கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிய மனித உரிமைக் குழு அவசரச் செய்தியறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஆஃபியா சித்திக்கீ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திடீரென்று ஒருநாள் காணாமல் போனதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவரைக் கடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அமெரிக்காவின் FBI யும் பாகிஸ்தானின் உளவுத்துறையும் மறுத்து வருகின்றன. ஆனால் இவர் அல்காய்தா தீவிரவாதியாக இருக்கக் கூடும் என்றும் இவரைத் தேடி வருவதாகவும் கூறி அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் பரப்பப்பட்டன. இவரது கடத்தல் மற்றும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு ஆகியவற்றில் அதிபர் பர்வேஸ் முஷ்ராப்பின் ஆசிகள் இருப்பதாக நம்பகரமான செய்தி வட்டாரங்களில் பதிவாகியுள்ளது. அரசியல் விளையாட்டில் பகடைக் காயாகிப் போன அப்பாவிப் பெண் டாக்டர் ஆஃபியா பற்றிய ஒரு சிறு செய்தித் தொகுப்பு இது. |
கடந்த மார்ச் 30, 2003 அன்று சிந்து மாகாணம் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிலிருந்து பஞ்சாப் மாகாணமான ராவல்பிண்டிக்குக் கிளம்பினார் டாக்டர் ஆஃபியா சித்திக்கீ.
டாக்ஸியில் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பிச் சென்றவர் ஏர்போர்ட் சென்று சேரவில்லை. செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டார் என்றும் American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள்.
ஒரு வயதுப் பச்சிளம் பாலகன் உட்பட மூன்று குழந்தைகளுக்குத் தாயான டாக்டர் ஆஃபியா சித்திக்கீ குழந்தைகளுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 30.
சொல்லி வைத்தது போல் இரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC யில் செய்திகள் வெளியாகத் துவங்கின.
அதாவது டாக்டர் ஆஃபியா, ஒஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதாகக் காரணம் காட்டி தேடப்படுவதாகத் திரும்பத் திரும்பச் செய்திகள் வரலாயின.
NBC யின் இச்செய்தியினை டாக்டர் ஆஃபியாவின் தாயார் திருமதி. இஸ்மத் (தற்போது உயிருடன் இல்லை) வன்மையாக மறுத்துள்ளார். டாக்டர் ஆஃபியா நரம்பியலில் விஞ்ஞானியாக (neurological scientist) இருப்பதையும் அவர் தம் கணவர் அம்ஜத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததையும் சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1, 2003 இல் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஒரு உருது தினசரி நிருபரின் கேள்விக்கு பக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ஃபைசல் சாலிஹ் ஹயாத் அளித்த பேட்டி ஒன்றில் டாக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை அவசர அவசரமாக மறுத்துள்ளார்.
அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2, 2003 இல் வேறொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு மாதிரியாக மாறியிருந்தது. டாக்டர் ஆஃபியாவுக்கு அல் காய்தா தொடர்பிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார். கூடவே “டாக்டர் ஆஃபியாவின் செயல்பாடுகளை அறிந்தீர்களாயின் நீங்கள் திகைத்துப் போவீர்கள்” என்றும் பேட்டியளித்துள்ளார்.
இப்படி டாக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் தாறுமாறான பேட்டி வெளியாகியும் ஆஃபியாவின் தாயாரின் மறுப்பிற்கும் ஒருவாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டாக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து கடுமையாக எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர் என்று கராச்சியின் பிரபல ஆங்கில இதழ் சிறப்புச்செய்தி வெளியிட்டது.
“பெரும் தீவிரவாதிகளுடன் உங்களுக்குத் தொடர்பு உண்டு என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் ஊதி பெரிதாக்குவது உங்களுக்கு நல்லதில்லை” என்றும் “மீறினால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!” என்றும் டாக்டர் ஆஃபியாவின் தாயாருக்கு “அன்பு” எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டாக்டர் ஆஃபியாவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமளிகள் ஆரம்பித்தன.
களேபரம் உச்சகட்டத்தை எட்டிவிட, அழுத்தம் தாங்கமுடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி பற்றிய தனது ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறைக் காவலர்களால் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலையும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் சக ஆண் கைதிகளுக்கான கழிப்பறைகளில் அவர்களின் கண்ணெதிரே ….
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6, 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான யுவான் ரிட்லி. சமீபத்தில் செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து, உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார். (வாசிக்க: Press TV யின் Four years in Bagram as Prisoner 650 – Yvonne Ridley)
“அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்” என்று பதைபதைக்கிறார் யுவான் ரிட்லி.
அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார் யுவான் ரிட்லி.
