வயது வந்தவர்களுக்கு மட்டும்

Share this:

ரமளானில் முஸ்லிம் சிறார்கள் நோன்பு நோற்பதில் பெரியவர்களோடு போட்டி போடும் வழக்கம் முஸ்லிம் குடும்பங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு, ரமளான் நோன்பு என்பது சிறார்களுக்கும் கடமை என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. ஒரு முஸ்லிமுக்கு நோன்பு எந்த வயதில் கடமையாகிறது? என்பது இங்கு விளக்கப்படுகிறது.

கேள்வி:

சிறார்களுக்கு எந்த வயதிலிருந்து நோன்பு கடமையாகிறது? அவர்கள் நோன்பு நோற்கவும் தொழவும் குறிப்பாகத் தராவீஹ் தொழுகை தொழவும் எப்படி ஊக்கப்படுத்துவது? ரமளானில் சிறுவர்களின் உபரி நேரத்தை அவர்களுக்குப் பயனுள்ளதாக்கும் வகையில் ஏதேனும் எளிய மார்க்க ஆலோசனைகள் உள்ளனவா? – ஒரு முஸ்லிம் சகோதரி

பதில்:

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!

முதலாவது: நோன்பு கடமையாகும் பருவம்

இளவயதுச் சிறார்கள் பருவ வயதை எட்டும்வரை அவர்களுக்கு நோன்பு கடமையில்லை. ஏனெனில்,

மூவகையினருக்கான பதிவிலிருந்து எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது:

1. தனது நினவை இழந்தவர் மீண்டும் தன்னினைவை அடையும்வரை;

2. உறக்கத்தில் இருப்பவர் விழிக்கும்வரை;

3. ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை.

என்றுநபி (ஸல்) கூறியுள்ளார்கள். அபூதாவூது, 4399; மாம் அல்அல்பானீயின் சஹீஹ் அபீதாவூதில் இது ஸஹீஹ் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. (கூடுதலாக நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது).

எனினும், பயிற்சியடையும் பொருட்டுப் பிள்ளைகளை நோன்பு நோற்கும்படிக் கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் செய்யும் நல்லறங்கள் அவர்களுக்காகப் பதியப்படலாம்.

தம் பிள்ளைகளை எந்த வயதிலிருந்து நோன்பு நோற்கப் பெற்றோர் பயிற்றுவிக்க வேண்டுமென்பது அந்தப் பிள்ளையால் எந்த வயதிலிருந்து நோன்பு நோற்க இயலும் என்பதைப் பொருத்ததாகும். இது பிள்ளைகளுக்கிடையே அவர்களது உடல்வலிமையைப் பொறுத்து மாறுபடும். சில மார்க்க அறிஞர்கள், “இதற்கான வயது பத்து” என்று குறிப்பிடுகிறார்கள்.

இதைக் குறித்து வேறுபட்ட அறிஞர்களது கருத்துகள்:
“ஒரு பிள்ளைக்குப் பத்து வயதாகி நோன்பு நோற்கும் வலிமையும் இருந்தால், அப்பிள்ளை நோன்பு நோற்கத் துவங்க வேண்டும்” -இமாம் அல்-ஃகார்கி.

“இதன் பொருள் யாதெனில் பிள்ளையை, பெற்றோர் நோன்பு நோற்கச் சொல்ல வேண்டும்; அப்பிள்ளை நோன்பு நோற்க வேண்டும். அதற்கு அப்பிள்ளை மறுத்தால், தொழ மறுக்கும் அவ்வயதுப் பிள்ளையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டும். அப்பிள்ளை நோன்பு நோற்றுப் பழகிக்கொள்ள அது ஏதுவாகும். ‘ஒரு பிள்ளை நோன்பு நோற்கும் அளவிற்கு வலிமையடைந்துவிட்டால் அப்பிள்ளையை நோன்பு நோற்கும்படிச் சொல்லவேண்டும்’ என்ற கருத்து கொண்டவர்களுள் அதா, ஹஸனுல் பஸரீ், இப்னு ஸீரீன், இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரீ, கதாதா, அஷ்-ஷாஃபியீ அடங்குவர்” – இமாம் இப்னு-குதாமா.

