சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 68

Share this:

68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1)

நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட ஒரு கொத்துத் தலைமுடி. உரோமம் கண்டு உதிரம் கொதித்தது நூருத்தீனுக்கு. காரணம் கடித வாசகமும் அந்த முடியின் குறியீடும்.

“இது எம் குடும்பப் பெண்டிரின் முடி. பரங்கியரிடமிருந்து மீட்க வருமாறு அவர்கள் உங்களிடம் மன்றாடுகிறார்கள்”

இதற்குமேல் யோசிக்க எதுவும் இல்லை, தாமதமே கூடாது என்ற முடிவில், ஸலாஹுத்தீனை அழைத்து, “உடனே கிளம்பி ஹும்ஸுக்குச் செல். உன் சிற்றப்பா ஷிர்குஹ்வை தாமதிக்காமல் வரச்சொல்” என்று கட்டளையிட்டார் நூருத்தீன். ஸலாஹுத்தீன் மற்றொரு பணியாளுடன் அலெப்போவிலிருந்து கிளம்பினார். ஒரு மைல் தூரத்தைக்கூட அவர் கடக்கவில்லை. நூருத்தீனைச் சந்திக்க வேகவேகமாக வந்துகொண்டிருந்த அஸாதுத்தீன் ஷிர்குஹ்வைக் கண்டுவிட்டார். அனைவரும் நூருத்தீனைச் சந்தித்தனர்.

oOo

பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவலுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வட ஆப்பிரிக்கப் பகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசை ஜெருசலம் ராஜா அமால்ரிக்கின் மனத்தை ஒரு பக்கம் அரித்தபடி இருந்தது. குடும்ப உறவு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அந்தக் கூட்டணி எளிதாகும் என்ற திட்டத்துடன் பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவலின் உடன்பிறந்தார் மகளான மரியா காம்னெனாவைத் திருமணம் முடித்துக்கொண்டார் அமால்ரிக். மேனுவலுக்கும் ஃபாத்திமீக்களின் எகிப்தின் மீது கவனம் இருந்தே வந்தது. ‘எகிப்தின் பலவீன ஆட்சியாளர்களால் எனக்குக் கவலையும் அதிருப்தியும் ஏற்படுகின்றன. பறிப்பதற்குத் தோதாய்க் கனிந்து தொங்குகிறது அது. நூருத்தீன் எந்நேரத்திலும் அதை நோக்கி நகரக்கூடும். அதற்குள் நீயும் நானும் சேர்ந்து அவரை முந்திவிடுவோம்’ என்று ஜெருசலத்துக்கு மேனுவல் தகவலும் அனுப்பினார். டைர் நகரின் வில்லியம் பரங்கியர்களின் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர். மேனுவலிடம் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நிகழ்த்தி ஒப்பந்தம் ஏற்படுத்த அவரை (இன்றைய இஸ்த்தன்புல்) கான்ஸ்டண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார் அமால்ரிக். வில்லியமும் அங்குச் சென்று அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

ஆனால், அவர் திரும்பி வருவதற்குள் அமால்ரிக் தனியே தம் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். சக்கரவர்த்தியின் துணை இன்றித் தாமே தனியாக எகிப்தை ஆக்கிரமித்துவிட முடியும், வெற்றியடைய முடியும், சுருட்டும் செல்வங்களை மேனுவலுடன் பங்கிடும் அவசியமும் இருக்காது என்று அவருக்கு ஆசை, பேராசை, தந்திரக் கணக்கு. அவரை அதற்கு அவ்விதம் தூண்டியவர்கள் அவரது ஆலோசகர்கள்.

அலெக்ஸாந்திரியா முற்றுகை முடிவுக்கு வந்தபின் நூருத்தீனின் படை சிரியாவுக்கும் பரங்கியர் படை ஜெருசலத்திற்கும் திரும்பிவிட்ட போதிலும் கிளம்பும் முன் பரங்கியர்கள் வஸீர் ஷவாரிடம் மற்றொரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர். அதன் சாராம்சம், ‘எகிப்தில் எங்களின் பிரதிநிதியும் அவரது தலைமையில் சிறு பகுதி துருப்பினரும் தங்குவர். நூருத்தீனின் படைகள் வந்து நுழைந்து விடாமல் எகிப்தின் வாயில்களை அவர்கள் கட்டுப்படுத்துவர். ஆண்டுதோறும் எகிப்து, பரங்கியர்களுக்கு ஒரு இலட்சம் தீனார் அளிக்க வேண்டும்’

ஷவாருக்கும் பரங்கியருக்கும் இடையில் உருவான இந்தப் புதிய ஒப்பந்தம் ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் அதைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத அளவுக்குச் சுருங்கிப் போயிருந்தது அவரது அதிகாரம். ஆகவே, பரங்கியர்கள் ஜெருசலம் திரும்பி விட்டாலும் சேனாதிபதிகளின் சொச்சப் பகுதி ஒன்று கெய்ரோவில் மிச்சம் ஒட்டிக்கொண்டது. அது என்ன ஆகும்?

