காஸாவினர் துயர்துடைக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை – டாக்டர். கர்ளாவி

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதாகச் சொல்லி அமெரிக்க அதிபர் புஷ் நடத்திய சுற்றுப் பயணத்திற்குப் பின்னர் காஸாவின் மீது இஸ்ரேல் அவிழ்த்து விட்டிருக்கும் அராஜகம் காட்டுமிராண்டித் தனமானதாகும். மின்சாரத்திலிருந்து எண்ணெய் வரை காஸா மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து மூலப் பொருட்களையும் நிறுத்தி வைத்துள்ள இஸ்ரேலின் செயல் மனிதத்தன்மையற்றதாகும்.

தங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான மருத்துவ உதவி கூடச் செய்ய இயலாத நிலையில் ஹமாஸ் எகிப்து-பாலஸ்தீன் எல்லையான ரஃபஹ்-வை உடைத்து வாழ்வாதாரம் மறுக்கப்பட்டப் பாலஸ்தீன் மக்களை வாழ்வாதாரம் தேடி எகிப்துக்குள் செல்ல வைத்தது. இதனையும் பொறுக்கமாட்டாத அமெரிக்க-இஸ்ரேலிய ஆளும் வர்க்கங்கள் உடன் எகிப்து தனது எல்லையை மூட வேண்டும் என அகங்காரக் கூக்குரல் எழுப்பியுள்ளது.

 

இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி எகிப்து தனது இராணுவத்தின் ஒரு பகுதியினை ரஃபஹ் எல்லைக்கு அனுப்பி எல்லையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளி (25/01/2008) அன்று கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாதக் காரணத்தினால் ஓய்வில் இருந்த சிறந்த முஸ்லிம் அறிஞரான டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் ஆறு மாதத்திற்குப் பின் முதன் முதலாக தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சொந்த நிலமிழந்துத் தவிக்கும் நீதி மறுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் அவலநிலைக்குக் காரணமான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு அராஜகத்திற்கு எதிராகக் களமிறங்கும் படி உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

1973 ல் அரபுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடந்த யுத்தம், “அரபியர்க்கும் இஸ்ரேலியர்க்கும் இடையிலான கடைசி யுத்தம்” எனும் அபிப்பிராயத்தை ஒதுக்கித் தள்ளினார். மேலும், “அமெரிக்காவின் உதவியோடு தற்பொழுதும் ஆயுதங்களை இஸ்ரேல் சேகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இது ஒரு தவறான அபிப்பிராயமாகும்” எனஅவர் கூறினார்.

“யுத்தம் இன்னமும் தொடரும் வேளையில் மக்கள் அவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதை ஏன் நிறுத்தினர் என்று எனக்குத் தெரியவில்லை. அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இப்பகுதியின் மீதான அமெரிக்காவின் ஆர்வத்தில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே, பாலஸ்தீன் விவகாரம் உட்பட நமது விவகாரங்களில் அவைகளின் நிலைபாடுகளை மாற்றியமைக்கும்” எனவும் அவர் கூறினார்.

பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு உதவும் முகமாக நன்கொடைகளை அனுப்ப வேண்டும் என உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். காஸா பகுதிகளில் வாடும் மக்களின் துயர் துடைக்க நுண்ணிய வழிகளில் உழைப்பவர்களைப் புகழ்ந்துரைத்த அவர், “கடுமையான சோதனையில் உள்ள பாலஸ்தீன் முஸ்லிம்களுக்கு நன்கொடை வழங்குவதும் ஒரு வகையில் புனிதப் போராட்டமே” என்றார்.

“நமது ஒன்றிணைந்த முயற்சியின் மூலமே அராஜகத்தின் கீழ் அல்லல்படும் நம் சகோதரர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்; எனவே நம் முயற்சிகளை வலுவூட்டுவது அவசியம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சிக்கலைத் தீர்க்குமுகமாக பாலஸ்தீனக் குழுக்களுக்குள் கெய்ரோவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த எகிப்து இன்று (26/01/2008) தெரிவித்த ஆலோசனையை உடனடியாக ஹமாஸ் ஏற்றுள்ளது. ஃபதாஹ் அமைப்பு இது குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.