வடகொரியா அணுஆயுதச் சோதனை!

{mosimage}பியாங்யாங்: பல்வேறு உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே வடகொரியா நேற்று அணுஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அணுஆயுத வல்லமை பெற்ற மிகச் சில நாடுகளில் ஒன்றாக வடகொரியாவும் ஆகியுள்ளது. தொடக்கம் முதலே அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் இருந்த வட கொரியா அணுஆயுதச் சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஈரான் தன்னிடம் அணுஆயுதங்கள் ஏதும் இல்லை என்றும், தனது தற்போதைய யுரேனியச் செறிவூட்டல் மின்னுற்பத்திக்காக மட்டுமே எனப் பலமுறை கூறிவந்தாலும், அமெரிக்கா யுரேனியச் செறிவூட்டலை அனுமதிக்க முடியாது என ஐநா மூலம் நிர்ப்பந்தித்து வந்தது தெரிந்ததே. ஈரான் இதற்கு இணங்க மறுத்து வருவது ஒரு புறமிருக்க, வடகொரியா தன் போக்குக்கு இந்த ஆய்வைச் செய்து, அணுஆயுதத்தையும் வெடிக்கச் செய்துள்ளது, அமெரிக்கா மட்டுமல்லாது அதன் நேச நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளையும் கிலி அடையச் செய்துள்ளது.

வடகொரியாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் சீனாவும் இந்த சோதனையைக் கடும் வார்த்தைகளால் விமர்சித்து உள்ளது. இந்த சோதனை குறித்த இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

வட கொரியா மீதான கடும் நடவடிக்கைகள் அந்நாட்டின் சர்வதேச விரோத போக்கை மேலும் தீவிரம் அடையச் செய்யும்; எனவே பேச்சு வார்த்தை மூலமே வட கொரியாவை இணங்க வைக்க இயலும் என ரஷ்யாவும் சீனாவும் அறிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இது குறித்து பேசும் போது இது அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்கும் செயல் என்றும் வடகொரியா அணுஆயுதங்களை ஏதேனும் இன்னொரு நாட்டிற்கு வழங்கினால் அது அமெரிக்காவுக்கு எதிரான போர் என்றே கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இஸ்ரேல் இது குறித்துக் குறிப்பிடுகையில், ஈரானுக்கு வட கொரியா அணுஆயுதம் கொடுத்து அதன் மூலம் இஸ்ரேலினைத் தன் இலக்குக்குள் வைத்துக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகக் கூறியுள்ளது.