சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு: பஜ்ரங்தள் செய்ததாக ஒப்புதல்?

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று 67 பேர் கொடூரமாக மரணமடையக் காரணமான குண்டு வெடிப்பிற்கான காரணம் தாங்கள் தான் என இந்துத்துவ இயக்கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்யியத்துல் உலமா ஹிந்தின் டெல்லி தலைமையகம் மற்றும் மும்பை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற மிரட்டல் கடிதத்தில் இந்த விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதம் மராத்திய மொழியில் பிழையின்றி அச்சடிக்கப்பட்டுள்ளது.

"பெரிய மாநாடுகள் நடத்துவதற்கு எதிராக நாங்கள் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தோம். ஆனால் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து பிப்ரவரி 17, 18 தேதிகளில் நீங்கள் மாலேகானில் பெரிய மாநாடுகள் நடத்தினீர்கள். நாங்கள் அங்கு குண்டு வெடிப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு பொருட்கள் மும்பையில் பிடிக்கப்பட்டு விட்டன" என்றவாறு கடிதம் நீள்கிறது.

"நாங்கள் இந்து தேசம் உருவாக்குவோம்" என்றும், "அதனைத் தடுக்க எவராலும் முடியாது" என்றும் அறைகூவல் விடும் கடிதத்தில், "ஜம்யிய்யத்துல் உலமா ஹிந்தின் உறுப்பினர்கள் முட்டாள்கள்" என்றும் காணப்படுகின்றது.

டெராடூன் எம்.பியும் தேசிய லோக்தள் தலைவருமான மௌலானா மஹ்மூத் மதனி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களுக்குக் கொடுத்துவரும் ஆதரவினை தொடர்ந்தால் மிகப்பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கடிதத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஜ்ரங்தள் அனுப்பிய மிரட்டல் கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஜம்யிய்யத்தின் செயலாளர் மௌலானா அப்துல் ஹமீத் நுஹ்மானி உறுதி செய்தார். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்யிய்யத்தின் உறுப்பினர்கள் உதவியது தான் இந்த மிரட்டலுக்கு காரணம் என்று அவர் கூறினார்.

பஜ்ரங்தளிடமிருந்து தனக்கு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டது என்று மௌலானா மதனி காவல்துறையில் புகார் பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 19 அன்று டெராடூனில் இருந்து டெல்லிக்கு திரும்பும் பொழுது தன்னுடைய கைப்பேசியில் ஒருவர் அழைத்து மிரட்டல் விடுத்ததாக மதனி கூறினார். டெல்லி வந்து சேர்ந்தபின் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

பிப்ரவரி 17,18,19 தேதிகளில் மாலேகானில் தப்லீக் ஜமாஅத்தும், ஜம்யிய்யத்துல் உலமா ஹிந்தும் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தியிருந்தார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின் நாட்டை காவிமயமாக்கும் நீண்டகால இலக்குடன் RSS தலைமையில் இந்துத்துவ இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது அட்டூழியங்களை அவிழ்த்து விட்டிருந்தாலும் இதுவரை தங்களது சிறுபான்மையினருக்கு எதிரான எந்த தாக்குதலையும் தாங்கள் தான் செய்தோம் என ஒப்புக் கொண்டதில்லை. அது மட்டுமின்றி மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும் கூட முஸ்லிம் தீவிரவாதிகள் தான் செய்தனர் என்று, கவனமாக திட்டமிட்டு ஒரு முஸ்லிமை கூட உள்ளே வரவிடாமல் இந்துத்துவமயமாக்கப்பட்டுள்ள இந்திய உளவுதுறையின் மூலம் கொடிய சம்பவங்களை முஸ்லிம் சமூகத்தின் மீதே திருப்பி விடவும் செய்தனர்.

இவையனைத்திலிருந்தும் வித்தியாசமாக 67 பேரை அநியாயமாக பலிகொண்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பைத் துணிந்து தாங்கள் தான் நடத்தினோம் என மறைமுக மிரட்டல் விடும் அளவிற்கு இந்துத்துவ நச்சு இயக்கங்கள் நாட்டில் தனது கோர கைகளை பரப்பியுள்ளது நாட்டின் பாதுகாப்புக்கும், ஒற்றுமைக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது.