ரமளான் மாதத்தின் சிறப்பு:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். ( அல்குர்ஆன் 2: 185)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்) கத்ரு என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 185)
என்று சிறப்பித்துக் கூறுகிறது.
ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களுக்குச் சமம். ஒருவர் இவ்விரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தால் அவர் சுமார் 83 வருடங்கள் இடைவிடாது இறைவணக்கத்தில் கழித்த கூலியை அடைந்து கொள்கின்றார். ஒருவர் இவ்விரவில் ஒரு ரக்அத் தொழுதால் அவர் சுமார் 83 வருடங்கள் ஒரு ரக்அத் தொழுததற்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்.
ஒருவரின் ஆயுள்காலம் சராசரியாக 70 வருடம் என வைத்துக் கொண்டு அவர் செய்யும் நல்லறங்களை கணக்கிட்டாலும்கூட இந்த ஓர் இரவில் ஒரு ரக்அத் தொழுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்கு அது ஈடாகாது.
ஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதை விட மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் உண்டா? அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியும் கிடைக்கப்பெறவில்லை எனில் அவரைவிட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம் தான் தற்போது நமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வது போல் இவ்வருடமும் அதனை சாதாரணமாகக் கடந்து செல்ல அனுமதிப்பது அறிவுடைமை ஆகாது.
அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் ஒரு சுய பரிசோதனை அவசியம். கடந்த வருடமும் இதே ரமளான் ஒவ்வொருவரையும் கடந்து சென்றிருக்கிறது. அப்பொழுது இப்புண்ணிய ரமளானைக் கிடைக்கப்பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த ரமளானை அடைந்திருக்கின்றனர்? அவ்வாறு அடைந்தவர்கள் அதனை தொடர்ந்து வந்த இந்த 11 மாதங்களில் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கின்றனர்? என்பதனைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அதனை சாதிக்க இயலும். அதற்காக சென்ற ரமளானிலிருந்து கடந்து வந்த பாதையை நோக்கி ஒரு வேகமான நினைவோட்டம் அவசியமாகிறது.
சென்ற ரமளானைக் கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும், அந்த ரமளான் மூலம் பெற்ற நல்லருள்களால் அதன் பின்னர் தமது தொழுகையில், தமது பிராத்தனையில், வணக்க வழிபாடுகளில், வாழ்க்கையில் என்ன மாறுதல்களை, எந்த நல்ல அமல்களை, நல்ல விஷயங்களைத் தொடர்ந்து முறையாக செயல்படுத்திப் பயனடைந்து வருகின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சென்ற ரமளானை அடைந்தவர்களின் அன்றாட அலுவல்கள் முதல் ஆன்மீக வாழ்க்கை வரை என்ன மாறுதல்களை அடைந்துள்ளது?
ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏவியவற்றையும், விலக்கியவற்றையும் முறையாகக் கடைபிடித்து அழகாக விளக்கி வாழ்ந்து காட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளின்படி ஒவ்வொருவரின் ஆன்மீக வாழ்க்கை மற்றும் அன்றாட அலுவல்கள் இருந்தனவா, இருக்கின்றனவா?
எவற்றை எல்லாம் சரிபார்த்துச் சீர்திருத்திக் கொண்டோம்? எவற்றை எல்லாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்? எவற்றை எல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செயல்படுத்தினோம்? எவற்றை எல்லாம், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் வேண்டி கைவிட்டோம்?
தானும் தன்னைச் சார்ந்த தம் குடும்பத்தினர், அண்டை வீட்டினர், உறவினர்கள், தோழர்கள், தான் அன்றாடம் சந்திக்கக் கூடிய தமது சக ஊழியர்கள், முதலாளிகள், தன் கீழ் தன் நிர்வாகத்தில், தன் வீட்டில் பணி புரியும் ஊழியர்கள், தமது வியாபார வாடிக்கையாளர்கள் என்று பலரும் இதன் மூலம் பெற்ற பயன் என்ன? போன்ற பல கேள்விகளையும் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றனர்.
oOo
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
(மீள் பதிவு)