{mosimage}உலகம் முழுவதும் இருக்கும் அரசுகளும் பெரும் நிறுவனங்களும் நடத்தும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சியாக விக்கிலீக்ஸ் (Wikileaks.org) என்றொரு தளம் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தளத்தில் உலகம் முழுவதும் அரசுகள் தமது முறைகேடுகள் பொதுமக்களுக்குத் தெரியாமல் மறைக்க விரும்பும் ஆவணங்களுடன் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளும் பதியப்பட்டன.
இதனால் US அரசு உள்பட உலகின் பல அரசுகளின் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்களுக்குத் தெரிய வந்தன. இவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப் படுவது குவாண்டனாமோ சிறையில் அதிஉயர் பாதுகாப்புப் பெற்ற டெல்டா முகாமின் கைதிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய விசாரணை முறைகள் என்ற ஆவணமாகும். இது வெளியானதால் மனித உரிமை ஆர்வலர்களின் கண்டனத்துக்கு US அரசு ஆளானது. இது மட்டுமின்றி பிரிட்டனை உலுக்கிய நார்த் ராக் (North Rock) வங்கி திவாலானதற்கான காரணங்கள் அடங்கிய ஆவணமும் வெளியிடப்பட்டது.
கலிஃபோர்னியா மாநில நீதிமன்றத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜூலியஸ் பேர் (Julius Baer) வங்கி தொடர்ந்த வழக்கில் இவ்வங்கியின் மிக முக்கிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் தளம் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் தளத்திற்கு ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே அவகாசம் அளித்து விளக்கம் கோரிய நீதிமன்றம் இத்தளத்தை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இத்தளம் நிறுவப்பட்டிருந்த டைனாடாட் (Dynadot) நிறுவன வழங்கிகளிலிருந்து அனைத்துத் தடயங்களையும் அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.