தங்களது மண்ணில் அந்நியப் படைகள் காலூன்றி நீண்ட நாட்களாக நின்று விட்டதைக் கண்டு எகிப்தியர்களுக்கு ஏகப்பட்ட எரிச்சல். அவர்களுக்குக் கப்பம் கட்டுவதற்காகத் தங்கள் தலையில் விழுந்த அதிகப்படியான வரிச் சுமையால் அதிருப்தி, ஆத்திரம். விளைவாக, அந்தப் பரங்கியர்கள் மீதான எதிர்ப்பு நாளுக்குநாள் அவர்களிடம் அதிகரித்தபடி இருந்தது. ஃபாத்திமீ கலீஃபாவின் பரிவாரங்களும் மக்களும், ‘இந்தப் பரங்கியர்களிடம் அடிபணிந்து போவதைவிட, நூருத்தீனிடமே இணக்கமாகி விடலாமே’ என்று குசுகுசுப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். வஸீர் ஷவாரின் முதுகுக்குப் பின், கெய்ரோவுக்கும் ஷிர்குஹ்வுக்கும் இடையே இரகசிய தகவல் பரிமாற்றம் தொடங்கியது. இம்முறை ஷிர்குஹ் அவசரப்படாமல், ஜெருசல ராஜாவின் நடவடிக்கை என்ன என்பதை மட்டும் கூர்மையாகக் கவனித்தபடி இருந்தார்.

கெய்ரோவில் வீற்றிருந்த பரங்கியர் படைப் பிரிவு, வளர்ந்து வரும் மக்களின் விரோதத்தை அறிந்தே இருந்தது. உள்ளூர ஒரு விதத்தில் அது அவர்களுக்கு அச்சத்தைத் தந்தது என்ற போதிலும், ‘உதவுவார் இன்றிக் கிடக்கும் எகிப்தை கபளீகரம் செய்ய இதுவே தருணம், காலம் கனிந்துள்ளது, நாடு எளிதில் வீழ்ந்துவிடும்’ என்று ராஜா அமால்ரிக்குக்குத் தகவல் அனுப்பினார்கள்.

அமால்ரிக் அதை முதலில் ஏற்கவில்லை. தயங்கினார். நூருத்தீனிடமிருந்து வரக்கூடிய பின்விளைவுகளைக் குறித்து அஞ்சினார். “என் கருத்து என்னவெனில், நாம் எகிப்துக்கு அணிவகுப்பது நன்றன்று. நாம் அதைக் கைப்பற்றினால், அதன் ஆட்சியாளரும் படையினரும் குடிமக்களும் விவசாயிகளும் நம்மை எதிர்த்துச் சண்டையிடுவர். தவிர, நம் மீது ஏற்படும் அச்சத்தால் அவர்கள் எகிப்தை நூருத்தீன் வசம் அளித்துவிடக்கூடும். அப்படி ஆகிவிட்டால் நாம் நிச்சயமாக லெவண்த்தைவிட்டு வெளியேறும்படி ஆகிவிடும்” என்று சொல்லிப்பார்த்தார்.

ஆனால ராஜாவின் ஆலோசகர்கள் அவரது கருத்தை ஏற்கவில்லை. பைஸாந்திய சக்கரவர்த்தி மேனுவலுடன் நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுறும் வரையிலும்கூட அவர்கள் அமால்ரிக்கைக் காத்திருக்க விடவில்லை. ‘எகிப்துக்கு இப்போது பாதுகாப்பாளர்கள் என்று யாரும் இல்லை. நாம் அதை முற்றுகை இட்டால் அவர்களுக்கு உதவுவதற்கு ஆள் இல்லை. நூருத்தீனின் கவனமெல்லாம் அங்கே வடக்குப் பகுதியில் குவிந்திருக்கிறது. அங்கும் இங்குமாக அவரது படை சிதறியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை அறிந்து, நூருத்தீன் தமது படையை ஒன்று திரட்டி வருவதற்குள், நாம் எகிப்தைச் சுருட்டி விடலாம். விளைவாக, நூருத்தீன்தான் நம்மிடம் அஞ்ச வேண்டியிருக்கும்’ என்று கெட்ட புத்தி புகட்டினர்.

