இராக்கில் US எதிர்காலம் குறித்து புஷ் குழப்பம்

{mosimage}இராக் ஆய்வுக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது முதல் புஷ் தலைமையிலான US நிர்வாகத்திற்கு இராக்கில் அதன் நிலை குறித்து குழப்பம் நிலவுவது தற்போது தெரிய வந்துள்ளது. இராக்கில் US-ன் எதிர்காலம் குறித்து மூன்று தெரிவுகள் இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மூன்று தெரிவுகளில் முதலாவதாக உடனடியாக இராக்கிலிருக்கும் US துருப்புகளை 15,000 முதல் 30,000 வரை உடனடியாக அதிகரித்து அதன் மூலம் இராக் ராணுவத்தினரையும் காவற்படையையும் விரைவுப் பயிற்சி அளித்து அவர்கள் நாட்டை அவர்களே பார்த்துக் கொள்ளுமாறு செய்வது. இதன் மூலம் துருப்புகளைச் சிறிது சிறிதாகத் திரும்பப் பெறுவது சாத்தியமாகும். இதன் மூலம் இராக்கைப் பொறுத்தவரை ஓர் அறிவுரை கூறும் நாடாக மட்டுமே US இருக்கும்.

இரண்டாவது தெரிவின் படி அல்-காயிதாவை மட்டுமே எதிர்த்துப் போரிடுவது. அதாவது US இனியும் இராக்கில் நிலவும் வகுப்புக் கலவரங்களில் அமைதி கண்காணிக்கும் படையாக இல்லாது அல்-காயிதாவை மட்டுமே எதிர்க்கும் எனத் தெரிகிறது. இராக்கியர்கள் தங்களுக்குள் எப்படித்தான் சண்டையிட்டுக் கொண்டாலும் அதனைக்குறித்து US துருப்புகள் கவலைப்பட மாட்டா.

மூன்றாவது தெரிவின் பெயர் 'ஷியா உத்தி'. அதாவது US படைகள் இராக்கில் பெரும்பான்மையான அளவில் இருக்கும் ஷியாக்களைத் தூண்டிவிட்டு மீதமுள்ள பிற இனத்தவரை ஒடுக்கச் செய்வது. 1991ல் அப்போதைய அதிபர் சதாமை எதிர்த்து ஷியாக்களை US தூண்டிவிட்டுக் கலவரம் செய்ய வைத்தது. ஆனால் அவ்வாறு கலவரம் மூண்ட போது ஷியாக்களுக்குத் துணை செய்யாது அப்படியே அவர்களை சதாமின் பிடியில் நிர்க்கதியாக விட்டதை இராக்கிய ஷியா மக்கள் மறந்திருப்பார்களா என்பது கேள்விக்குரியது. எனவே இந்த உத்தியும் பலனளிப்பது சந்தேகமே.