பட்டாசு வெடிப்பதும் பாட்டில்கள் குடிப்பதும் தானா பண்டிகை?

ந்தியாவில் நடைபெறுகின்ற பல மதத்தவர்களின் பண்டிகைக் கொண்டாடத்தின் உச்சத்தை சாராயக் கடைகளில் தான் பார்க்க முடியும்.

பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற கொண்டாட்டங்களின் போது சாராயக் கடைகளில் கூட்டம் அலை மோதும். அன்றைய தினங்களில் சாராயக் கடைகள் விற்பனையில் சாதனை படைக்கும். (கடந்த ஆண்டில் டாஸ்மாக் எட்டிய விற்பனை 14 ஆயிரம் கோடிகளுக்கும் மேல், இதில் அதிகம் விற்பனையான நாட்களோ பண்டிகை நாட்கள்)

ஆனால், சாராய சாம்ராஜ்யத்திற்கு சங்கு ஊதும் பண்டிகைகளாகத் தான் இஸ்லாமிய பண்டிகைகள் அமைந்துள்ளன.

சுற்றுப்புறச் சூழல் மாசுபட பட்டாசுகள் வெடிப்பதும், பாட்டில்கள் வாங்கிக் குடிப்பதும், சிகரெட் பனி மூட்டத்துடன் சினிமா தியேட்டர்களுக்கு அணிவகுப்பதும் தான் பண்டிகை என்ற நிலை ஒருபக்கம்!

படைத்தவனை வணங்குவதும், தீங்கு தரா உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணுவதும், அண்டை வீட்டாரை அரவணைப்பதும், இல்லாத வறியவர்களுக்கு ஈகை கொடுத்து மகிழ்வதும் தான் பண்டிகை நாளின் சிறப்பு என்ற இலக்கணங்கள் மறுபுறம்!

இஸ்லாமியப் பண்டிகைகள் இனிமையானவை; இதமானவை; அமைதியானவை; அந்த பண்டிகைகளால் யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை.

உண்மை தான்! சாராயக் கடைகளுக்கு இஸ்லாமியப் பண்டிகைகளால் இலாபம் இல்லை; சீரழிக்கும் திரை அரங்குகளுக்கும் இப் பண்டிகைகளால் வருமானம் இல்லை.

ஆபாசம், திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகச் சீர்கேடுகளை ஒழிப்போம் என்று சூளுரையிடும் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் அந்த சீர்கேடுகளுக்கு மூல காரணத்தை ஏன் யோசிப்பதில்லை?

விபச்சாரத்தை ஒழிப்போம் என்று சூளுரைக்கும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் விபச்சாரத்திற்கான தூண்டுகோல் எதுவென்று ஏன் யோசிப்பதில்லை?

இதற்கெல்லாம் விடை காணாமல் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி போல் ஆயிரமாயிரம் பேர் வந்தாலும் பிரயோசனமில்லை.

மனித குலத்திற்கு நன்மையை மட்டுமே செய்யச் சொல்லும் பண்டிகைகள்; தீமைகளில் இருந்து விலகி நிற்கச் சொல்லும் பண்டிகைகள்!

மனிதனால் வடிவமைக்கப்பட்ட அனைத்துப் பண்டிகைகளும் வரம்பு மீறி கூத்தடிப்பதையே அடிப்படையாக கொண்டிருக்கும்போது, பண்டிகைகளுக்கும் வரம்புகளை வகுத்துத் தந்து அந்த வரம்புகளுக்குள் நின்று கொண்டாட வேண்டுகிறது இஸ்லாம்.

எனவே உண்மை முஸ்லிம்கள் ஆகிய நாம் பண்டிகைக்கு இஸ்லாம் வகுத்து தந்துள்ள இலக்கணத்தை பேணுவோம். சாராய சாம்ராஜ்யங்களுக்கும் திரை அரங்குகளுக்கும் சங்கு ஊதுவோம்.

“இஸ்லாமிய முன் மாதிரி” எதுவென்பதை வெறும் மேடைப் பேச்சிலும், பிரச்சாரங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் மட்டும் பிரகடனப்படுத்திக் காட்டாமல், நன்மையை செயலில் காட்டுவோம்!

அதன்மூலம் முன்மாதிரி சமுதாயம் எதுவென்று அடையாளம் காட்டி சக மனிதர்களுக்குள் மாற்றத்தைக் கொண்டுவருவோம்!

தமிழகத்தில் இன்று (06-10-2014) கொண்டாடப்படும் தியாகத் திருநாள் (பக்ரீத் பண்டிகை) இந்த ஆக்கத்திற்குச் சான்று பகரும், இன்ஷா அல்லாஹ்!

– சையத் அலீ ஃபைஜி