும் அல்ல.

இஸ்லாத்தைப் போற்றுவோம்; இஸ்லாமிய வாழ்க்கை நெறியைக் கடைபிடிப்பதாக கூறிக்கொண்டு, அதன் வழிமுறைக்கு மாற்றமான வகையில் செயல்படும் முஸ்லிம்களைக் கடுமையாகக் கண்டிப்பதோடு அவர்களைச் சரியான வழியில் செயல்பட வழிகாட்டுவோம்.

நன்றி!

– N. ஜமாலுத்தீன்