சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32

Share this:

32. சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

மோஸுல் நகருக்குள் நுழைந்த தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் அந்நகரைத் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தம் அதிகாரத்தை நிறுவி, சிலுவைப் படையினரை நோக்கி நகர்வதற்குச் சில மாதங்கள் ஆயின. அதற்குள், கிறிஸ்தவர்கள் தரப்பில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளைப் பார்த்து விடுவோம்.

ஹர்ரான் நகரைக் கைப்பற்ற சிலுவைப் படை முயன்றது, அதையொட்டி அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பாலிக் ஆற்றங்கரையில் யுத்தம் நிகழ்ந்தது, அதில் சிலுவைப் படை படுதோல்வியடைந்தது – ஆகியனவற்றை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோமில்லையா? இலத்தீன் கிறிஸ்தவர்களின் சிலுவைப் படைக்கு ஏற்பட்ட அத்தோல்வியை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கிரேக்க கிறிஸ்தவரான பைஸாந்தியச் சக்ரவர்த்தி அலெக்ஸியஸ்.

உதவ வருகிறேன் என்று வந்துவிட்டு, தங்களிடமிருந்தே சில பகுதிகளைக் கைப்பற்றித் தமதாக்கிக் கொண்ட பரங்கியர்கள்மீது அவருக்கு வெறுப்பு இருந்து வந்தது. அந்தாக்கியாவை பொஹிமாண்ட் தமதாக்கிக் கொண்டதிலிருந்து அவர்மீது அலெக்ஸியஸுக்கு ஏகப்பட்ட அதிருப்தி, கோபம். அதைப் போலவே, முன்னர் தகுந்த நேரத்தில் உதவிக்கு வராமல் தங்களைக் கைவிட்டுவிட்டார் என்று பொஹிமாண்டுக்கும் சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் மீது ஆத்திரம். இந்நிலையில் பாலிக் போரில் சிலுவைப் படை தோல்வியுற்று, பலவீனமடைந்து, மனத் தளர்ச்சியுற்றதும் அவர்கள் வசமிருந்த சிலிசியா, லத்தாக்கியாவை அலெக்ஸியஸ் கிடுகிடுவென்று மீட்டார். அந்தாக்கியாவின் தென்கிழக்கே சம்மாக் பீடபூமியில் இருந்த நகரங்களும் இதுதான் வாய்ப்பு என்று பரங்கியர்களிடமிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு அலெப்போவை ஆண்டுகொண்டு இருந்த ரத்வானிடம் பாதுகாப்புக் கேட்டு இணைந்து கொண்டன. இவ்விதமாக ஹர்ரான் போரின் பின்விளைவாக அந்தாக்கியா பலவீனமானது; அதன் எல்லைகளும் சுருங்கின.

அடுத்த இரண்டாண்டுகளில், கி.பி. 1104இன் இலையுதிர் காலத்தில் யாரும் எதிர்பாராத ஒரு வேலையைச் செய்தார் பொஹிமாண்ட். எடிஸ்ஸாவிலிருந்த தம் உடன்பிறந்தார் மகனான டான்க்ரெட்டை அந்தாக்கியாவுக்கு வரச் சொன்னார். புனித பீட்டரின் பேராலயத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்து கூடியவர்களிடம், ‘நான் சிறைப்பட்டிருக்கும்போது பிரான்சில் நோப்லட் நகரில் உள்ள புனித லியோனார்டின் நினைவிடத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதாக நேர்ச்சை புரிந்திருந்தேன். எனவே நான் ஊருக்குப் போகிறேன். ஆனால் கவலைப் படாதீர்கள். உங்களைக் கைவிட்டுச் செல்லவில்லை. புதியதாகப் படை ஒன்றைத் திரட்டி வருவேன்’ என்று அறிவித்தார்.

