முஸ்லிம்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். ஒருவர் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நோக்கத்தில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

"எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேலும், "நாய் வளர்ப்பவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு கீரத் (இரு மடங்கு உகது மலையளவு) நன்மையை இழக்கின்றார்." என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), நூல்: புகாரி.

 

மேற்கண்ட இரு செய்திகளின் வாயிலாக நாய் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.

 

எனினும் இத்தடை விவசாயம், பாதுகாப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக நாய் வளர்ப்பதை தடை செய்யாது என்பதை கீழ்கண்ட செய்தியின் வாயிலாக அறிய முடியும்.

 

"விவசாயம், கால்நடை பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிற்கு மட்டும் நாய் வளர்க்கலாம்" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி),  நூல்கள்: முஅத்தா,திர்மீதி, நஸயீ.

 

எனவே மேலே கூறப்பட்ட காரணமின்றி வீட்டில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை என அறியலாம். 

கனடா ஒன்டாரியோவிலிருக்கும் டொரன்டோ இஸ்லாமியக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் விரிவுரையாளருமான ஷேக் அஹமது குட்டி அவர்கள் மேற்சொன்ன ஹதீஸ்களை ஆராய்ந்து பின்வருமாறு தெரிவிக்கிறார்:

நாய்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காக மட்டுமே வளர்க்கப்படலாம்:

1. வேட்டைக்குப் பயன்படுத்துதல். (தற்போதைய கால கட்டத்தில் இது ஒத்து வராது. மேலும் இஸ்லாத்தில் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது)

2. வழிகாட்டியாகப் பயன்படுத்துதல்.

3. காவல் துறையில் மோப்ப சக்தி மூலம் துப்பு துலக்க, வெடிகுண்டுகள், போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பயன்படுத்துதல்.

4. சொத்துகளைப் பாதுகாக்கக் காவலுக்காகப் பயன்படுத்துதல்.

5. கால்நடைகளை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டப் பயன்படுத்துதல்

மேற்சொன்ன காரணங்கள் தவிர வெறுமனே செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பதை ஜெர்மானிய அறிவியலார் முனைவர். கெர்ரார்டு ஃபின்ஸ்டிமர் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் கட்டுரையை இன்ஷா அல்லாஹ் மொழிபெயர்த்து வெளியிடுவோம்.

இறைவன் மிக்க அறிந்தவன்.