போதாதற்கு ஹாஸ்பிட்டலர்களின் சேர்மானமும் இணைந்தது. அவர்களின் தலைவன் ஒருவன் கோட்டை கட்டுவதற்குக் காரியத்தில் இறங்கி, அது அவர்களைக் கடும் கடன் சுமையில் அழுத்தியிருந்த நேரம் அது. பில்பைஸ் நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்றினால், பெரும் வருமானத்திற்கு வழி வகுக்கும் என்று அவர்களுக்கு நப்பாசை. அதனால் அவர்கள் தங்கள் பங்கிற்கு அமால்ரிக்கைத் தூண்டினர்.

எகிப்தியர்கள் சுளையாக ஆண்டுக் கப்பம் செலுத்துகின்றனர்; நூருத்தீனின் ஆதிக்கம் அவர்களது பகுதியில் விரிவடையாமல் தடுப்பாய் நிற்கிறார்கள்; அவற்றையெல்லாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று அமால்ரிக் உறுதியாக நின்றிருக்கலாம். அல்லது மேனுவல் வரட்டும்; அவருடன் இணைந்து ஏதேனும் செய்யலாம் என்று பொறுமை காத்திருக்கலாம். ஆனால், அனைத்துத் தரப்பு சொல்பேச்சையும் கேட்டு அவருக்கும் புத்தியை ஆசை ஆக்கிரமித்தது. பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நோக்கி அவரது வாள் நீண்டது.

இதற்கிடையே 1168ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம். ‘செரஸெனியர்களை நசுக்குவோம்’ என்று பெரும் திரளாக சிலுவைப்படை சேனாதிபதிகளின் கூட்டம் ஒன்று இலத்தீன் ஐரோப்பாவிலிருந்து கிளம்பி வந்திருந்தது. (முஸ்லிம் அரபியர்களைக் குறிக்க ‘செரஸென்’ Saracen என்ற பதத்தைத்தான் அவச்சொல்லாக ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர்.) தம் படையைத் திரட்டிக்கொண்டு, கூடவே அந்த சேனாதிபதிகளின் படையையும் இணைத்துக்கொண்டு, அஸ்கலானிலிருந்து எகிப்தை நோக்கி நான்காம் முறை அணிவகுத்தார் அமால்ரிக்.

oOo

பரங்கியரின் படை எகிப்தின் பில்பைஸ் நகரை வந்தடைந்தது. அந்நகருக்கு அச்சமயம் அதிகாரியாக இருந்தவர் வஸீர் ஷவாரின் மகன் தஅய் (Tayy). சூழ்ந்துள்ள ஆபத்தின் வீரியம் புரியாமல் இழித்துரைக்கும் செய்தி ஒன்றை அவர் அமால்ரிக்குக்கு அனுப்பினார்.

‘பில்பைஸ் உண்பதற்குரிய ஒரு துண்டு பாலாடைக்கட்டி என்று நினைத்துவிட்டாயா?’

அமால்ரிக் அதற்கு பதில் அனுப்பினார், ‘ஆம், பில்பைஸ் பாலாடைக்கட்டி. கெய்ரோ வெண்ணெய்’

தாக்குங்கள் என்று பிறந்தது கட்டளை. பசித்த புலி இரையின் மீது பாய்வதைப் போல் சொல்லி மாளாத உக்கிரத்துடன் பில்பைஸின் மீது பாய்ந்தது பரங்கியர் படை. எதிர்த்துப் போரிடும் சக்தியின்றி, எளிதாகச் சுருண்டு வீழ்ந்த அந்நகரைப் பரங்கியர்களின் சிலுவைப்படை அத்துடன் விட்டிருக்கலாம் இல்லையா? மாறாக அப்படையினர் வெறி தலைக்கு ஏறி துவம்சம் செய்தனர். முஸ்லிம்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கொத்துக் கொத்தாக மக்களைப் பிடித்து வெட்டிக் கொன்றனர். எவ்வித வரம்பும் கட்டுப்பாடும் இன்றி ஊரைக் கொள்ளையடித்தனர். பீதியில் வீதிகளெங்கும் மக்களின் மரண ஓலம். ஊரெங்கும் இரத்தச் சகதி. கொல்லப்பட்டவர்கள் போக மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். வஸீர் ஷவாரின் மகன் தஅய்யும் கைது செய்யப்பட்டான்.