அவரும் சொந்த ஊரை விட்டுக் கிளம்பி வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன; ஏகப்பட்ட போர் என்று அவருக்கு அலாதிக் களைப்பு; நேர்ச்சை புரிந்துள்ளேன் என்கிறார்; அதை நிறைவேற்றாவிட்டால் பெரும் பாவம்; அதனால் அவர் ஊருக்குப் போய், புதிய படையுடன் திரும்பி வரட்டுமே என்றே அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், பொஹிமாண்ட் அந்தாக்கியாவைத்தான் உறவினர் டான்க்ரெடிடம் ஒப்படைத்தாரே தவிர, தங்கம், வெள்ளி, இரத்தினக் கற்கள் என்று கஜானாவில் இருந்த செல்வத்தையெல்லாம் மூட்டை கட்டினார். பட்டு, பீதாம்பரம் என்று விலையுயர்ந்த துணிமணிகளையெல்லாம் சுருட்டினார். அனைத்தையும் எடுத்துக் கப்பலில் பதுக்கிப் பத்திரப்படுத்திவிட்டுக் கடலோடு சென்றுவிட்டார். அது மட்டுமின்றி, படை திரட்டி வருவேன் என்று பொஹிமாண்ட் சொன்னதிலும் ஒரு சூட்சமம் அடங்கியிருந்தது. அச்சமயம் அவர்கள் யாரும் அறியாத உள்நோக்கம் ஒன்று ஒளிந்திருந்தது. அதையும் பார்ப்போம்.

oOo

காலி கஜானாவை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இப்படியே பலவீனமாக நீடிக்க முடியுமா என்ன? கவலையுடன் சிந்தித்த டான்க்ரெட் ஏதேனும் போர் தொடுத்து முதலில் ஒரு நகரைக் கைப்பற்ற வேண்டும்; தமது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். அர்தா நகரின்மீது அவரது கண் பதிந்தது. அது அலெப்போவிலுள்ள ரத்வானிடம் தஞ்சமடைந்திருந்த நகரம். போரில் ரத்வானை வென்று அர்தாவைப் பிடித்தார் டான்க்ரெட். அந்தாக்கியாவிலிருந்து விடுவித்துக்கொண்ட சம்மாக் பீடபூமியும் அடுத்து அவர் வசமானது. அவரை எதிர்க்க முடியாது என்றானதும் ரத்வான் அவரிடம் சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்.

கப்பலேறிய பொஹிமாண்ட் அவருடய தாயகமான இத்தாலியை அடைந்ததும் அங்கு அவருக்கு ஆரவாரமான வரவேற்பு, புகழாரம் என அமர்க்களப்பட்டது. பயணக் களைப்பைப் போக்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் பிரான்சிலுள்ள புனித லியோனார்ட் நினைவிடத்திற்குச் சென்று, தாம் கைதாகி விடுதலையானதற்கு நன்றி செலுத்தும் வகையில் வெள்ளியிலான கை விலங்குகளைக் காணிக்கை செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.

பிரான்சு நாட்டு அரசரின் மகள், இளவரசி கான்ஸ்டன்ஸுடன் (Constance) அங்கு அவருக்குத் திருமணமும் நடந்தேறியது. அந்த ராஜ உறவு அந்நாட்டிலும் அவரது செல்வாக்கை உயர்த்திவிட, அடுத்து படை திரட்ட தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். என்ன பரப்புரை? பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்ஸியஸுக்கு எதிரான பரப்புரை. “அவர் மாபெரும் துரோகி, நம்முடைய முதல் எதிரி, துடைத்தழிக்கப்பட வேண்டியவர் அவர்” என்ற பரப்புரை. அலெக்ஸியஸுடன் பொஹிமாண்டுக்கு ஏற்பட்ட விரோதம் அவருக்கு எதிராகப் போர் தொடுக்கும் அளவிற்கு அவரை இட்டுச் சென்று இப்பொழுது பைஸாந்திய சாம்ராஜ்யம் அவரது இலக்காகிப் போனது. புதிய போப் பாஸ்கல் IIவுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தம்முடைய இந்தப் புதிய முயற்சியையும் சிலுவை யுத்தமாகவே சித்திரித்து அவரது ஆசீர்வாதத்தையும் பெற்றுவிட்டார் பொஹிமாண்ட்.

