மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்ட ஸ்விஸ் முஸ்லிம்களுக்கு அனுமதி

{mosimage}ஜெனிவா: ஸ்விஸ் நாட்டில் மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்குகளை பிராந்திய நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்து மினார்கள் வைத்துக் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

ஸ்விஸ் நாட்டிலுள்ள வேங்கன் எனும் நகரில் 6 மீட்டர் உயரத்திற்கு மினார்கள் வைத்துக் கட்ட  நகராட்சி மன்றத்திடம் அனுமதி கோரி இருந்தது. இதையடுத்து உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புகள் சில ஸ்விட்சர் லாந்தின் கிறிஸ்தவ அடையாளத்தை இது மறைத்துவிடும் என்றும், இஸ்லாமிய அடையாளங்கள் ஸ்விஸ் நாட்டிற்கு உகந்தவை அல்ல என்றும் காரணங்கள் காட்டி இந்த கோரிக்கையை நிராகரிக்கக் கோரி இருந்தன.

இதனால் நகராட்சி அமைப்பு இந்த அனுமதியைத் தடை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்த அனுமதியைக் கோரியிருந்த முஸ்லிம்கள் பிராந்திய நீதிமன்றத்தில் இந்தத் தடையை ரத்து செய்யுமாறு கோரி மனு அளித்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்தத் தடையையும் அது தொடர்பான உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புகளின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால் இதற்கு முன் இரு மஸ்ஜித்கள் மட்டுமே மினார்களுடன் இருந்து வந்த ஸ்விஸ் நாட்டில் மினார் அமைத்து மஸ்ஜித்கள் கட்டப்பெறுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளது.

74 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள ஸ்விஸ் நாட்டில் 3.4 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இந்நாட்டில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது.