நோன்பு வரும் பின்னே – பிறைக்குழப்பம் வரும் முன்னே!

Share this:

கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு என்ன? எல்லாரும் பழையபடி மகிழ்ச்சியாக, ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாடக்கூடிய நாள் எப்போது வரும்?

 பதில்: நோன்பு மாதத்தில் பிறை தொடர்பாக ஒரே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஊரில் பல பெருநாட்கள்; ஒரு குடும்பத்தில் பல பெருநாட்கள். மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.

‘நோன்பு வரும் பின்னே பிறைக் குழப்பம் வரும் முன்னே’ என்று சொல்கிற அளவுக்கு இன்று சமுதாயத்தில் இதை ஒரு பிரச்னையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினார்கள், “மூன் சைட்டிங்கா, மூன் ஃபைட்டிங்கா?” – பிறையைப் பார்ப்பதா, பிறைக்காகச் சண்டை போடுவதா? எனும் ஒரு நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.

இதெல்லாம் ஓர் இருபது ஆண்டுகளாகத்தான். தமிழ்நாட்டில் இதை ஒரு பிரச்னையாக எல்லாம் யாரும் பண்ணவில்லை. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைமைக் காஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டு எல்லாரும் நோன்பு பிடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். பெருநாளைக் கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்கள். இடையில் இந்தக் குழப்ப நிலைகள் உருவாக்கப்பட்டு ஒரு பிரச்னையாக ஆக்கப்பட்டிருப்பது நம் எல்லாருக்கும் கவலை தரக்கூடிய விஷயம்தான். ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதில் ஒத்தக் கருத்தில்தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில பிரிவினர்தான் இதைப் பிரச்னையாக ஆக்கிக் கொண்டு இந்த நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பிரச்னைக்கு எப்படி முடிவு காண்பது?

முதலாவதாக சில அடிப்படைகளை நாம் மனதிலே கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். எப்படி ஜும்ஆவை ஒரே இடத்தில் ஒரே தலைமையில் நின்று வணங்கி ஒற்றுமையை உண்டாக்குகிறோமோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும். முஸ்லிம்களின் ஒற்றுமையை, மகிழ்ச்சியைக் காட்டுகிற சம்பவமாக நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வு எல்லா முஸ்லிம் அமைப்புகளுக்கும், எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்க வேண்டும்.

வெட்கமாக இல்லை?

ஓர் ஊரில் மூன்று பெருநாள் கொண்டாடுவது, ஒரு வீட்டில் மூன்று பெருநாள் கொண்டாடுவது எவ்வளவு இழிவான, கேவலமான, எல்லோராலும் கேலி அடிக்கப்படுகிற, பிறரால் ஏளனமாகப் பார்க்கப்படுகிற நிகழ்ச்சி என்பதைக்கூட இந்தத் தோழர்களால் புரிந்து கொள்ள முடியாதா?

இரண்டாவதாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், இது தனி மனிதர் விவகாரமன்று. தனி மனித விவகாரத்தில் அவரவர் எப்படியும் முடிவு செய்து கொள்ளலாம். தொழுகையின்போது தக்பீரில் கையை எங்கே வைக்க வேண்டும், அத்தஹியாத்தில் கை எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் தனிமனிதர் பிரச்னைகள். இவர் இப்படி இருக்கலாம்; அவர் அப்படி இருக்கலாம். அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், பெருநாள் என்பது முழு முஸ்லிம் சமுதாயத்தையும் கட்டுப் படுத்துகிற விஷயம்.

இதில் எனக்கு இது சரியாகப்படுகிறது, எனக்கு அது சரியாகப்படுகிறது என்று பிரிக்கிற விவகாரம் அல்ல இது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகிற விஷயத்தில் எல்லாரும் ஒத்துப் போய்தான் காரியங்களைச் செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, இது ஒரு அகீதா சம்பந்தப்பட்ட விஷயமன்று. அகீதா சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் கொஞ்சம் உறுதியாக இருந்து தான் ஆக வேண்டும். ஏனெனில், அதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கிடையாது. அது அடிப்படையான விஷயம். ஓர் உம்மத்தின் – சமுதாயத்தின் தலைமை – கலீஃபா இருந்தால் – அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். கலீஃபா இல்லாத இடத்தில் காஜியோ வேறு தலைவரோ இருந்தால் அவர் முடிவு செய்கிற விஷயம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் இதற்கான விடையும் நமக்குக் கிடைக்கும்.

இப்போது சிலர் கேட்கிறார்கள். விஞ்ஞானத்தின் துணைகொண்டு இதை முடிவு செய்தால் என்ன? வானிலை அறிவிப்பு மையங்களைச் சார்ந்து அவர்களிடத்தில் கேட்டு இதற்கு முடிவு செய்தால் என்ன? இஸ்லாம் இதற்குத் தடையா? என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். நபிகள் நாயகம் என்ன சொல்கிறார்கள்? “பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” இதுதான் சொல்லப்பட்ட கருத்து. பிறை பார்ப்பதை நேரிடையாகக் கண்ணால்தான் பார்க்க வேண்டுமா? கருவிகள் துணை கொண்டு பிறை பார்ப்பது தவறா? இஸ்லாத்தில் அதற்கு ஏதேனும் தடை உண்டா? இல்லையே..! பிறை பார்க்க வேண்டும் அவ்வளவு தானே? கண்ணால் பார்த்தால் என்ன? கருவியால் பார்த்தால் என்ன?