அவரது தீவிர முயற்சி வேலை செய்தது. ‘முஸ்லிம் சுல்தானாக இருந்தால் என்ன, கிரேக்கக் கிறிஸ்தவராக இருந்தால் என்ன, நமக்குத் துரோகியா, அவன் நம் எதிரி. தீர்ந்தது விஷயம்; தீர்த்துக்கட்டு’ என்று முஷ்டியை முறுக்கிக்கொண்டு படை திரண்டது. பல்லாயிரக் கணக்கோர் வந்து இணைந்தனர். போப் பாஸ்கல் II, பொஹிமாண்டின் உள்நோக்கத்தை அறிந்திருந்தாரா, அதில் அவருக்கு உடன்பாடு இருந்தததா என்று இலத்தீன் வரலாற்று ஆசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அடுத்த சிலுவை யுத்தம் இது என்றுதான் அவர் போப்பையும் நம்ப வைத்துவிட்டார் என்கிறார்கள் ஒரு சாரார். எது எப்படியோ, படையில் இணைந்தவர்களைப் பொருத்தவரை இது இன்னொரு புனிதப் போர். அது முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி; கிரேக்கர் அலெக்ஸியஸுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி. எனவே, முதலாம் சிலுவைப் போருக்குத் திரண்ட படையினரைப் போலவே இவர்களும் இந்தப் போர் தங்களது பாவங்களுக்குப் பரிகாரம் என்ற நம்பினார்கள். ‘சத்தியப் பிரமாணம்’ செய்தார்கள். சிலுவை ஏந்தினார்கள்.

இவ்விதம் பேரார்வத்துடன் பேராரவாரத்துடன் கி.பி. 1107-8 ஆம் ஆண்டு திரண்டு சென்ற பொஹிமாண்டின் அந்தப் படை கேவலமான அழிவைச் சந்தித்தது. பைஸாந்திய சாம்ராஜ்யத்தின் மேற்கு நுழைவாயில் எனக் கருதப்படும் டுராஸ்ஸோ நகரை (இன்றைய அல்பேனியா) பொஹிமாண்டின் படை முற்றுகை இட்டதும். அலெக்ஸியஸ் நேரடிப் போரில் ஈடுபடாமல் அதைத் தந்திரமாக முறியடித்தார். அவர்களுக்கு உணவு வந்து சேரும் அனைத்துப் பாதையையும் இடுக்கு விடாமல் அடைத்தார். சில மாதங்களில் பசியில் தவித்துப் போனது பொஹிமாண்டின் படை. பலமான பாதுகாவலுடன் திகழ்ந்த டுராஸ்ஸோ நகரையும் வீழ்த்த முடியாமல், பசியையும் வெல்ல முடியாமல், அலெக்ஸியஸிடம் பொஹிமாண்ட் சரணடைந்தார்.

கி.பி. 1108 ஆம் ஆண்டு இத்தாலிக்குத் திரும்பிய பொஹிமாண்ட் அதன் பிறகு ஆசியாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கி.பி. 1111இல் மரணமடைந்தார்.

