முஸ்லிம்களின் விஸ்வரூபம்

விஸ்வரூபம் - கமல்ஹாசன்
Share this:

டந்த சில மாதங்களாகவே “விஸ்வரூபம் என்ற தமிழ்த்  திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது” என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் உறுதியான வேண்டுகோளுக்கிணங்க 21.01.2013 அன்று இத்திரைப்படத்தின் Preview அவர்களுக்குக் காட்டப் பட்டது.

துப்பாக்கி என்ற படத்தைத் திரையிட்டுக் காட்டிய திரைப்படக் குழுவினர் பிரஸ் மீட் ஒன்றினை வைத்து நீலிக் கண்ணீர் வடித்து ஏமாற்றியது போன்றே தமது படத்தைப் பார்க்கும் முஸ்லிம் அமைப்பினரையும் எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்பது கமலின் யூகம்.

ஆனால் விஸ்வரூபம்  திரைப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் “இந்திய வரலாற்றிலேயே இது போன்று முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை!” என்று அதிர்ச்சியுடன் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களைத் தவறாகச் சித்திரிப்பதால் “விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கக்கூடாது!” என்றும் “கமல்ஹாஸன் மீதும் இப்படத்துக்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒரு சேரக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக, சென்னை மாநகரக்  காவல்துறை ஆணையரிடமும் தமிழக உள்துறைச் செயலரிடமும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து புகார் மனு அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், “சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது” என்றும் அந்தத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்படவிருந்த ஒரு பெரிய சமூகப் பிரச்னையை, அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து போராடித் தடுத்துள்ளன. இது  மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் Preview பார்த்தவர்களில் ஒருவரான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாஹ், பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில், “இஸ்லாமியர்கள் தம் உயிர் எனப் போற்றும் குர்ஆன், பயங்கரவாதிகளின் கையேடாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக துவேஷத்துடன் இப்படத்தில் காட்டப்படுகிறது. மாமன்-மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள், அமைதியைக் கெடுத்துவிடும். முழுக்க முழுக்க இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார நோக்கத்துடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு பிரச்சாரப் படம் வந்தது இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் இஸ்லாம் தவறாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்த கண்டனமும் இந்தியத் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் எஸ்.எம் பாக்கர் போன்றோர் இதற்கு எதிராக உடன் குரல் கொடுத்ததும் நினைவுகூரத் தக்கன.

முஸ்லிம்களை ஏதோ பிரியாணி தின்பதற்காக மட்டும் பிறந்தவர்கள் போல், அண்டா பிரியாணி கேட்டுக் கொச்சைப்படுத்திய கமல்ஹாசனுக்கு, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று, “விஸ்வரூபம் இஸ்லாமியர்களைப் புண்படுத்தவில்லை என்றால் பிரியாணி தரத் தயார்” என்று அதிரடி அறிவிப்பு செய்து பதிலடி கொடுத்த தேசியலீக் கட்சியினரும் இங்கே நினைவு கூரத் தக்கவர்கள்.

அதென்ன திரைப்படங்களில் தீவிரவாதிகள் என்றாலே எப்பவும் முஸ்லிம்கள்? அப்பாவி முஸ்லிம்களின் மீது இத்தனை நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த பழிக்கு பின்னால் இருந்த மதவெறியர்களின் சதி அம்பலமாகிக் கொண்டே வருவது இன்னும் புரியவில்லையா? அல்லது அதைப் பற்றி பேசினால் “தேச பக்தி” வியாபாரம் செய்து கல்லா கட்ட முடியாதா?

 

உண்மை நிலவரங்களை பேசும் துணிவு, நேர்காணலில் மட்டும் தானா? – கலைஞர் தொலைக்காட்சியில் இந்திய முஸ்லிம்கள் பற்றிப் பேசும் கமல்ஹாசன்:

{youtube}znDOTQLedtE{/youtube}

 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில், கமல்ஹாசனின் வரலாற்றுப் புரட்டை அம்பலப்படுத்தும் (மறைந்த) நடிகர் மணிவண்ணன்:

 

{youtube}9SU5QxIxAmA{/youtube}


மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், நான்டட், கோவா, பெங்களூர் என நாட்டில் நடந்த அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் செயல்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அது மட்டுமின்றி, குண்டு வெடிப்புகளை நடத்திய நேரத்தில், கோட்சே காலத்திலிருந்து தொடரும் அதே யுக்திப்படி, முஸ்லிம்கள் அந்தப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகத் திசை திருப்ப, சம்பவ இடத்தில் அரபி/உருது நோட்டீஸ்கள், தொப்பி, தாடி போன்றவற்றை விட்டுச் சென்றும் குண்டுவெடிப்பு நடந்த உடனேயே ஏதாவது முஸ்லிம் அமைப்பின் பெயரில் இ-மெயில் அனுப்பியும் திட்டமிட்ட சதிச் செயலில் ஈடுபட்டதும் இதே ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதும் உறுதியாகியுள்ளன.


