தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (இறுதிப் பகுதி)

Share this:

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் செய்திகளில் பலமானதாக எடுத்துக் காட்டப்படும் பிரபல நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் குறித்து இப்பகுதியில் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு (நற்செய்தி) வழங்கட்டுமா?  அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்கு பத்து விசயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா ? அதைச் செய்தால், நீங்கள் முன்னால், பின்னால், புதிதாக செய்த, பழமையில் செய்த, வேண்டுமென்றே செய்த, தவறுதலாகச் செய்த, சிறிய, பெரிய, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த இந்த பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.


நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும் . முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10 தடவை அந்த தஸ்பீஹைக் கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தா செய்த நிலையில் 10 தடவை அந்த தஸ்பீஹைச் சொல்லுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள் . பின்னர் ஸஜ்தா செய்து அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள் . பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை 10 தடவை கூறுங்கள். இது ஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்) 75 ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை(யாவது) செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத்இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் (1105)

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களிலேயே மிகவும் வலுவாகக் கருதப்படும் ஹதீஸாகும் இது. இந்த ஹதீஸினைக் குறித்து அறிஞர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கியுள்ளனர். முக்கியமாக இமாம் ஹாபிழ் முன்திர் மற்றும் இமாம் முஸ்லிம் போன்றவர்கள் தஸ்பீஹ் தொழுகை குறித்து வந்துள்ள செய்திகளிலேயே உயர்வான தகுதியுடையது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸே என்று கூறியுள்ளனர்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. அதில் ஏற்றமானது இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும் என்று ஹாபிழ் முன்திர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)

இக்ரிமா, இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர் தொடரைப் போன்று அழகிய தொடர், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வேறு எதிலும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள். (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)

இவ்வாறு இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்களில் ஏற்றமானது என அவர்கள் கூறியிருந்தாலும் இந்த ஹதீஸையும் ஸஹீஹானது என்று அவர்கள் குறிப்பிடாததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே நேரம் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது எனக் கூறுகிறார். இச்செய்தியில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று விமர்சித்து, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இச்செய்தியை இட்டுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.

இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்களில் இக்கூற்றை இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் இமாம் அபூபக்கர் பின் அலரபி அவர்கள் மறுக்கின்றனர்.

“மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று சொல்லும் இப்னுல் ஜவ்ஸீன் கூற்று தவறானதாகும். ஏனெனில் இமாம் நஸயீ , இப்னுமயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்” – இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர். (துஹ்பத்துல் அஹ்வதீ )

மேலும் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தஸ்பீஹ் தொடர்பான ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று மிகைப்படுத்திச் சொல்லியுள்ளார்கள் என இமாம் அபூபக்கர் பின் அல்அரபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .

ஆனால் இவ்வாறு கூறும் இமாம் அபூபக்கர் அல் அரபி அவர்களே, “தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக ஆதாரப்பூர்மான, ஹஸன் நிலையில் உள்ள ஹதீஸ்கள் கிடையாது .” என்றும் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி மேலும் பல ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த ஹதீஸில் குறைபாடு உள்ளது என்பதை தெளிவு படுத்தியுள்ளனர்.

“தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக உறுதிப்படுத்தும் ஹதீஸ்கள் கிடையாது” என்று இமாம் உகைலீ அவர்கள் கூறியுள்ளார்கள் .

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்று மேலும் பல ஹதீஸ் கலை அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர் .

“இவர்(மூஸா பின் அப்துல் அஸீஸ்) சில வேளைகளில் தவறிழைப்பவர்” என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் அபுல் ஃபழ்ல் அவர்கள் கூறுகிறார்கள். இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள். (இமாம் தஹபீ)

“நான் கூறுகிறேன், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவைகள். மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை . (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் 550) (இச்செய்தியில் ஆட்சேபணைக்குரியவராக இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் அல்ஹகம் பின் அபான் மூலமாகவே இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்.)

மேலும்,“மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கோளாறு உள்ளவர் ” ( நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் 1, பக்கம் 552) என்றும் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் அவர்களைக் குறித்து இவ்வாறு பல்வேறு கருத்துக்களை கூறும் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக தஸ்பீஹ் தொழுகை குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்கள் .