பொஹிமாண்ட் தோல்வியுற்று இத்தாலிக்குத் திரும்பியதும், இனி அவர் திரும்பிவந்து அந்தாக்கியாவைக் கோரப்போவதில்லை என்றானதும் டான்க்ரெட் அடுத்த ஐந்து ஆண்டுகள் தம் ஆட்சியை விரிவுபடுத்துவதில் முழு மூச்சாக இறங்கினார். அந்தாக்கியா சாம்ராஜ்யம் பரந்து விரிய வேண்டும் என்பது அவரது கனவானது. அந்த முயற்சியில் அண்டைப் பகுதிகளில் உள்ள சக இலத்தீன் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போரிடவும் அவர் தயங்கவில்லை; அதற்காக முஸ்லிம்களுடன் கூட்டணி அமைக்கவும் கூச்சப்படவில்லை. அதேபோல், முஸ்லிம்களும் சக முஸ்லிம்களுடன் போரிட, சிலுவைப் படையினருடன் கூட்டணி அமைக்க வெட்கப்படவில்லை. இப்படியான விசித்திரங்கள் நடந்தேறத் துவங்கின.

அத்தகைய வினோதங்கள் இன்றும் அரங்கேறுவது நம் சமகால அவலம்.

oOo

ஜெருஸலத்திற்கு ராஜாவாகிப் போன பால்ட்வின் தம் வசம் இருந்த எடிஸ்ஸாவுக்கு அதிபதியாகத் தம் உறவினர் பால்ட்வின் IIஐ நியமித்தார்; அந்த இரண்டாம் பால்ட்வின் ஹர்ரான் போரில் சிறை பிடிக்கப்பட்டார்; அவரை விடுவிக்கும் வாய்ப்பு அமைந்தும் பொஹிமாண்டும் டான்க்ரெடும் அதைத் தட்டிக்கழித்தனர் என்று பார்த்தோமல்லவா?

கி.பி. 1104ஆம் ஆண்டு பொஹிமாண்ட் முதலில் இத்தாலிக்குத் திரும்பியபோது அந்தாக்கியாவின் முழுப் பொறுப்பும் டான்க்ரெட் வசம் வந்ததும் அவர் தமக்கு நம்பிக்கையான தம் உறவினர் ரிச்சர்ட் என்பவரிடம், ‘எடிஸ்ஸாவைப் பார்த்துகொள்’ என்று பொறுப்பு அளித்து, அதை அந்தாக்கியாவின் கட்டுப்பாட்டிற்குள் படு பத்திரமாக வைத்துக் கொண்டார். பால்ட்வின் II சிறையில் இருந்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

டெல் பஷிர் (Tell Bashir) பகுதியில் பால்ட்வின் II-ன் கூட்டாளி ஜோஸ்லின் பிரபுவாக அமர்ந்திருந்தார். அவரிடம் பால்ட்வின் II-ன் விடுதலைக்குப் பேரம் பேசினார் ஜவாலி. கிரயத் தொகையாக, தாம் மவ்தூதை எதிர்க்க அவருடைய இராணுவ உதவி, கூட்டணி. ஜோஸ்லினுக்கு என்ன கசக்கும்? ஜவாலியுடன் கைகுலுக்கினார். பால்வின் II விடுதலையானார். குனிந்து, நிமிர்ந்து சோம்பல் முறித்துக்கொண்ட பால்ட்வின் II அடுத்து செய்த முதல் காரியம், டான்க்ரெடுக்கு அனுப்பிய செய்தி. ‘எடிஸ்ஸாவை பொறுப்பாகப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி. என் மாநிலத்தை எனக்குத் திருப்பித் தரவும்’.

வளம் கொழிக்கும் எடிஸ்ஸாவின் செல்வத்தை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்த டான்க்ரெட் அதை அவ்வளவு எளிதில் விட்டுத்தந்து விடுவாரா என்ன? ‘அந்தாக்கியாவுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக எடிஸ்ஸா இருக்கும். எங்களுக்குக் கப்பம் கட்டிவிட்டு, நீங்கள் அதை நிர்வாகம் புரியலாம்’ என்றார் டான்க்ரெட். அதற்கு பால்ட்வின் II எப்படி இணங்குவார்? பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. போர் உருவானது. சிலுவைப் படையின் பால்ட்வின் IIக்கு ஆதரவாக, மோஸுலின் ஜவாலி 7,000 முஸ்லிம் படைகளுடன் அப்போரில் கலந்துகொண்டார்.

