லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா?

லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்” என்றும் “இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்” என்றும் எச்சரித்து வரும் மடல்கள் உண்மையா? விளக்கம் அளிக்கவும். (வாசகர் சுல்தான், குவைத்).

இதேபோன்ற மடல்கள் இன்னும் சில விதமாகவும் பரப்பப்படுகின்றன. விளக்கத்திற்குச் செல்லும் முன் அவற்றையும் பார்ப்போம்

அமெரிக்காவின் மெடிக்கல் ரிஸர்ச் இன்ஸ்ட்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் அம்ஜத் கான் என்பவர் செய்த ஆராய்ச்சியில், கீழ்க்கண்ட பொருட்களில் பன்றிக் கொழுப்பு இருப்பது நிரூபணம்(!) ஆகியுள்ளது. எனவே … எனத் தொடர்ந்து, “கீழ்க்காணும் TOOTH PASTE, SHAVING CREAM, CHEWING GUM, CHOCOLATE, SWEETS, BISCUITS, CORN FLAKES, TOFFEES, CANNED FOODS, FRUIT TINS போன்ற சில பொருட்களை முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டாம்”

என்பதாக, எச்சரிக்கைகள் வரும். சிலர் கள ஆய்வு(!) செய்து படத்தோடு மெயில் அனுப்புவர்:

விளக்கம்:

இமெயில்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் பரப்பப்பட்டு வரும் இச்செய்தி முற்றிலும் பொய்யானதாகும். கடந்த 2006 ஆண்டு முதல் இப்பொய்ச் செய்திகள், இணையவெளியில் உலவி வருகின்றன.

லேஸ் என்னும் உருளைக்கிழங்கு சீவல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவனவற்றில் E631 எனப்படும் டைசோடியம் இனோசினேட் ( Sodium inosinate ) என்ற சுவை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது.

இதனை விலங்குகளின் இறைச்சியிலிருந்தும் மீன்களில் இருந்தும் தயாரிக்கலாம். அன்றி வள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிக்கலாம். இப்பொருளின் மூலத்தை, தயாரிப்பாளர் சொல்வதை வைத்துத் தான் தீர்மானிக்க முடியும்.

‘தாவரப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டது’ என்ற பச்சைப் புள்ளி இடப்பட்ட பொட்டலங்களில் தான் லேஸ் சிப்ஸ் வெளியாகிறது. அதாவது, தாவரங்களில் இருந்துதான் லேஸ் சிப்ஸின் அனைத்து மூலப் பொருட்களும் தயாரிக்கப்பட்டன என்ற உறுதி, லேஸ் சிப்ஸ்களை இந்தியாவில் தயாரித்து விற்கும் பெப்சிகோ தளத்தில் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளது. எனவே பன்றி இறைச்சியில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று தக்க ஆதாரம் இல்லாமல் இதைக் குற்றம் சாட்ட இயலாது.

எனவே, எவ்வித ஆதாரமும் இன்றி அமெரிக்காவில் முகம் தெரியா எவரோ ஒருவர் செய்த ஆராய்ச்சி என்ற பெயரில் கிளப்பி விடப்பட்டிருக்கும் இதுபோன்ற அவதூறுகளை அவசரப்பட்டு பிறருக்கு அனுப்பும் முன்,  “கேள்விப்படும் செய்திகளை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழி விடுக்கும் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்வோமாக!

– அபூஷைமா