நியூயார்க்: முன்னாள் பிரதமர் பெனஸீர் பூட்டோவின் கொலை தொடர்பான விசாரணையிலிருந்து பிரித்தானிய விசாரணை அமைப்பு ஸ்காட்லண்ட் யார்டு விலக வேண்டும் என உலக மனித உரிமை கழகம் (Amnesty International) கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கீழ் ஒரு எல்லைக்கு உட்பட்டு விசாரணை நடத்த மட்டுமே ஸ்காட்லண்ட் யார்டு விசாரணை அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கீழ் நடக்கும் விசாரணையில் நம்பிக்கை இல்லை என மனித உரிமை கழகம் கூறியது. அத்தகையதொரு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதே ஸ்காட்லண்ட் யார்டின் நற்பெயருக்கு நல்லது எனவும் மனித உரிமை கழகம் தெரிவித்தது.
பெனஸீர் பூட்டோ கொல்லப்பட்டதிலிருந்து நாளுக்கு நாள் அவர் கொல்லப்பட்ட விதத்தை மாற்றி மாற்றிக் கூறிக் கொண்டிருந்த முஷரபின் பாகிஸ்தான் அரசு, ஆரம்பத்திலிருந்தே அவரின் கொலைக்குக் காரணம் அல்காயிதா தான் என அமெரிக்க வழிமுறையைப் பின்பற்றி ஒருதலை பட்சமாக அறிவித்த நிலைபாட்டில் இன்று வரை உறுதியாக உள்ளது.
இந்நிலையில் பெனஸீர் பூட்டோவின் கொலை விசாரணையில் உதவ முன்வந்த ஸ்காட்லண்ட் யார்டு விசாரணை அமைப்புக்கு, "பெனஸீர் எவ்வகையில் கொல்லப்பட்டார்" என்பதைக் குறித்து மட்டுமே விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. "பெனஸீர் கொலையின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்?" என்பதைக் குறித்து விசாரிக்கும் அதிகாரம் ஸ்காட்லண்ட் யார்டிற்கு கொடுக்கப்பட்ட அனுமதியில் இல்லை. குறுகிய எல்லை வகுக்கப்பட்ட இத்தகையதோர் கண்துடைப்பு விசாரணையில் இருந்து ஸ்காட்லண்ட் யார்டு விலக வேண்டும் எனவும் சுதந்திரமான ஒரு சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக வேண்டும் எனவும் உலக மனித உரிமை கழகத்தின் ஆசியா டைரக்டர் ப்ராட் ஆடம்ஸ் கோரிக்கை விடுத்தார்.
அரசியல் கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்களைக் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படாமல் இருந்ததற்கான ஆதாரங்கள் பாகிஸ்தானில் அதிகம் உண்டு. அதனால் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளும் பெனஸீர் கொலை தொடர்பாக ஐ.நா தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு தயாராகும் விதத்தின் அதன் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை கழகம் கோரிக்கை விடுத்தது.
பெனஸீர் இறந்தது அவர் பயணம் செய்த வாகனத்தின் மேல் பாகம் தலையில் இடித்தக் காரணத்தினால் தான் என முன்னுக்குப் பின் முரணாகக் கூறி வந்த பாகிஸ்தான் அரசு, அவர் கொல்லப்பட்டது கொலையாளியின் கையிலிருந்தத் துப்பாக்கியினால் தான் என்பதற்கான ஆதாரங்களைத் தொலைகாட்சி நிறுவனங்கள் வெளியிட்டப் பின்னரே அவர் இறந்த விதத்தைக் குறித்து விசாரிக்க மட்டும் ஸ்கார்ட்லண்ட் யார்டின் உதவியை ஏற்றுக் கொண்டது. எனினும் இதுவரை பாகிஸ்தானும் அமெரிக்காவும் பெனஸீரின் கொலையின் பின்னணியில் அல்காயிதா தான் எந்த ஆதாரமும் இல்லாமல் அல்காயிதா தலைவர்களே மறுதலித்தப் போதிலும் அந்நிலைபாட்டில் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது