காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்

{mosimage}காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார்.


காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை காவல்துறையினரும் இராணுவத்தினரும் நியாயமாக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் கொன்றுகுவித்து வருகின்றனர். இதுவரை தேசபக்தி என்ற பெயரில் எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் எதிர்நாயகனாக வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிமாகவோ அல்லது காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிமாகவோ இருப்பார். கதையின் நாயகன் அவருடன் போராடி அவர் இழைக்க நினைத்த பெரும் தீயசெயல்களைத் தடுக்கும் காவல் அலுவலராகவோ இராணுவ வீரராகவோ இருப்பார்.

உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுபோன்று இருப்பவர் மிகச் சிறுபான்மையினராக இருந்த போதிலும், இதனைக் காரணம் காட்டியே காவல்துறையும் இராணுவத்தினரும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றும் மிரட்டியும் வந்திருப்பது தற்போது செய்திகளில் வெளியாகி உள்ளது. இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் மக்களிடையே உண்மையான நிலையைக் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே அரச பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம் எடுக்க இருப்பதாக திரு.பட் கூறினார்.

என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டோரில் பலர் இருப்பினும் 1989 முதல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 8,000க்கும் அதிகமான பொதுமக்களின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்திற்கு நம்பிக்கைத்துரோகம் எனப் பொருள்படும் “தோக்கா” என்று பெயரிட இருப்பதாக திரு பட் கூறியுள்ளார். காஷ்மீரில் நடக்கும் அட்டுழியங்களை தேசபக்தி என்ற போர்வையில் மறைக்கும் அரசின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதே இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். இத்திரைப்படத்தினை அவரது மகள் பூஜா பட் இயக்க இருப்பதாகத் தெரிகிறது.

நன்றி: ராய்ட்டர்ஸ்