பயணத்தின் போது முஆஜம் பெக் என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி ஒருவர் எழுதிய The Enemy Combatant என்ற நூலை வாசித்த போது அவருக்குப் பொறி தட்டியது. (YouTube வீடியோ – screams of a Muslim sister)
அந்த நூலில் முஆஜம், இஸ்லாமாபாத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 2002 இல் தான் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் அப்பெண் பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். முஆஜம் 2005 ஆம் ஆண்டு குவாண்டனமோவில் இருந்து விடுதலை ஆனபின் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்நூலை எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து Justice Party கட்சியின் தலைவராக உள்ள இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். Prisoner 650 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்பெண் பற்றியத் தகவல்களை அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசும் இணைந்து சாமர்த்தியமாக மறைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அன்றிலிருந்து இன்றுவரை, அமெரிக்காவோ பாகிஸ்தான் அரசோ டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து பக்ரம் சிறைச்சாலையில் அடைத்த விஷயத்தை வெளியே சொல்லாததன் மர்மம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
இது தொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட டாக்குமெண்டரி (மேலே)
கடந்த டிசம்பர் 30, 2003 இல் டாக்டர் ஆஃபியாவின் மூத்த சகோதரியான டாக்டர் ஃபவுஜியா சித்திக்கீ மற்றும் MNA உறுப்பினரான இஜாஜூல் ஹக் இருவரும் மேலே நாம் கூறிய அமைச்சர் ஃபைஸல் சலாஹ் ஹயாத்தைச் சந்தித்தனர். ஏற்கனவே முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருந்த பொறுப்புள்ள பதவியில் உள்ள அமைச்சர் அச்சமயத்தில் பதிலளிக்கையில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஆஃபியா ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
கூடுதல் தகவல்கள்: டாக்டர் ஆஃபியா அமெரிக்காவின் Massachusetts Institute of Technology யில் பயின்றவர். பத்து வருடங்கள் ஒதுக்கி மரபியல் துறையில் தனது ஆழமான ஆய்வுக்காக PhD பட்டம் பெற்று கடந்த 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பியவர். மிகத் திறமையான விஞ்ஞானி என்று பெயர் வாங்கியவர். தான் விரும்பிய சவால் மிக்கதொரு பணி பாகிஸ்தானில் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் 2003 பிப்ரவரியில் அமெரிக்கா திரும்பினார். அங்கு வேலை தேடி முறையாக விண்ணப்பித்த இவர் அதற்குத் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். மீண்டும் பாகிஸ்தான் திரும்பும் முன்பாக, விண்ணப்பித்திருந்த நிறுவனங்களிடம் இருந்து பணி அழைப்பிற்கான தகவல்களைத் தனது வீட்டில் பெற்றுக் கொள்ள அமெரிக்காவில் போஸ்ட் ஆஃபிஸில் போஸ்ட் பாக்ஸ் கணக்கினைத் திறந்து விட்டு வந்தார்.
நியூஸ்வீக் இண்டர்நேஷனல் ஜூன் 23, 2003 இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் டாக்டர் ஆஃபியா அல்காய்தாவினுடையது என்று அவர் மீது FBI குற்றம் சாட்டியது.
மார்ச் 2003 முழுக்க ரேடியோ, டிவி, மற்றும் செய்தித்தாள்கள் என அமெரிக்க ஊடகங்கள் ஒட்டுமொத்தத்திலும் ஆஃபியாவின் புகைப்படங்கள் மின்னிக் கொண்டிருந்தன. (உதாரணத்திற்கு அமெரிக்க ஊடகமான ஃபாக்ஸ் நியூஸ்-இன் செய்தி இங்கே யூ ட்யூப் வீடியோ வில்) திட்டமிட்டபடியே மிக மிக ஆபத்தானவர் என்றும் FBI வலை வீசித் தேடிவரும் அல்காய்தா தீவிரவாதி என்றும் ஆஃபியாவுக்கு அழுத்தமான முத்திரை குத்தப்பட்டது. ஆனால் அதேவேளை, “டாக்டர் ஆஃபியா சித்தீக்கீ எந்த விதமான தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக எவ்விதத் தகவலும் இல்லை எனவும் சில தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக விசாரணை செய்ய அவர் தேடப்படுகிறார்” என்று FBI யின் அதிகாரபூர்வ தளம் செய்தி வெளியிட்டிருந்தது. தனக்கு எதிரான-புதிரான செய்திகள் அமெரிக்காவில் மின்னிக் கொண்டிருந்த வேளையில் ஏதுமறியாமல் பாகிஸ்தானில் தனது வீட்டில் இருந்தார் டாக்டர் ஆஃபியா.
