அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறாரா புஷ்?

மத்தியகிழக்கிலும் அரேபிய வளைகுடாவிலும் பதற்றத்தைத் தோற்றுவிக்கும் முகமாக US தனது நான்கு ஆயுதம் பொருத்திய விமானம் தாங்கிக்கப்பல்களை நிலைகொள்ள வைத்துள்ளது. இது புஷ்ஷின் அடுத்த இலக்காக ஈரானையும் சிரியாவையும் எவ்வழியிலாவது வெற்றி கொள்ளத்தான் என பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தற்போதைய US அதிபர் புஷ்ஷுக்கு இன்னும் காலம் தாழ்த்த நேரமில்லை. அமெரிக்கர்கள் எவ்வாறு சதாம் ஹுசைனைத் தூண்டிவிட்டு குவைத்தில் புகுந்து நிரந்தரமாக மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் பெரும்பகுதியைத் தன்வசம் கொண்டு வந்தனரோ அதே போன்று இப்போது ஈரானையும் சிரியாவையும் கைப்பற்றிவிட்டால் மத்திய கிழக்கின் அத்தனை எண்ணெய் வளங்களும் US-ன் முழுக்கட்டுப்பாட்டில் வந்து விடும்.

தற்போது இஸ்ரேலிய பிரதமர் வெளிப்படையாகவே US ஈரானைத் தாக்கவேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுப்பது தற்செயலானது இல்லை. இவையனைத்தும் 1992-லேயே முடிவாக்கப்ப்பட்ட US-ன் ரகசியத் திட்டங்களாகும்.

குவைத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இராக்கைத் தாக்கிய US படைகள் குவைத்தைக் காப்பதை விட தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் தான் அக்கறை காட்டின. தற்போது இராக்கில் இருக்கும் ஷியாக்களுக்கு அதிக வலிமை கொடுப்பதில் முனைப்பு காட்டும் US வேண்டுமென்றே இந்த ஷியா ஆட்சியாளர்கள் மூலம் ஈரான் இராக்கின் உள்நாட்டு அரசியலில் நுழைவதற்கு இடம் கொடுக்கிறது. இதையே ஒரு காரணமாக வைத்து அதாவது எவ்வாறு சதாம் குர்து, ஷியா மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தியதாகக் காரணம் காட்டப் பட்டதோ அதே போல் இராக்கின் சுன்னி இன மக்களை அழித்தொழிப்பதாகக் காரணம் காட்டி ஈரானைத் தாக்க முன்னேற்பாடுகளைக் கடும் முனைப்புடன் US செய்து வருகிறது.

ஈரானைத் தாக்குவது தற்கொலைக்குச் சமம் என்று அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் பலர் மறைமுகமாகவும் நேரடியாகவும் எச்சரிக்கை விடுத்தாலும் அது புஷ் நிர்வாகத்தின் காதில் விழுமா என்பது பெரும் கேள்விக்குறியே!

கட்டுரை: சவூதி தமிழன்