“ஒரு பிள்ளையால் பலவீனம் அடையாமல் மூன்று நாள் தொடர்ச்சியாய் நோன்பு நோற்க இயலுமாயின், அப்பிள்ளையை ரமளான் நோன்பை முழுக்க நோற்கச் செய்ய வேண்டும்” – இமாம் அல்-அவ்ஸாயீ.
“ஒரு பிள்ளை பன்னிரெண்டு வயதை எட்டினால், நோன்பைப் பழக்கப்படுத்திக்கொள்ள அப்பிள்ளை நோன்பு நோற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” – இமாம் இஸ்ஹாக்.

“சிறுபிள்ளைகள் நோன்பு நோற்பதற்குப் பத்துவயது என்பது சாத்தியமுள்ள வயதாய் இருக்க முடியும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வயதை எட்டிய பிள்ளை தொழாமல் இருந்தால் அடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்; மேலும் நோன்பு என்பது தொழுகையைப் போன்றது என்பதாலும் இவ்விரண்டு அறச்செயல்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமானவை என்பதாலும் இவையிரண்டும் உடல் சார்ந்த செயல் என்பதாலும் இஸ்லாத்தின் தூண்களைச் சேர்ந்தவை என்பதாலும் ஆகும். ஆயினும் நோன்பு கடினமானது. எனவே நோன்பு நோற்கப் பிள்ளையால் இயலுமா என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில பிள்ளைகளால் தொழ முடியும்; ஆனால் நோன்பு நோற்கும் சக்தியை அடைந்திருக்கமாட்டார்கள்” – இமாம் இபுனு குதாமா (அல்-முஃக்னீ, 4/412).

நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், தம் பிள்ளைகளுடன் இம்முறையையே கடைபிடித்தார்கள்; எந்தெந்தப் பிள்ளைகளால் இயலுமோ அவர்களை நோன்பு நோற்கக் கூறினார்கள். பசியினால் அப்பிள்ளை அழுமேயானால், விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்து அதன் கவனத்தைத் திசை திருப்புவார்கள். ஆனால் அப்பிள்ளை பலவீனமாகவோ, ஆரோக்கியக் குறைவாகவோ இருந்து, அப்பிள்ளையின் உடல்நலனுக்குத் தீங்கு ஏற்படும் எனத் தெரிந்தால் நோன்பு நோற்கும்படி வற்புறுத்த அனுமதியில்லை.

“இளவயதுப் பிள்ளை பருவமடையும்வரை நோன்பு நோற்கும்படி வற்புறுத்தப்படக் கூடாது. ஆனால் அப்பிள்ளையினால் இயலுமானால் நோன்பு நோற்கும்படிச் சொல்லலாம். இவ்வாறு பயிற்சியளிப்பது, பிள்ளைகள் பருவம் எய்தியவுடன் நோன்பு நோற்பது எளிதாக அவர்களுக்கு ஆகிவிட உதவும். முஸ்லிம் சமுதாயத்தின் சிறந்த தலைமுறையினரான நபித் தோழர்கள் தம் பிள்ளைகளின் இளவயதில் அவர்களை நோன்பு நோற்கச் செய்வார்கள்” – அல்-ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல்-உதைமீன் (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/28, 29).