பரங்கியரின் காட்டுமிராண்டித்தனத்தில் கிழித்து எறியப்பட்டது பில்பைஸ். அந்தக் கோர நிகழ்வுகளின் தகவல் எகிப்து முழுவதும் பரவி, திகைத்து அதிர்ந்தது தலைநகர் கெய்ரோ. எகிப்துடன் இருந்த உடன்படிக்கையைத் தூக்கி எறிந்து பில்பைஸில் கட்டவிழ்த்துவிட்ட அவர்களது வெறித்தனம் எகிப்து முஸ்லிம்களின் மனத்தில் அவர்கள் மீதான எதிர்ப்புணர்வை மேலும் தீவிரமாக்கியது; கடினமாக்கியது. எப்பாடு பட்டாவது எதிர்த்து நிற்க வேண்டும் என்ற அசாத்தியத் துணிச்சலை எகிப்தியர்களுக்கு அளித்துவிட்டது.

அக்கால வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர் அதைக் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறார். ‘பரங்கியர்கள் பில்பைஸில் வேறுவிதமாக நடந்துகொண்டிருந்தால், அவர்கள் கெய்ரோவை எளிதாகக் கைப்பற்றியிருக்கக் கூடும்; கெய்ரோவின் முக்கியஸ்தர்கள் சரணடைய தயாராகவே இருந்தனர். ஆனால் பில்பைஸில் நடைபெற்ற படுகொலைகளைக் கேள்விப்பட்டபின், என்ன வந்தாலும் சரி, எதிர்த்து நிற்பது என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்’

வஸீர் ஷவார் தாமே முன்வந்து சரணடைந்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அமால்ரிக்கின் நம்பிக்கைக்குத் தீ வைத்தார் ஷவார்.

அமால்ரிக்கின் படை கெய்ரோவை நோக்கி நகர்வது தெரிந்ததும் பழைய நகரான ஃபுஸ்தத்தைத் தீயிட்டுக் கொளுத்த வஸீர் ஷவார் உத்தரவிட்டார். புதிய தலைநகராக காஹிரா உருவாகியிருந்த போதும் அங்கு வசித்தவர்கள் கலீஃபாவும் வஸீர்களும் மேட்டுக்குடியினரும் மட்டுமே. வர்த்தக மையமாகத் திகழ்ந்த நகரமோ பழைய ஃபுஸ்தத்தான். கடலை விட்டுத் தொலைவில் இருந்தாலும் எகிப்திய கப்பல் படைக்குத் தேவையான கப்பல்களை உருவாக்கும் முக்கிய தளமாகவும் அந்நகர் திகழ்ந்தது. வளம் கொழிக்கும் ஃபுஸ்தத் நகரம் சிலுவைப்படை கொள்ளையரிடம் பறிபோகாமல் தடுக்க ஷவாருக்கு அச்சமயம் தெரிந்த ஒரே வழி தீ.

இருபதாயிரம் குடங்களில் எரிபொருள் எடுத்துவரப்பட்டது. சந்தைகள், வீடுகள், மாளிகைகள், மஸ்ஜிதுகளில் அதை வீசி ஊரை நனைத்தனர். போதிய அவகாசம் இல்லாததால் அங்கிருந்த கப்பல்களை அகற்ற வழியில்லாமல் அதையும் நனைத்தனர். மக்களை மட்டும் வெளியேற்றி விட்டு, தீயிட்டனர். நான்கு நாள், ஐந்து நாள் என்று சம்பிரதாயத்திற்கு எரிந்து அணையாமல் நாற்பத்து நான்கு நாள்கள் திகுதிகுவென்று கொளுந்துவிட்டு எரிந்தது தீ. நகரைச் சாம்பாலாக்கிவிட்ட பிறகே அது ஓய்ந்தது. நகருடன் சேர்ந்து தீயில் கருகிய கப்பல்களால் எகிப்திய கப்பற்படைக்கு நீண்டகால பாதிப்பு ஏற்பட்ட அவலம் தனி சோகம்.

இத்தகு இக்கட்டில்தான் ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் தம் குடும்பப் பெண்டிரின் தலைமுடியையும் இணைத்து நூருத்தீனுக்கு அவசரத் தகவல் அனுப்பினார். அது எகிப்தைச் சூழ்ந்திருந்த ஆபத்தைத் துல்லியமாக விளக்கியது. எகிப்தியர்கள் எதிர்பார்த்த பின்விளைவை சிரியாவில் ஏற்படுத்தியது.

(தொடரும்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.