டெல் பஷிருக்கு அருகே கடுமையான போர் நிகழ்ந்தது. இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம். சிலுவைப் படையைச் சேர்ந்த 2000 கிறிஸ்தவர்கள் அதில் உயிரிழந்தனர். இதைப் பார்த்து கிறிஸ்தவப் பாதிரியார்கள் பதைபதைத்துப் போனார்கள். ஏதாவது செய்து இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, இருதரப்பையும் அழைத்து வைத்துப் பஞ்சாயத்து நடத்தினர்.

‘பால்ட்வின் II விடுதலை அடைந்ததும் அவரிடம் எடிஸ்ஸாவை ஒப்படைப்பேன் என்று டான்க்ரெட் சொன்னது உண்மைதான்’ என்று சிலர் சாட்சியம் அளித்ததும் வேறு வழியின்றி ஒருவழியாக எடிஸ்ஸாவை ஒப்படைத்தார் டான்க்ரெட். அப்படியும் அதன் வடக்குப் பகுதியில் இருந்த பகுதிகளை அவர் தம் வசமே வைத்துக்கொண்டார். அந்தப் போர் இப்படியாக முடிவுக்கு வந்தது. இருந்தாலும் அவர்களுக்கு இடையே பகையும் புகைச்சலும் அணையவில்லை.

எடிஸ்ஸா தமக்கு இல்லை என்றானதும் டான்க்ரெடின் பார்வை அடுத்து திரிபோலியின் (Tripoli) மீது விழுந்தது. முதலாம் சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான ரேமாண்ட் மெர்ஸிஃபான் யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தோற்று ஓடிவந்தாரல்லவா? எனக்கென எந்தப் பகுதியும் கிடைக்கவில்லையே என்று தவித்து வருந்திய அவர் அச்சமயம் லெபனானின் வடக்குப் பகுதிகளைக் குறி வைத்தார். அங்குச் சில பகுதிகளையும் கைப்பற்றினார். ஆனால் அதில் முக்கிய நகரமான திரிபோலி மட்டும் அவருக்கு வசப்படாமல் வலுவுடன் தன்னைத் தற்காத்து நின்று கொண்டிருந்தது. அங்கிருந்த முஸ்லிம்கள் அதை வலிமையுடன் பாதுகாத்து வந்தனர். பற்பல முயற்சிகள் செய்தும் திரிபோலி விஷயத்தில் மட்டும் ரேமாண்டுக்குத் தோல்விதான் மிஞ்சியது. அத்துடன் கி.பி. 1105ஆம் ஆண்டில் அவரது ஆயுளும் முடிவடைந்து அவர் மரணமடைந்தார்.

ரேமாண்ட் மரணமடைந்ததும் அவருக்கு வாரிசு நான்தான் என்று இருவர் முட்டிக்கொண்டனர். ஒருவர் ரேமாண்டின் மகன் பெர்ட்ராண்ட் (Bertrand). மற்றவர் ரேமாண்டின் உடன்பிறந்தாரின் மகன் வில்லியம் ஜோர்டான். கி.பி. 1109ஆம் ஆண்டு திரிபோலி நகரை முற்றுகையிட பெர்ட்ராண்ட் பெரும் படையுடன் வந்துவிட்டார். அவருக்கும் வில்லியமுக்கும் இடையே திரிபோலி யாருக்கு என்று சண்டை ஏற்பட்டு அந்நகரை வீழ்த்துவதற்கு முன்பே அவர்களுக்குள் அடிதடி.