மேலும், “என் இளவயது மகன் ரமளானின் நோன்பை நோற்பேன் என்று விடாப்பிடியாய் இருக்கிறான். நோன்பு நோற்பது அவனது உடல்நலத்தை நிச்சயம் பாதிக்கும். ஏனெனில், அவன் மிக இளம்பிள்ளையாகவும் உடல்நலம் குன்றியவனாகவும் இருக்கிறான். இந்நிலையில் அவன் தனது நோன்பை முறிக்கும்படி நான் அடித்துத் தடுக்கலாமா?” என்று ஷேக் அல்-உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது,

“அவன் இளவயதினனாகவும் பருவம் எய்தாதவனாகவும் இருப்பின் அவன் நோன்பு நோற்பது கடமையில்லை. ஆனால் சிரமப்படாமல் அவனால் நோன்பு நோற்க இயலுமாயின் அவனுக்கு அவ்வாறு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். நபித்தோழர்கள் (ரலி-அன்ஹும்) தம் பிள்ளைகளை நோன்பு நோற்கச் செய்வார்கள். பிள்ளைகள் அழநேர்ந்தால் பொம்மைகளைக் கொடுத்து அவர்களது கவனத்தைத் திசை திருப்புவார்கள். ஆனால் நோன்பு நோற்பது அவனது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உறுதி என்றால் அவன் நோன்பு நோற்பதைத் தடுக்க வேண்டும். ‘இளவயதுப் பிள்ளைகள், அவர்களுடைய சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்ற அச்சநிலை இருப்பின் அவர்கள் வசம் அவர்களது சொத்துகளை அளித்துவிடக் கூடாது’ என்று அல்லாஹ் தடை ஏற்படுத்தியிருக்கும்போது அவர்களது உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்குமோ என அச்சப்படும் செயல்களைத் தடுப்பது பொருத்தமானதே. ஆனால் அவர்களை அடித்துத் தடுக்கக் கூடாது. அது பிள்ளைகளை வளர்க்கும் முறையல்ல” என விளக்கமளித்தார்கள். (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/83).

இரண்டாவது: நோன்பு-தொழுகை ஆகிய கடமைகளுக்கான பயிற்சி

பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் அளிப்பதன் மூலமாகவும் அவர்கள் தங்களைவிட மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் போட்டிபோடும் குணத்தைத் தூண்டியும் அவர்கள் தாமாகவே நோன்பு நோற்கும்படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தங்கள் தந்தையருடன் வெவ்வேறு பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு வெகுமதிகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அது பாராட்டுச் சொற்களாக இருக்கலாம்; அவர்களுடனான சிறு பயணமாக இருக்கலாம்; அவர்கள் விரும்பும் பொருள்களை வாங்கித் தருவதாகவும் இருக்கலாம்.

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில் சில தாய்-தந்தையர் தம் பிள்ளைகளை அவ்வாறு ஊக்குவிப்பதில்லை. வேறு சிலர் தம் பிள்ளைகள் தாமாக விரும்பிச் செய்யும் இறைக் கடமைகளையும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். இரக்கமும் பரிவும் என்பது தம் பிள்ளைகள் தொழுவதையும் நோன்பு நோற்பதையும் தடுப்பது என்று இவர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஷரீஅத்தின் அடிப்படையிலும் சரி, விவேகத்துடன் கல்வி புகட்டுவதன் அடிப்படையிலும் சரி, இறைக் கடமைகளைச் செய்ய விரும்பும் பிள்ளைகளைப் பரிவின் பெயரால் தடுப்பது முற்றிலும் தவறானது.

