"அண்டைவீட்டுக்காரன் பசித்து வாடியிருக்க, வயிறுமுட்ட உண்ட நிலையில் படுக்கைக்குச் செல்பவன் உண்மையான நம்பிக்கையாளன் இல்லை." என்ற அகிலத்திற்கு அருட்கொடையாய் அருளப்பெற்ற நபிகளாரின் செய்தி இன்று ஆஸ்திரியாவின் 12 நகரங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும், சாலையோரங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் மின்னுகிறது.
ஆஸ்திரியாவின் இஸ்லாமியக் கூட்டமைப்பின் (Islamic Federation in Austria) தலைவர் ஷேக் முஹம்மது துர்ஹான், நாடுமுழுவதுமான இந்த விளம்பரப் பணியை மேற்பார்வையிட்டு வருகிறார். இஸ்லாத்தின் உண்மையான செய்தியான அமைதியையும் சமாதானத்தையும் மனிதநேயத்தையும் ஆஸ்திரியர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே தமது இப்பணியின் முக்கிய நோக்கமாக அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தி ஆஸ்திரியர்களிடையே இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பரவத் தூண்டுகோலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விளம்பரங்களுக்கு 90,000 யூரோ செலவானதாகவும், அவற்றை ஆஸ்திரிய முஸ்லிம்களிடையே இருந்து நன்கொடையாய்ப் பெற்ற பணத்திலேயே செய்யமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விளம்பரங்களைக் கண்டு இஸ்லாம் குறித்த தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டதாக கேத்தரின் என்ற கல்லூரி மாணவி குறிப்பிட்டார். இது போன்ற நல்ல செய்திகளால் உலகில் சமாதானம் தழைத்தோங்கும் என்றும், பொருள் முதல்வாத இவ்வுலகில் ஒரு மனிதன் சக மனிதனுக்கு உதவும் எண்ணம் சிறிதாவது தோன்றும் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரியாவின் மக்கள்தொகையில் 4 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.