வில்லியம் ஜோர்டான் என்ன செய்தார் என்றால் டான்க்ரெடிடம் உதவி தேடி ஓடினார். ‘உங்களுக்குக் கட்டுப்பட்ட பகுதியாக திரிபோலியை அமைத்துக் கொள்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’ என்று முறையிட்டார் வில்லியம். எடிஸ்ஸா கைநழுவிப்போன கவலையில் இருந்த டான்க்ரெட் தேடி வந்த இந்த நல்வாய்ப்பை நழுவ விடுவாரா? அந்தாக்கியாவுடன் திரிபோலியும் அதன் சுற்றுப் பகுதிகளும் இணைந்தால் தெற்கே ஜெருஸலத்தில் ராஜாவாக இருக்கும் பால்ட்வினுக்கு இணையாய் தாமும் மாபெரும் ஆட்சியாளராகி விடலாமே என்று மனக்கண்ணில் அவருக்குக் கனவு விரிந்தது.

இந்தப் பிரச்சினையில் வந்து குறுக்கிட்டார் ஜெருஸல மன்னர் பால்ட்வின். தாம் தமது உறவினர் பால்ட்வின் IIக்கு விட்டுவந்த எடிஸ்ஸாவை டான்க்ரெட் பறித்துக் கொள்ள முனைந்தது; சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அவரை மீட்காமல் சூழ்ச்சி செய்தது என்று டான்க்ரெட் மீது ஏகப்பட்ட குறையும் வெறுப்பும் அவருக்குள் இருக்க, வில்லியம்-டான்க்ரெட் கூட்டணி வெற்றி பெற விடுவாரோ? ஆனால் அவர் டான்க்ரெட்டுடன் நேரடி ஆயுதப் போரில் இறங்காமால் வேறு நடவடிக்கையில் இறங்கியதில்தான் அவரது சாதுர்யம் அடங்கியிருந்தது.

‘நாம் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டணியாக இயங்கினால்தான் முஸ்லிம்களை வெல்ல முடியும். நமக்குள் அடித்துக்கொண்டு பிரிந்து கிடந்தால் நமது பலவீனம் யாருக்கு இலாபம் என்பது புரியவில்லையா?’ என்றெல்லாம் அவர் பேச்சுவார்த்தை நடத்த அது அவருக்கு வெற்றி அளித்தது. அதன் ஊடே பெர்ட்ராண்டை அங்கீகரிக்கப்பட்ட வாரிசாக்கி, திரிபோலியின் முற்றுகைக்கு, ‘எல்லோரும் திரண்டு வாருங்கள்’ என்று ஒருங்கிணைந்த இலத்தீன் படையை உருவாக்கிவிட்டார் பால்ட்வின்.

500 சேனாதிபதிகளுடன் ஜெருஸலத்திலிருந்து தாமே படைக்குத் தலைமை தாங்கிக் கிளம்பி வந்தார் மன்னர் பால்ட்வின். தம் புதிய கூட்டாளி வில்லியம் ஜோர்டானுடனும் 700 சேனாதிபதிகளுடனும் டான்க்ரெட் புறப்பட்டு வந்தார். அதேபோல் எடிஸ்ஸாவிலிருந்து பால்ட்வின் IIம் ஜோஸ்ஸிலினும் பெரும் எண்ணிக்கையுடன் வந்தனர். அத்தனை ஆண்டுகாலம் ரேமாண்டிடம் வீழாமல் தப்பிவந்த திரிபோலி, ஒருங்கிணைந்து வந்த சிலுவைப் படையிடம் இப்பொழுது சரணடைந்தது. ஒட்டவைக்கப்பட்ட ஒற்றுமையுடன் அவர்கள் வந்திருந்தாலும் ஆழ்மனத்தில் பகையும் வன்மமும் கனன்று கொண்டுதான் இருந்தன. அதன் விளைவு?

திரிபோலி நகரம் சரணடைந்த சில நாள்களிலேயே மர்மமான முறையில் தாக்கப்பட்டு, நெஞ்சு துளைக்கப்பட்டு, மரணமடைந்தார் வில்லியம் ஜோர்டான். பெர்ட்ராண்ட் ஏகபோக வாரிசானார்.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.