நோன்பாளித் தம்பதியர் கட்டியணைத்தல்

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பு நோற்ற நிலையில் மனைவியைக் கட்டி அணைத்தபோது விந்து வெளியாகி விட்டது. நாங்கள் இருவரும் ஆடை அணிந்தே இருந்தோம். உடலுறவு கொள்ளவில்லை. என் நோன்பு முறிந்து விட்டதா?

– சகோதரர் கேயெம்யெஸ் (மின்னஞ்சல் வழியாக)

தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

“நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களுள் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி 1927, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)

“ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!” என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) (நூல்: அபூதாவூத்)

நோன்பாளி மனைவியைக் கட்டியணைத்திடவும், முத்தமிடவும் அனுமதியுள்ளது. ஆனால், கட்டுப்பாடு இருக்கவேண்டும். இளம் பருவத்தில் உள்ள தம்பதியர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவர். என்பதால்  இளைஞருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அணைத்தலும் முத்தமும் எல்லையைத் தாண்டி, தாம்பத்திய உறவுக்குத் தூண்டுதலாகிவிடும் என்றிருக்குமானால் நோன்பாளி நோன்பு துறக்கும் வரை மனைவியிடமிருந்து சற்று விலகியிருக்கலாம் (இது ஆலோசனை மட்டுமே).

உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் இவை மூன்றும் நோன்பை முறித்துவிடும் என இஸ்லாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உண்ணுவதும், பருகுவதும் உடலுறவும் நோன்பாளிக்கு விலக்கப்பட்டுள்ளது. மற்றபடி மனைவியை அணைத்தலும் முத்தமிடுதலும் நோன்பாளிக்கு எதிரானதல்ல!

நோன்பாளி பகலில் தூங்கும்போது ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறிந்துவிடும் என குர்ஆன். சுன்னாவிலிருந்து அறிய முடியவில்லை! எனவே ஸ்கலிதம் நோன்புக்கு எதிரானதல்ல. ஸ்கலிதம் ஏற்பட்டவர் (தொழுகைக்காகக்) குளித்துவிட்டு நோன்பைத் தொடரலாம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)