இறைவைனிடம் கை ஏந்துவோம்!

புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம்.  இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில் நாம் பசித்து, தாகித்திருந்ததற்கு இறைவன் அவனது அருட்கொடைகளை முழுமையாக நமக்குத் தந்தருள்வானாக என்ற பிரார்த்தனையுடன்…

ரமலான் மாதமே பாவங்களுக்கான பரிகாரமாகவே அமைகின்றது. ஆனாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானின் இரண்டாவது பத்தினை பாவ மன்னிப்பிற்கான பத்தாக அறிவித்து இந்தப் பத்து நாட்களில் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீள வலியுறுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக்கு உரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத் – மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது – அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3எண் 191.

https://cdn1.iconfinder.com/data/icons/nuvola2/128x128/apps/important.png(குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்ற பலவீனமானவர் இடம்பெறுவதால் இது உறுதியற்றதாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக இதனைப் பதிவு செய்த இமாம் இப்னு ஹுஸைமா கருதுகிறார். பார்க்க : http://www.islamkalvi.com/portal/?p=4925).

இந்தப் பத்து நாட்களில் கேட்கச் சொல்லி நமக்கு அவர் பின்வரும் பிரார்த்தனையினைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.,
“அல்லாஹும் மக்fபிர்லி துனூபி யாரBப்பல் ஆலமீன்” (அல்லாஹ்வே! அகிலத்தார்களின் இரட்சகனே! எங்களுடைய பாவங்களையும், எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக).

பாவம் செய்வது மனித இயல்பு. ஆனால் பாவங்களை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே செல்லாமல் அதனை நினைத்து வருந்தி பாவமன்னிப்புக் கேட்டு இறைவனின் புறம் மீள்வதே சிறந்த பண்பாகும்.

இறைவன் பாவ மன்னிப்பினை அதிகம் விரும்பக் கூடியவனாக இருக்கின்றான். பாவ மன்னிப்புத் தேடுபவர்களையும் அதிகம் விரும்பக் கூடியவனாக இருக்கின்றான்.

அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம், அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்தகையவர்களுக்குத்தான்; ஆகவே, அத்தகையோரின் ‘தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:17)

நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள்.
பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் ஒருவனுக்குத் திரும்பக் கிடைக்கப்பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதனை விட பல மடங்கு, பாவ மன்னிப்பு தேடும் அடியானைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சி கொள்கின்றான்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் கேட்கும் மன்னிப்பினால் இறைவனுக்கு எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் தன் மேல் நம்பிக்கை வைத்து தனது அடியான் மீளும்போது அதனை நினைத்து இறைவன் பேருவகை கொள்கின்றான்.

இறுதித் தூதர் மேலும் நவின்றுள்ளார்கள்.
நான் ஒரு நாளுக்கு நூறு முறைக்கு மேல் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுகின்றேன்.
இன்னொரு அறிவிப்பில் எழுபது முறை என்றும் வந்துள்ளது. முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட, ஒட்டுமொத்த உலக மக்களின் தலைவர் ரசூலே கரீம் முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஒரு நாளைக்கு நூறு முறைக்கு மேல் பாவமன்னிப்புத் தேடி இறைவனிடம் மீளக் கூடியவர்களாக இருந்தார்கள் என்றால் நடமாடும் பாவக் கிடங்காக இருக்கும் நமது நிலையினைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாவமன்னிப்பைப் பொருத்தவரை அதற்கு சில வரையறைகள் மார்க்கத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு தவறுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடும் பொழுது பின்வரும் மூன்று நிபந்தனைகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
1.    செய்த பாவத்திலிருந்து முழுவதுமாக நீங்கிவிட வேண்டும்..
2.    அந்தப் பாவத்தை நினைத்து மனம் வருந்த வேண்டும்..
3.    அந்தப் பாவத்தை மீண்டும் செய்யக் கூடாது என்று உள்ளத்திற்குள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வரையறைகளுக்குட்பட்டுக் கேட்கப்படும் பாவமன்னிப்பே இறைவனிடத்தில் மதிப்பு மிக்கதாக இருக்கும். அவ்வாறு கெஞ்சிக் கேட்கும் தவ்பாவின் மூலம் இறைவனுக்குப் பிடித்தமான, இறை நெருக்கத்தைப் பெறக்கூடிய அடியார்களாக நம்மால் மாறமுடியும்.

இறைவனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் செய்யப்பட்ட பாவங்களுக்கு மட்டுமே மேலே உள்ள நிபந்தனைகள் பொருந்தும். மனிதனுக்குச் செய்யப்பட்ட பாவம் என்றால் அந்த மனிதர் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிப்பதில்லை.

புனிதமிகு ரமலானில் அதிகம் அதிகம் இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி, பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போன்று இந்த மாதத்தை நிறைவு செய்ய வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!.

அபுல் ஹசன்
9597739200