வாஷிங்டன்: அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்தப்படுதல் பரவலாக நடக்கின்றது என சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னஸ்டி கூறியுள்ளது. புதிதாகச் சிறைசாலைகளில் அடைக்கப் படுபவர்களும் இளம் பெண்களுமே இதில் அதிகமாக மானபங்கப் படுத்தப்படுகின்றனர் எனவும் அது கூறியுள்ளது.
சிறைகளில் பெண் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் எவ்விதத் தடங்கலும் இன்றி கிடைப்பதற்குப் பகரமாக தங்களின் ஆசைக்கு இணங்க வைக்கப் பெண் கைதிகளை அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதற்கு வேறுவழியின்றி அவர்களும் இணங்குகின்றனர். இப்படிப்பட்ட பல சம்பவங்கள் ரிப்போர்ட் செய்யப்படுவதில்லை. அப்படியே யாராவது வழக்குத் தொடுத்து அது தெளிவிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச தண்டனையே பணி இடம் மாற்றுதல் மட்டும் ஆகும் என ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகின்றது. முன்பு மனித உரிமை கண்காணிப்பு கழகம் தயார் செய்த அறிக்கையினை மிக பலமாக உறுதிபடுத்தும் வகையில் ஆம்னஸ்ட்டியின் அறிக்கை உள்ளது.
“இயற்கைக்கு விரோதமான வகையில் பெண் கைதிகள் ஆண் அதிகாரிகளால் மானபங்கப் படுத்துகின்றனர்” என இதற்கு முன்பு வெளியான மனித உரிமை கண்காணிப்பு கழகம் வெளிப்படுத்தியிருந்தது. பல வேளைகளிலும் பெண்களைக் குரூரமாக மானபங்கம் செய்யப்படுதலும் அவர்களை உடல்ரீதியாக கொடுமைப்படுத்தப்படுதலும் சிறைகளில் நடைபெறுவதுண்டு எனவும் அதன் அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.
பெண்கள் குளிப்பதையும் உடை மாற்றுவதையும் ஆண் அதிகாரிகள் பார்த்து ரசிப்பது அங்கு சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகும். புகார் செய்யப்படாமல் இருக்கப் பெண்கைதிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதும் எழுத்துப் பூர்வமாக அளிக்கப்படும் புகார்களைக் கோப்புகளிலிருந்து எடுத்து மாற்றுவதும் சிறை அதிகாரிகளின் சாதாரண நடவடிக்கைகளாகும் என ஆம்னஸ்டியின் அறிக்கை குற்றம் சுமத்துகின்றது.
அமெரிக்காவிலுள்ள பெண் கைதிகளில் பெரும்பாலானவர்களும் ஏதாவது ஒரு வகையில் மானபங்கப்படுத்தப் பட்டவர்கள் என கணக்குகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவிலுள்ளவர்களை விட 10 மடங்கு அதிகமான பெண் கைதிகள் அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளனர். மேற்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் தொகையில் பெண்களுக்கு இணையான அதே அளவிலான பெண்களின் எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்காவிலுள்ள பெண் கைதிகளின் கணக்கீடாகும் இது. அதே நேரம் கறுப்பின பெண் கைதிகளின் எண்ணிக்கை வெள்ளையின பெண் கைதிகளை விட எட்டு மடங்கு அதிகமாகும். முழுமையான பெண் சுதந்திரம் உள்ள நாடு என பெருமைபட்டுக் கொள்ளும் அமெரிக்காவின் யதார்த்த நிலை மனித உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
மானபங்கப் படுத்தப்படுதலுக்கும் மேலாக பெண் கைதிகளுக்குத் தேவையான சிகிச்சை மறுக்கப்படுவதும் அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பதிவு சம்பவமாகும். எய்ட்ஸ் போன்ற நோய்கள் உடையவர்களுக்குக் கூட முறையான சிகிச்சை வழங்கப்படுவது கிடையாது. அதே போன்று சிகிச்சை வழங்கப் போதுமான தகுதி இல்லாதவர்கள் சிகிச்சையளிப்பதும் சாதாரண சம்பவமாகும்.
மானபங்கப் படுத்தப்படுதலினால் கர்ப்பம் தரித்தவர்களைத் தனிமைப்படுத்தப் படுவதும் அவர்களை நிர்பந்தம் செய்து கர்ப்பத்தைக் கலைக்க வைக்கும் பல சம்பவங்களும் சிறைகளில் நடைபெற்றுள்ளன எனவும் மனித உரிமை கண்காணிப்பு கழகத்தின் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. ஆண் அதிகாரிகளை வைத்துப் பெண் கைதிகளை நிர்வகிப்பதும் அவர்கள் நேரடியாகச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களுக்குச் சிறைசாலைகளில் வசதி வைத்திருப்பதும் இத்தகைய கொடுமைகளுக்கான முக்கியக் காரணம் என அவ்வறிக்கை குற்றம் சுமத்துகின்றது.