மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?

Share this:

மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை  நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து வரும் ATS – (Anti Terrorist Squad) மூலம் தெரியவந்தது.


மேலும் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக பெண் சாமியார் பிரக்யாசிங், ராணுவ அதிகாரி புரோகித், சாமியார் தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா, ராகேஷ் தவாடே, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி உள்பட 11 பேரை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பைத் தீவிரவாத தாக்குதலின்போது படுகொலை செய்யப் பட்ட மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படை ATSயின் தலைவரான ஹேமந்த் கார்கரேயின் படுகொலைக்குப் பிறகு 90 நாட்களில் தீர்ந்துவிடும் என்று கார்கரே தன்னுடைய கடைசி பேட்டியில் உறுதியாக சொன்ன மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என்ற நாட்டு மக்களின் கவலையை நிஜமாக்கும் விதத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கார்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் ATS-ன் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார்.

அப்போது அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.

ஷிவானந்த் திவாரியின் கருத்து:-

இந்தத் திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கார்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு வந்து உளவு எடுப்பது குறித்து வகுப்பு எடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி.

போலீஸ் காவலுக்கு அனுமதி மறுப்பு:-

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் ஆஜரானார். அவர், “மாலேகானில் குண்டுவெடிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சுதாகர் சதுர்வேதிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை அவரது வீட்டில் கைப்பற்றி உள்ளோம். மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராம்ஜி கால்சங்கரா சதுர்வேதி வீட்டில்தான் தங்கி இருந்துள்ளார்.  இதுபற்றி சதுர்வேதியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும்” என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்து பிரக்யாசிங் உள்பட 11 பேரையும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தயானந்த் பாண்டே கோர்ட்டுக்கு வெளியில் வைத்து சகோதரரின் செல்போன் மூலம் தனது மகனுடன் பேச நீதிபதி அனுமதி வழங்கினார். இதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உண்மை நிலை :-

இது ஏதோ மலேகானில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் – திருநெல்வேலி மாவட்டம் – தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டதும் அந்தச் சம்பவத்தில் இந்து முன்னனியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. ஆனால், குண்டுகள் வெடித்தவுடன் அப்போது அதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMIயும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும் “இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும் நினைவை விட்டு மாறாதவை.

தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்து உதவிகளையும் நல்கி வந்த மஹாராஷ்டிர துணை முதல்வர் R.R. பாட்டிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனவே மாலேகான் விசாரணை என்ன ஆகும் என்று ATSஇல் பணிபுரிபவர்களே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஹேமந்த் கார்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.

“தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்” என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம் 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறியும்வரை நம்முடைய லட்சியப் பயணங்கள் தொடர வேண்டும்.

நன்றி: ஃபிர்தௌஸ் – புதிய தேசம்(பெப்ருவரி 2009)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.