ஒவ்வொரு நாளும் காவித் தீவிரவாதிகளைப் பற்றி ஒவ்வொரு உண்மையாக வெளிவந்து இந்திய மக்களைப் பீதிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகங்களைக் கமல்ஹாசன் பார்ப்பதில்லையா? இந்த உண்மையை அப்படியே படமாக எடுக்க கமல்ஹாஸனுக்குத் தைரியம் இருக்கிறதா?

உண்மைகளைப் படமாக எடுப்பதுதான் நல்ல கலைஞனுக்கு அழகு! அப்படிப்பட்டவனைத்தான் தைரியமான கலைஞன் என்றும் கூற முடியும். கமல் தைரியமான கலைஞன் எனில், ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து ஒரே ஒரு படமாவது எடுத்துக் காட்டட்டுமே!

மத்திய உள்துறை அமைச்சர் உண்மையைக் கூறியதற்கே அவருக்கு எதிராக போராட்டமாம். இன்னும், மற்றொரு எம்.பி கூறுகிறார் – உண்மையைக் கூறவே ஒரு தைரியம் வேண்டுமென!

இங்கே உண்மையைக் கூற, கமல் போன்ற உலக நாயகர்(!)களுக்குத் தைரியமில்லை. இவரெல்லாம் தேசபக்தி குறித்துப் பேசி நகைக்க வைக்கிறார். ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தனிமைப்படுதுவதற்காகக் கையிலெடுக்கும் ஆயுதம்தான் “தேசபக்தி”. அதனை கமலும் கையிலெடுத்ததிலிருந்து அவரின் நடுநிலை பல்லிளிக்கிறது!  கமலுக்கு அறிவுசீவி முற்போக்கு வேடம் போட நாத்திக முகமூடியும், சிறுபான்மையினர் ஆதரவுப்பேச்சு ஒப்பனையும்!  பிழைப்புக்குப் பெரும்பான்மையைத் திருப்திப்படுத்த உன்னைப்போல் ஒருவன்; விஸ்வரூபமும்! வெட்கக் கேடு!

இந்த நிலையில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான், “இதுபோன்று படம் எடுப்பவர்கள் உள் நோக்கத்தோடுதான் படம் எடுக்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து “திரைப்படங்களில் தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாகப் படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் வேண்டியுள்ளது. விஸ்வரூபத்தின் மீதான தடை நிச்சயம் சரியானதே!” – என  அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் பேரவையின் பொதுச் செயலாளரான மேலை நாசர் என்பவர் இந்தத் திரைப் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். முன்னாள் தவ்ஹீதுவாதியும் இயக்குனருமான அமீரோ விஸ்வரூபம் பற்றி இதுவரை வாயேதும் திறக்கவில்லை.

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாகத் தமிழக அரசு விதித்துள்ள இந்தப் 15 நாட்கள் தடை மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படத்திற்கு நிரந்தரத் தடை விதிக்க  வேண்டும். இனி சினிமாக்காரர்கள் எவரும் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி முஸ்லிம்களை  அவதூறாகச் சித்திரிக்கும் திரைப்படத்தை எடுக்க நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது.

 

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விஸ்வரூபம் என்ற விஷத் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி, குவைத், அமீரகம், சிங்கப்பூரைத் தொடர்ந்து உலக அளவில் அந்தந்த நாட்டு அரசுகளே இத்திரைப்படத்துக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன. கத்தர் நாட்டில் இன்று திரையிடப்படுவதாக இருந்த (24-01-2013) இப்படம் இறுதி நேரத்தில் திரையரங்கை விட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளில் சமூகம் சந்திக்கும் ஒரு நன்மையும் உண்டு. அது சமூக ஒற்றுமை. சமீப காலச் சிக்கல்களில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் சமூகத்தின் மீதான பொதுவான பிரச்சனைகளில் கை கோர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பது ஒரு  நல்ல மாற்றம். சமூக நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள இக்கரங்களின் ஒற்றுமையான முயற்சி வலுப் பெறட்டும்.

-ஜாஃபர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.