அமெரிக்காவிலே இதற்கான சில ஏற்பாடுகளைச் செய்தார்கள். இஸ்லாமிக் ஷூரா கவுன்ஸில் யூ எஸ் ஏ – அமெரிக்க இஸ்லாமிய ஆலோசனை மையத்தில் இது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதற்கானப் பொறுப்பு சையத் ஷகீல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்து அவர் பல கருத்துகளைச் சொன்னார்.

நேரடியாகக் கண்ணால் பார்ப்பதைவிட கருவியால் பார்ப்பது துல்லியமானது. கண்ணால் பார்க்கும்போது பிறையல்லாத வேறு பொருட்களைப் பிறை என்று முடிவு செய்த சம்பவங்களும் உண்டு என்கிறார். எனவே, கருவியால் பார்ப்பது அல்லது வானவியல் கணக்கீடுகள் மூலம் பார்ப்பது மிகத் துல்லியமானது. விஞ்ஞானத்தின் மூலம் பார்த்துச் சொல்லப்படும் தகவல் உறுதியானது; மனிதர்கள் பார்த்துச் சொல்லப்படும் தகவல் ஐயத்திற்குரியது. ஆகவே, மனிதர்கள் தவறு இழைக்கக் கூடும்; கருவிகள் தவறு இழைப்பதில்லை. ஆகவே, மனிதர்கள் நேரடியாகப் பார்த்துச் சொல்வதைவிட கருவிகள் மூலம் அவற்றை முடிவு செய்வது மிகச் சிறந்த முறையாக இருக்கும் என்று அவர் சொல்கிறார்.

அத்துடன் இந்த விஞ்ஞானக் கணிப்பின் மூலமாகச் செய்யும்போது முன்னரே காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யலாம். கடைசி நேரம்வரை பிறை தெரிகிறதா, பிறை தெரிகிறதா, என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல குழப்பங்களை நீக்குவதாக அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். ஆகவே, இவையெல்லாம் நமது சிந்தனைக்கு உரியவை.

இப்போது தொழுகை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தொழுகை நேரத்தை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிற முறைப்படி நாம் ஒன்றும் நிர்ணயம் செய்வதில்ல. ஓர் ஆண்டிற்கு முன்னரே செய்கிறோமே! ஹதீஸின் அறிவிப்பின்படி லுஹரின் நேரம் என்ன? ஒருவருடைய உயரமும், அவருடைய நிழலும் சம அளவில் வந்து விட்டால் லுஹர் நேரம் ஆரம்பமாகி விட்டது. அஸருடைய நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? தன்னுடைய உயரத்தைவிட, தன்னுடைய நிழல் இரண்டு மடங்கு இருந்தால் அஸர் நேரம் ஆரம்பம் ஆகிறது. மஃக்ரிபு நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? ஹதீஸின்படி, மஞ்சள் நிறம் சூரியனில் உண்டாகி விட்டால் மஃக்ரிபு உண்டாகி விடுகிறது.

[ஹதீஸ்களின் தெளிவின்படி சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தது முதல் ஒன்றின் நிழல் அதன் உயரத்தின் அளவை எட்டும்வரை லுஹ்ருடைய நேரம் உள்ளது. ஒன்றின் நிழல் சம அளவிலிருந்து சற்றே கூடும்போது தொடங்கி சூரியன் மறைவதற்குச் சற்றுமுன்வரை அஸ்ருடைய நேரமாகும். சூரியன் மறைந்து செம்மேகம் தோன்றியதிலிருந்து மக்ரிபு நேரம் தொடங்கி, செம்மேகம் மறையும்வரை தொடர்கிறது – சத்தியமார்க்கம்.காம்]

இப்போது, ஒவ்வொரு நாளும் எல்லோரும் இந்த அளவெல்லாம் பார்க்கிறீர்களா? அவருடைய உயரம் நிழலின் உயரம் என்றெல்லாம் கணக்கு எடுத்துப் பார்க்கிறீர்களா? சூரிய உதயத்தை ஒவ்வொரு நாளும் சென்று பார்க்கிறீர்களா? அஸ்தமனத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்களா?

இப்படியெல்லாம் பார்த்த பிறகுதான் தொழுகை நேரத்தைக் குறிக்கிறீர்களா? அதற்கு மட்டும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு, விஞ்ஞானத்தின்படி, விஞ்ஞானக் கணக்கீட்டின்படி ஒரு வருடத்திற்கு முன்னாலேயே தொழுகை நேரத்தை எல்லாம் முடிவு செய்கிறோமே? அதற்கு மட்டும் விஞ்ஞானத்தை அழைத்துக் கொள்கிறோம். சூரியக் கணக்கிற்கு விஞ்ஞானக் கணக்கை அழைத்துக் கொள்கிறபோது  பிறைக்கணக்கிற்கு விஞ்ஞானத்தை ஏன் அழைத்துக் கொள்ளக்கூடாது என்று கேள்வி எழுகிறது.