“தம் பொறுப்பையறிந்த, தாங்கும் உடல்வலிமையுள்ள, பயணத்தில் இல்லாத ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கியுள்ளான். பருவ வயதை எட்டாத இளம் பிள்ளைகளுக்கு நோன்பு கடமையில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், ‘மூவகையினருக்கான பதிவிலிருந்து எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது’ என்று கூறியதில், பருவ வயதை எட்டாத இளம் பிள்ளைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் ஒருபிள்ளை நோன்பு நோற்கும் வலிமையுள்ள வயதை எட்டியதும் நோன்பு நோற்கும்படி அப்பிள்ளையின் காப்பாளர் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்புக் கடமையை அந்தப் பிள்ளை பயின்றுகொள்ளும் வகையில் அது அமையும். சிலர் தம் பிள்ளைகளைத் தொழவோ, நோன்பு நோற்கவோ அறிவுறுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இது தப்பு. இதற்காகப் பெற்றோர் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர். கேட்டால், பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தாலும் பரிவினாலும் அவர்களை நோன்பு நோற்கும்படிக் கூறவில்லை என்று அவர்கள் காரணம் கூறுகிறார்கள். ஆனால் தம் பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் நல்லறங்கள் புரியவும் பயிற்சி அளிப்பவர்கள்தாம் உண்மையில் பரிவும் பாசமும் கொண்ட பெற்றோராரேயன்றி, பயனுள்ள வகையில் பிள்ளைகள் பயிற்சி பெறுவதையும் ஒழுக்கம் பழகுவதையும் தடு்ப்பவர்கள் அல்லர்” என அல்-ஷைக் அல்உதைமீன் கூறியுள்ளார் (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/19, 20).

மூன்றாவது: பிள்ளைகளின் ரமளான் பொழுதுகளைப் பயனுள்ளதாக்குவது.

தம் பிள்ளைகளை குர்ஆன் ஓதவைப்பதன் மூலம், ஒவ்வொரு நாளும் சிறு பகுதிகளை மனனம் செய்யவும் வைத்து அவர்களது நேரங்களை ஆக்கிரமிக்க வைக்கலாம். அவர்களது வயதிற்கேற்ற பயனுள்ள புத்தகங்கள், புகழ்பாக்கள் அடங்கிய ஒலி நாடாக்கள், பயனுள்ள விடியோக்கள் என்றும் கலந்து அளிக்கலாம். ‘அல்-மஜ்து’ எனும் தொலைக்காட்சி சானல் இத்தகைய நல்ல நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்நேரத்தில் தொலைக்காட்சிகளில் பயனுள்ளவற்றை அவர்கள் காணுமாறு செய்யலாம்.

தம் பிள்ளைகளை நல்லவிதமாய் வளர்க்கக் கவலைகொண்டுள்ள இச்சகோதரியினை நாம் பாராட்டுகிறோம். முஸ்லிம் குடும்பங்களில் இன்னமும் நல்லறங்கள் மீதான ஆர்வம் மீதமுள்ளன என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் பெரும்பாலானோர் தம் பிள்ளைகளின் அறிவையும் வலிமையையும் வெளிக்கொணர்வதை திறம்படச் செய்வதில்லை. ஆகையால், அவ்வாறான பிள்ளைகள் ஆர்வம் குன்றியவர்களாகவும் பிறரைச் சார்ந்து நிற்போராகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களைத் தொழவும் நோன்பு நோற்கவும் ஊக்கப்படுத்தாமல் அக்கறையின்றி விட்டுவிட, அவ்விதமே வளரும் பல பிள்ளைகள் பெரியவர்களானதும் இறைவனை வழிபடும் பழக்கம் இல்லாதவர்களாகி, காலந்தாழ்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறித் திருத்தியெடுப்பது பெற்றோருக்குக் கடினமாகிவிடுகிறது. இதில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தியிருந்தால் பிற்காலத்தில் வருத்தப்படாமல் இருக்கலாம்.

நாம் நம் பிள்ளைகளை நலமே வளர்க்கவும் அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இறைவனை வழிபடுவதை நேசிப்பவர்களாக ஆகிவிடுவதற்கு நம் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நாம் முறையே நிறைவேற்றக்கூடியவர்களாக நம்மையெல்லாம் ஆக்கியருள வேண்டி அல்லாஹ்விடம் உதவி கோருவோம்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

oOo

மூலம் : http://www.islam-qa.com/en/ref/65558 & http://islam4parents.com/2008/09/what-age-should-children-start-fasting/

-தமிழ்த் தழுவல் : நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.