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ், ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷாத் ஆகும் (அரிதானது, நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது ). இந்தச் செய்தியில் கடுமையான தனிக் கருத்துக்கள் இருப்பதாலும், இதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும், மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன் முறை இருப்பதாலும் இச்செய்தி பலவீனம் அடைகிறது. மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் இச்செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமிய்யா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம் 2, பக்கம் 8)

தஸ்பீஹ் தொழுகைக்கு மிக வலுவான ஆதாரமாகக் கருதப்படும் இந்த ஹதீஸில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் மற்றும் அல்ஹகம் பின் அபான் என்ற இருவரைக் குறித்து பல பிரபலமான ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதால் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிப்பதாக வரும் இந்த ஹதீஸும் ஹஸன் தரத்தினை இழந்து விடுகிறது.

மார்க்க விஷயங்களில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இன்றி எதனையும் சேர்க்கவோ, நீக்கவோ எவருக்கும் எவ்வித உரிமையும் இல்லை. நபி(ஸல்) அவர்களின் அறிவுரையிலிருந்து அவ்வாறு செய்வது நரகில் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பாவச் செயலாகும்.

தொழுகை தானே என்று அவரவருக்கு விரும்பிய விதத்தில் தொழுவதற்கும் மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லை.

“என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள் “ என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுரை, தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுத முறைப்படிதான் தொழ வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறது. எனவே தான் தொழுகை தானே என்று எவரும் சுப்ஹு தொழுகை போன்ற கடமையான தொழுகைகளை அதன் எண்ணிக்கையை விட்டுக் கூட்டியோ குறைத்தோ தொழுவதில்லை. அதுபோல் அத்தொழுகைகளில் நபி(ஸல்) அவர்கள் செய்து காண்பித்துத் தந்திராத எவ்வித செயல்களையும் செய்வதற்கும் தயாராவதில்லை.

வித்தியாசமான முறையில் ஒரு தொழுகை இருக்குமாயின் அதனை நபி(ஸல்) அவர்களே செய்து காண்பித்தும் தந்திருப்பார்கள். இதற்கு உதாரணமாக “பெருநாள் தொழுகை” மற்றும் “ஜனாஸா தொழுகை “கள் உள்ளன.

இவையல்லாமல் தொழுகையில் மிகப்பெரிய மாறுதல்களை உள்ளடக்கிய தஸ்பீஹ் தொழுகை என்ற ஒன்று இருந்திருக்குமாயின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் அதனை கற்றுத் தந்திருப்பார்கள். தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது . அவ்வாறு இருக்கும் போது அதை நடைமுறைப் படுத்த சரியான, ஆதாரப்பூர்மான வலுவான ஹதீஸ்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறையும் இல்லாத செய்திகள் இல்லை .

இதுவரை ஆராய்ந்த ஹதீஸ்களிலிருந்து தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கோ, அதன் முறைகளை நபி(ஸல்) அவர்கள் செய்தோ, கற்பித்தோ தந்ததற்கோ எவ்விதமான ஸஹீஹான ஒரு ஆதாரத்தைக் கூட காண இயலவில்லை.

பல அறிவிப்புகள் இருந்தாலும் அனைத்திலும் குறைகள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் பல அறிவிப்புகள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும் அதைச் சொல்ல வேண்டிய இடங்கள் பற்றியும் மாற்றமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

எனவே தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை கிடையாது, அதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இல்லை என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவே சரியான கருத்தாகும்.

குறிப்பு: இங்கே தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் முக்கியமான சில ஹதீஸ்களை மட்டும் பரிசீலனைக்கு எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கண்ட ஹதீஸ்களில் தஸ்பீஹ் தொழுகைக்கு எவ்வித ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கிடைக்கவில்லை. அதனை வைத்தே இம்முடிவுக்கு வரப்பட்டுள்ளது. இனி இதுவல்லாமல் தஸ்பீஹ் தொழுகைக்கு வேறு ஆதாரமான ஹதீஸ்கள் எவருக்கேனும் கிடைக்குமாயின் இன்ஷா அல்லாஹ் அதனையும் பரிசீலனைக்கு எடுத்து ஆய்வு செய்வோம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தோனும்  மிக்க ஞானமுடையோனுமாய் இருக்கிறான். புகழனைத்தும் இறைவனுக்கே.
 

தொடர் நிறைவுற்றது, அல்ஹம்து லில்லாஹ்!

< பகுதி 7


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.