ஆக, விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருமானார் காலத்தில் ஒரு நாளைக் கணக்கிடுவதற்கு பிறையைக் கண்ணால் பார்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே, அந்த முறை பயன்படுத்தப்பட்டது. இப்போது, வேறு வழிகள் வந்திருக்கிற காரணத்தால் நேரிடையாகக் கண்ணால் பார்ப்பதைவிட மிகத் தெளிவாகவும், மிகத் துல்லியமாகவும் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் வந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்திலும் நேரடியாக பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் நாம் பிடிவாதமாக இருப்பது ஏன்? இவற்றை எல்லாம் சமுதாயம் சிந்திக்கக் கடமை பட்டிருக்கிறது.

இஸ்லாம் ஒரு விஞ்ஞான மார்க்கம் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு ஊக்கம் அளித்தது என்று சொல்கிறோம். குர் ஆனில் உள்ள கருத்துகள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில்லை என்று சொல்கிறோம். மூச்சுக்கு மூச்சு விஞ்ஞானம் என்று பேசிவிட்டு பிறை பார்க்கும் விஷயத்தில் இவ்வளவு தூரம் நடந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது.

ஆகவே, ஒருகாலம் வர வேண்டும். இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய விஞ்ஞானிகள், வானியல் நிபுணர்கள், இஸ்லாமிய சட்டவியல் மேதைகள் ஆகிய எல்லோரும் ஒன்றாகக் கூடி விஞ்ஞானத்தின் துணை கொண்டு முடிவு செய்வதில் மார்க்கத்தில் முரண்பாடு ஏதேனும் உள்ளதா என்று முடிவு செய்து சொல்ல வேண்டியது அவர்களின் பொறுப்பு. அந்தக் காலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது.

அப்படி ஒருகாலம் வருகிறவரை என்ன செய்ய வேண்டும்?

முஸ்லிம்களுக்கென்று ஒரு தலைமை இருக்க வேண்டும். அந்தத் தலைமைதான் இதற்கொரு முடிவைச் சொல்ல வேண்டும். ஆளுக்கு ஆள் ஒரு கருத்தைச் சொன்னால் குழப்பம்தானே மிஞ்சும்? ஆகவே, ஒரு தலைமை முடிவு செய்வதுதான் இதற்குப் பொருத்தமாக இருக்கும். நமது மாநிலத்தைப் பொருத்தவரை, தலைமைக் காஜியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் பொறுப்பாளர். அவருடைய கருத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. அவரவர்கள் முடிவு எடுத்துக் கொண்டு குழப்புவதைவிட இதுதான் சிறந்த வழி.

ஒருவேளை அவருடைய முடிவுகளில் நமக்கு சந்தேகம் இருக்கிறது என்றால் நாம் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யலாம். ஒரு தனிமனிதர் முடிவு எடுக்க வேண்டாம். ஒரு கமிட்டியை நிர்ணயம் செய்யுங்கள். ஹிலால் கமிட்டி, அந்தக் குழு அவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டும். அதனுடைய அடிப்படையில் அவர் முடிவு எடுக்க வேண்டும்.

ஆகவே, நாம் தோழர்களுக்குச் சொல்லிக் கொள்வது: தயவு செய்து இதை ஒரு பிரச்னை ஆக்காதீர்கள். இதற்காகச் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். ஒரே ஊரில் மூன்று பெருநாள் தொழுகை நடத்துகிறீர்களே, எந்த வகையில் இது நியாயம்? முஸ்லிம் உம்மத்தைப் பிளக்கிற ஒரு செயல் அல்லவா? முஸ்லிம் சமுதாயத்தைக் கேலிகுரியதாக்கும் செயல் அல்லவா? பிறர் பார்த்துச் சிரிக்கின்ற அளவுக்குச் செய்யும் ஒரு காரியம் அல்லவா? இப்படியெல்லாம் செய்வதற்கு மார்க்கத்தில் எங்கே அனுமதியிருக்கிறது? ஆகவே, சமுதாயத்தின் தலைமைதான் இதற்கான முடிவைச் சொல்வதற்கான அதிகாரம் பெற்றது. அதனை ஏற்றுக் கொள்வதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.

oOo

(“அன்றாட வாழ்வில் இஸ்லாம்” நிகழ்ச்சியில் ரமளான் தொடர்பான சிறப்பு ஒளிபரப்பில் பிறை தொடர்பான ஒரு நேயரின் வினாவுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அளித்த விளக்கம்)

நன்றி: சமரசம் 1-15 ஜுலை 2012 / தொகுப்பு: ஜாவீத்

 


 சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான ஆக்கங்கள்:

நாள் காட்டியைக் கணக்கிடுவது!
http://www.satyamargam.com/1334

பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்!
http://www.satyamargam.com/1042


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.