உண்மையைத் தேடி… (முன்னுரை)

பொதுவாகவே மற்ற எல்லாப் படைப்பினங்களையும் விட மனிதன் மேம்பட்டுச் சிறந்து விளங்குவது, அவனது சிந்தித்து அறியும் பகுத்தறிவினால் தான். இந்தப் பகுத்தறிவு கொண்டு மனிதன் தனது பற்பல தேடுதல்களுக்கு விடையைக் கண்டு கொண்டான்.

இந்த ஆற்றலால்தான் அவனால் பறவையைக் கண்டு விமானம் படைக்க முடிந்தது. நீருக்கடியில் மிக இலகுவாக நீந்தும் மீன்களைக் கண்டு நீர்மூழ்கிகள் படைக்க முடிந்தது. ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தால் நீரில் மூழ்கும் தன்மையுள்ள இரும்பைக் கொண்டு பிரமாண்டமான கப்பல்களைக் கடலில் மிதக்க வைக்க முடிந்தது. இன்று மனிதன் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி உலகை வலம் வர ஓரிரு நாள்கள் போதும். இவை எல்லாம் மனிதன் சிந்திக்கத் தொடங்கியதன் பயன்களாகும்.

வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத இந்த அரிய புதையல் போன்றப் பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்தினால் மனித குலத்துக்கு மேன்மேலும் நன்மைகள் விளையும். ஆனால் இன்று மனித சமூகம் எதையும் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. எவ்விஷயத்தையும் சிந்திக்காமலேயே ஏற்றுக் கொள்ளும் மனநிலை இன்று பரவலாக காணப்படுகிறது. இது இன்றைய அவசர நவீன உலகம் மனித குலத்துக்கு வழங்கிய மிகப்பெரிய தீய பண்பாகும். கேள்விப்படும் (பார்க்கும், படிக்கும், கேட்கும்) விஷயங்களில் மனிதர்கள் தமது அறிவை உபயோகிக்கும் முறையை வைத்து அவர்களை கீழ்கண்ட விதங்களில் பாகுபடுத்தலாம்.

1. கேள்விப்படும் விஷயம் சரியா தவறா என்பதை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்பவர்.

2. கேள்விப்படுவதை ஆராயாமல் அப்படியே நம்புபவர்.

இதில் முதல் வகையினரால் சமூகத்துக்கு பயன் அல்லாமல் கேடு விளையும் சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆனால் இரண்டாவது வகையினரால் தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் கெடுதல்கள் சம்பவிக்கும் சாத்தியங்கள் மிக அதிகம். இது கேள்விப்படும் செய்தியின் உண்மைத் தன்மையினைக் குறித்து சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்காததால் விளைவதாகும்.

இவர்களைப் பொறுத்தவரை ஒரு செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் அதன் தன்மைகளை ஆராய்ந்து அதன் நன்மை தீமைகளை உணர்ந்து அது உண்மை என்று திண்ணமாகத் தெரிந்த பின்னர் பிறருக்கு அறியத் தருதல் மட்டுமே, இவர்களுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும். அதிலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில், தாம் இன்னொருவருக்குச் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் நம்பகமானதாகவும் நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துதல் மிக இன்றியமையாத ஒன்றாகும்.

ஆனால் இன்றைய இணைய சூழலில் நிலவும் நிலை என்ன? ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று மனித குலத்தை நோக்கிக் கேள்வியும், அழைப்பும் விடுக்கக் கூடிய இறை வேதத்தைக் கையில் வைத்திருக்கும் முஸ்லிம்கள், கிடைக்கும் செய்தியின் நம்பகத்தன்மையினைக் குறித்து ஒரு சிறிதும் சிந்திக்காமல் அப்படியே அதனை மற்றவர்களுக்குக் கண்ணை மூடிக் கொண்டு பரப்பிவிடுகின்றனர். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் சாதாரணமான எந்த ஒரு செய்தியையும் கூட சீர் தூக்கிப் பார்த்து அதைச் சரி கண்ட பின்னரே பிறருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்றாகும். ஒரு செய்தியில் சொல்லப்படும் செய்தியால் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு புறமிருப்பினும், முதலில் அச்செய்தி நம்பகமானதுதானா என ஆராய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளனர். நாம் முன்னரே குறிப்பிட்டது போல இணையம் மிகவும் ஆற்றல் மிகுந்த ஊடகமாக விளங்கும் இன்றைய சூழலில், வதந்திகளைப் பரப்புவது எவ்வளவு எளிதோ அதே போல அவற்றைச் சரிபார்த்து நடுநிலைச் செய்திகளை அறிதலும் மிக எளிது.

நயவஞ்சகர்களின் முக்கியப் பண்புகளில் ஒன்று, “கேட்டது அனைத்தையும் (உண்மை பொய் எவை என ஆராயாமல்) அப்படியே பிறருக்குப் பரப்புதல்” என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல குறிப்பிடுகின்றன. எனவே முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு செய்தியை நம்புவதிலும் அதனை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். இதில் கவனக் குறைவாக இருந்தால் அப்பண்பு அவர்களை நயவஞ்சகர்களின் கூட்டத்தில் அவர்களை அறியாமலேயே சேர்த்து விடும் அபாயம் உள்ளது.

இந்தக் கோணத்தில் இன்று பரவலாக இணையத்தில் தளங்கள் வாயிலாகவும், மின் மடல் வாயிலாகவும் பரப்பப்படும் பல செய்திகளின் உண்மைத் தன்மையினையும் அவற்றைப் பரப்புவதால் விளையும் கேடுகளையும் தீர்க்கமாக ஆய்ந்து இறைநாட்டப்படிஒரு தொடராக வழங்க உள்ளோம். இவற்றில் முதலாவதாக எங்கள் பார்வைக்கு சமீபத்தில் வந்த ஒரு சில செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து சமர்ப்பிக்க உள்ளோம். இது தவிர நீங்கள் ஏதேனும் ஒரு செய்தியின் (உலகியல், அறிவியல், தொழில் நுட்பம், கணினி, வைரஸ் அல்லது இஸ்லாம் தொடர்பானது) நம்பகத்தன்மை குறித்து அறிய விரும்பினால் அச்செய்தியினை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

இறைவன் நாடினால் அவற்றை அலசி ஆராய்ந்து அதன் நம்பகத்தன்மையினையும் அதனைக் கண்மூடித்தனமாகப் பிறருக்குப் பரப்புவதால் விளையும் நன்மை தீமைகளையும் இஸ்லாமிய பார்வையில் நாங்கள் உங்களுக்கு அறியத் தருகிறோம்.

இதன் நோக்கம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் அறியாமல்/கவனக்குறைவால் செய்யும் மிகப்பெரிய தவறினைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்த நயவஞ்கத்தனத்திலிருந்து காத்து சமூகத்தை ஆக்கப்பூர்வமான செயல்களை மட்டும் செய்ய தூண்டுவதாகும்.