லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!

நூலாசிரியர் ஹூக் மைல்ஸ்

லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின் மக்கள் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக விமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் வரலாற்று பிரசித்தி பெற்ற லெபனானின் கானா பிரதேசத்தில் (Qana – உலக கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் இயேசுவின் முதல் அற்புதம் வெளியான திருமண விருந்து நிகழ்ச்சி நடந்த இடம்) இஸ்ரேலின் தாக்குதலால் வீடுகளை இழந்த பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்த ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் அமெரிக்கா தனக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஏவுகணைகளை வீசி 37 குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொழித்தது.

இவ்வளவு குரூரமான, இரக்கம் உள்ள மனிதர்களால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாத கொடுஞ்செயலை இஸ்ரேல் செய்த பிறகும் இஸ்ரேலின் கொடுஞ்செயலுக்கு எதிராக – அதன் பயங்கரவாத செயலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ள தயாரில்லை. உலக நாடுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவைகளுக்கு ஏன் இந்த இழி நிலை? பச்சிளம் குழந்தைகளை கொத்து கொத்தாக கண்முன் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் செயல் பயங்கரவாதமில்லையா? இதற்கு எதிராக போராட யாரும் களமிறங்காததன் காரணம் என்ன?

அரபு-இஸ்ரேலிய பிரச்னைகளில் இஸ்ரேல் புரியும் அட்டூழியத்தைப் பொறுத்தவரை உலக நாடுகள் கடைபிடிக்கும் மவுனத்திற்கும் பாராமுகத்திற்கும் காரணம் அமெரிக்க ஊடகங்களே. 

அரபு-இஸ்ரேலிய பிரச்னையில் அவைகள் தந்த உண்மைக்குப் புறம்பான, நியாயமற்ற பாரபட்சமான செய்திகளின் விளைவுகள் தான் இவை. 

அல் ஜஸீரா: உலகிற்கு அரபு தொலைக்காட்சிகளின் சவால்’ (Al-Jazeera: How Arab TV News Challenged the World) என்ற நூலை எழுதிய ஹுக் மைல்ஸ் (Hugh Miles) அவர்கள் The Straight Times இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேல்-லெபனான் பிரச்னையை எவ்வாறு பாரபட்சமாக சித்தரிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார்.

The Straight Times – July 26, 2006 இதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: லெபனான் நிகழ்வுகளை அரபு ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்கள் வித்தியாசமாக சித்தரிக்கின்றன என எவ்வாறு கூறுகிறீர்கள்?

இந்தப் போருக்கு முந்திய நிகழ்வுகளை அமெரிக்க ஊடகங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.  இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை அவை ‘நியாயமான எதிர்வினை’ என்பது போல குறிப்பிடும் அதே வேளையில், இப்பிரச்னையின்  வரலாற்றுப்  பிண்ணனியையோ,  இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9000-க்கும் மேற்பட்ட அரசியல்  கைதிகளைப்  பற்றியோ குறிப்பிடுவதில்லை.  இக்கைதிகளுள் பெண்களும், 14 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் அடங்குவர்.

ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு ஈரான் மற்றும் சிரியாவுடன் கொள்கைரீதியில் தொடர்புகள் இருந்த போதிலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நம்புவது போல, ஹிஸ்புல்லாஹ் இவ்விரு நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் செயல்படுகிறது என்பது உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஷேக் நஸ்ரல்லா தனது  சுய முடிவுகளின்படியே செயல்படுகிறார் என்பதுதான் உண்மை. 

இஸ்ரேலிய குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அமெரிக்க ஊடகங்கள், அரபு குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

காஸா பகுதி குறித்த அமெரிக்க செய்திகள் ‘ஆக்ரமிப்பு’ ‘ஆக்ரமிக்கப்பட்ட பகுதி’ போன்ற சொற்களை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவதில்லை.  அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் ‘சர்ச்சைக்குரிய பகுதி’ (‘contested’ or ‘disputed’) அல்லது வெறுமனே ‘இஸ்ரேல்’ என்றே குறிப்பிடப் படுகின்றன.

இஸ்ரேல் நடத்தும் அரசியல் படுகொலைகளை அமெரிக்க ஊடகங்கள் ‘குறிவைக்கப்பட்ட தாக்குதல்’ (targeted killings) என வர்ணிக்கின்றன. இஸ்ரேலின் ராணுவம் ‘பாதுகாப்புப் படை’ (security forces)யாகிறது. சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசங்கள் கூட ‘குடியிருப்புப் பகுதிகள்’ (neighbourhood) என அழைக்கப்படுகின்றன.

தமிழாக்கம்: இப்னு பஷீர்