தொழுகையில் தக்பீருக்குப் பின் திக்ர் கூறுவது கூடுமா? ஃதனா எப்போது ஓதவேண்டும்?

ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா ஓதுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்த ஹதீஸ் அறிந்துள்ளேன். இது ஆதாரப்பூர்வமானதா? இதில் சனா எப்போது ஓதவேண்டும்? (மின்மடல் மூலம் வந்த ஒரு கேள்வி)

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்" என்ற நபிமொழியினை பேணும் முகமாக தொழுகையில் எழுந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த விரும்பியச் சகோதரருக்கு மார்க்கத்தில் மேன்மேலும் இறைவன் பேணலையும் உறுதியையும் வழங்கிடுவானாக. ஆமீன்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையினை தக்பீரினைக் கொண்டு ஆரம்பிப்பார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறி தங்களது தொழுகையை ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்"'. (முஸ்லிம், இப்னுமாஜா)

அதன் பின்னர் ஃபாத்திஹா சூரா ஓதும் முன் சில துஆக்களை ஓதிக் கொள்வார்கள். இதனையே ஃதனா ஓதுதல் எனக் கூறுகின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்னால் சிறிது நேரம் மெளனமாக இருப்பார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையில் தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல்மஃரிபி…" என்று ஓதுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

இன்னும் வேறு சில அறிவிப்புகளில்,

"வஜ்ஜஹ்து வஜ்ஹியா லில்லதீ ஃபதரஸமாவாதி வல் அர்ஃத ஹனீஃபன்…" என்றும்

 

"ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரக்க…" என்றும் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தொழுகையில் ஆரம்ப தக்பீர் கூறியபின் கிராத் ஓதுவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் சில துஆக்கள் ஓதியிருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

இதுவல்லாமல் கேள்வியில் உள்ளபடி, தக்பீர் கட்டியபின் சூரா ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் உள்ள இடைவெளியில் "அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ்" போன்ற திக்ரை நபி(ஸல்) அவர்கள் சொல்வார்கள் என எந்த நபிவழிச் செய்தியையும் நாம் அறியவில்லை.

ஆனால் அதே சமயம் இதே போன்ற திக்ருகளைத் தொழுகையை முடித்த பிறகு ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

எனவே ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக நீங்கள் அறிந்த ஹதீஸின் நூலை ஆதாரத்துடன் எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்வோம்.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.