கடந்த மே, 2003 இல் நியூஸ் லைன் இதழில் வெளியான செய்தியின் சாராம்சம் – Mysterious Cover-up
ஜூன் 23, 2003 நியூஸ்வீக் இண்டர்நேஷனல் இதழ் அல் காய்தா சிறப்பிதழாக மலர்ந்தது. Al Qaeda’s Network in America என்று தலைப்பிட்டிருந்த இதழில் அல் காய்தா உறுப்பினர்கள் என டாக்டர். ஆஃபியா சித்திக்கீ (பாகிஸ்தான்) – காலித் ஷேக் முஹம்மத் – அல் மர்ரி (கத்தார்) ஆகிய மூவர் பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. FBI யின் ஆவணங்களைப் பார்வையிட அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டு எட்டு அமெரிக்கச் செய்தியாளர்கள் படை சூழ எழுதப்பட்ட இந்த சிறப்புக் கட்டுரையில் டாக்டர் ஆஃபியாவின் மீது அமெரிக்கா தீவிரவாத முத்திரை குத்தியதற்கான ஒரே காரணம் அவர் பயன்படுத்திய போஸ்ட் பாக்ஸ் அல்காய்தாவுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற யூகம்தான் என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
|
Prisoner 650 என்ற அடையாளப் பெயர் சூட்டப்பட்டுக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் டாக்டர் ஆஃபியாவிற்கு, இன்னின்ன முறையிலான சித்திரவதைகள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தகைய அடையாளப்பெயர் இடப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் உள்ளது.
ஏற்கெனவே இதற்கு முன்பு குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் கடும் போராட்டத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல் ஹாஜிற்கு (வாசிக்க: சத்தியமார்க்கம்.காம் செய்தி) Prisoner 345 என்ற அடையாளப்பெயர் சூட்டப்பட்டிருந்ததும் அத்தகைய அடையாளப்பெயர் கொண்ட கைதிகளுக்குத் தனிப்பட்ட முறையிலான சித்திரவதைகள் செய்யப்படும் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
ஒரு பெண் என்றும் பாராமல் மனித குலமே வெட்கி தலை குனியும் வகையில் அமெரிக்க உளவுதுறை செய்து வரும் இத்தகைய கொடூரங்களுக்கு முடிவு காலம் எப்பொழுதோ? சமுதாயப் பெண்டிரும் அப்பாவிகளும் அநியாயமாக அக்கிரமக்காரர்களால் சூறையாடும் பொழுதும் நீதிக்காவும் நியாயத்திற்காகவும் போராட முன்னணியில் நிற்க வேண்டிய முஸ்லிம் உம்மத்திற்கு ஒரு பாடம்.
இச் செய்தியறிந்தபின் இன்று வரை மக்கள் மனதில் விம்மி எழும்பிக் கொண்டிருக்கும் கேள்விகள்:
– இவ்வளவு அமளிகள் நடந்தும் கண்டும் காணாதது போல் காவல்துறையும், உளவுத்துறையும் மவுனம் காப்பது ஏன்?
– டாக்டர் ஆஃபியா இப்போது FBI யின் பாதுகாவலில் சிறை வைக்கப் பட்டுள்ளாரா அல்லது ISI யின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளாரா?
எது எப்படியோ அமெரிக்காவும், பாகிஸ்தானின் முந்தைய முஷர்ரஃப் அரசும் இணைந்து அல் காய்தா பெயர் சொல்லி இது நாள் வரை நடத்தி வந்த கொய்தலில் எண்ணிலடங்கா அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காயாய் மாறிப் போன, உடலில் உயிர் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கருதப் படும் அப்பாவியான டாக்டர் ஆஃபியா திரும்பி வர இறைவனைப் பிரார்த்திப்போம். (பார்க்க: வீடியோ: இஸ்லாம் என்ன சொல்கிறது?)
இதை வாசித்து முடித்து விட்டு செய்ய வேண்டியது என்ன? |
— ஜார்ஜ் புஷ், கர்ஜாய், கிலானி, ஃபாரூக் நாயக் மற்றும் ரஹ்மான் மாலிக் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பும் ஆசிய மனித உரிமைக் குழுவின் விண்ணப்பத்தை நிரப்புங்கள் — டாக்டர் ஆஃபியாவின் விடுதலைக்காக பெட்டிஷன் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்யுங்கள். — விழிப்புணர்வை உண்டாக்கும் நடவடிக்கை மற்றும் தொடர்பான FaceBook குழும செயற்பாடுகளுக்காக இங்கே அல்லது இங்கே சென்று பதிவு செய்யுங்கள். — சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியாகியுள்ள இத் தகவலை தமிழ் அறிந்த, அறியாத சக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல், SMS மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அத்தனை வழிகளிலும் இயன்றவரை எடுத்துச் சொல்லுங்கள். — அனைத்திற்கும் மேலாக, இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்.
وَمَا لَكُمْ لاَ تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاء وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். (4:75) |
கூடுதல் தகவல்களுக்கு உதவிய தளங்கள்: Muslimpad.com / Teeth.com
– அபூ ஸாலிஹா