மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்:

ஸஹர் உணவு:
“நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).

நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643)

பஜ்ருக்குச் சற்று முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்ண வேண்டும். ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து, பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும்கூட விடி-ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பதும் தவறாகும். தாமதமாக எழுந்து பஜ்ரு நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக் கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.

ஸஹர் நேரத்தில் எழுந்து ஸஹர் செய்யாமல் இரவே சாப்பிட்டுவிட்டு தூங்கி விடும் சிலருடைய பழக்கத்தையும் மாற்ற வேண்டும். இது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து (ஒரு பேரீத்தம் பழம், தண்ணீர், பால் போன்ற) எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பு துறப்பது:
சூரியன் மறைந்தவுடன் தாமதப்படுத்தாது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது, அது கிடைக்கவில்லை எனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகும்.

“விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஸஹ்லு பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

“உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூல்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

நோன்பு துறக்கும் போது ஓதவேண்டிய துஆ (பிரார்த்தனை):
நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று ஓதுவார்கள். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350)

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் அனுகூலம்:
“மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

இக்லாஸ்:
நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் ‘இக்லாஸ்’ எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை(பாத்தியதை)களைக் கொடுப்பீராக! மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயம் செய்யாதீர்! (அல்குர்ஆன் 17: 26)

நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)

நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல் தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும்.

உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றவரையிலும் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், அல்லது ஏழை எளியவர்களுக்கு நமது செல்வத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல, நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.

நோன்பில் அனுமதிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் கடமைகள்:
பயணிகள்:
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

‘…..எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும் (அல்குர்ஆன் 2:185).

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். மக்களும் நோன்பை விட்டுவிட்டனர். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1944)

நோயாளிகள்:
….எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் பின்னர் வரும் நாட்களில் நோற்க வேண்டும்”. (அல்குர்ஆன் 2:184)

சில நாட்களில் நீங்கிவிடும்என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பைவிட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

‘ஃபித்யா’ (பரிகாரம்):
முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு ‘ஃபித்யா’ (பரிகாரம்) கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

“….எனினும் நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பகரமாக ஃபித்யாவாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்”. (அல்குர்ஆன் 2:184)

மாதவிலக்குடைய பெண்கள்:
மாதவிலக்கு அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பை விட்டுவிட அனுமதி உள்ளது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

“…ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304)

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களா செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்” (அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி)

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும்:
ரமளான் மாதத்தின் நோன்பை கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டு உள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களா செய்ய வேண்டும்.

‘கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகையளித்தனர்” (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

இறுதியாக, ரமளானில் பெற்ற நோன்பு எனும் பயிற்சியை நமது இறுதி மூச்சுவரை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆகவும் நாமும் நாம் நேசிக்கும் நம் குடும்பத்தினரும், நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் நேர்வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாகவே மரணித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழையும் பாக்கியத்தைப் பெறுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.

நமது எல்லாப் பிழைகளைகளையும் மன்னித்து நமது அமல்களையும் துவாக்களையும் அந்த வல்ல நாயன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!

தொடர் நிறைவு பெற்றது.

oOo

கட்டுரை ஆக்கம்: இப்னு ஹனீஃப்

(மீள் பதிவு)