உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

Share this:

மனிதனோட பலம் எதிலே? தன் நம்பிக்கையிலே!

தமிழகத்தில் மாற்றுத்திறனுடையோருக்குத் தனித்துறை ஏற்படுத்தி, அதனைத் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் உடையோர் என்பதில் உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.

சாதாணமாக மேற்கண்ட உடல் பாதிப்புக்கான காரணங்கள் பிறவியிலோ, நோயினாலோ, விபத்தாலோ, பரம்பரை (ஜெனி) கோளாறு ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், குறையுடையவர்கள் வாழ்வில் முடங்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மேற்காணும் குறையுடையோரை நம் அன்றாட வாழ்வில் சந்தித்தாலும் அவர்களுடைய நிஜவேதனையைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதில்லை. “தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பது தமிழில் வழக்கத்திலுள்ள ஒரு சொலவடை.

எனக்கு அப்படி ஒரு வலி வந்தது!

நான் புதுக்கல்லூரி மாணவனாக 1967ஆம் ஆண்டில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது ஒருநாள் மாலை நேரம் நண்பர்களுடன் பேச்சு வாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது மேல்மாடியிலிருந்து கால் செருப்புடன் கீழே குதித்தால் அரைரூபாய் தருவதாகச் சொன்னார்கள். நான் துணிந்து அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு தோல்செருப்புடன் கீழே குதித்தேன். குதித்த பின்பு என்னால் நடக்க முடியவில்லை. உடனே நண்பர்கள் என்னை சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள். விபரங்களைக் கேட்டுக் கொண்டே பரிசோதித்த டாக்டர், ‘அரை ரூபாய் பந்தய’த்தைக் கேட்டுவிட்டு, “பயித்தியக்காரத்தனப் பந்தயம்” என்று சொல்லி, இரண்டு கால் முட்டிக்குக் கீழே கரண்டைக்கால்வரை கனமான ‘பிளாஸ்டர் ஆப் பேரிஸ்’ பேண்டேஜ் போட்டு அனுப்பினார்.

ஆனால் அதன் பின்புதான் நிஜமான சோதனை ஆரம்பித்தது. அப்போது வெஸ்டர்ன் கிளாசட் டாய்லட் என்பதெல்லாமில்லை. எனக்கு டாய்லெட் போகவேண்டும் என்றால் என் நண்பர்கள் அஜ்மல்கான், அபுதாகிர் போன்றோர் என்னைச் சுமந்து கொண்டு டாய்லட்டிற்குச் கூட்டிச் சென்று பின்பு அழைத்து வரும் சிரமம் சொல்லமுடியாது. ஆகவே கால் ஊனம் என்றால் எப்படியிருக்கும் என்று அப்போது உணர்ந்தேன். அதன் பின்பு என் கல்லூரித் தோழன் நாமக்கல் மாவட்டம் சின்னக்கரிசல் பாளையம் முத்துசாமி எனும் பெயருடைய கால் ஊனமுற்றவரை என் அறை நண்பராக எடுத்துக் கொண்டு இரண்டாண்டுகள் அவருக்குச் சில சேவைகள் செய்தேன். அது, ஊனத்தை அனுபவத்தால் உணர்ந்ததன் வெளிப்பாடு. அந்த நண்பர் இன்றும் சென்னை வந்தால் என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார்.

இதுபோன்று மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் கூடிய நல்ல நண்பர்கள்/ஆலோசகர்கள் அமைவதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. அதில் ஒரு செய்தியினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். அச்செய்தி, படத்துடன் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை குளத்தூர் பகுதியைச் சார்ந்த 33 வயதான முஹம்மது ஹுசைனுக்கு 22 வயதுவரை வாழ்க்கை இருட்டறையாக இருந்தது.

ஏன்?

அவருக்குப் பிறவியிலே இரண்டு கைகளும் இல்லை. ஆகவே தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கிக் கிடந்தார். அவருக்கு விடிவுகாலம் அவருடைய நண்பர் சந்தோஷ் வடிவில் வந்தது.  சந்தோஷ் தன் நண்பனான ஹுசைனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஊனமுற்றோர் பலர் எப்படி அவர்தம் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காட்டினார். அவர்களையெல்லாம் பார்த்த ஹுஸைனுக்குத் தன்னம்பிக்கை துளிர் விட்டது. அவர்கள்போல தானும் முன்னேற வேண்டுமென்று ஆவல் உந்தியது. ஹுஸைனின் அண்ணன் சாகுல் ஹமீது செல்ஃபோன் ரிப்பேர் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அண்ணனின் கடையில் ரிப்பேருக்கு வந்த செல்ஃபோன்களை, இறைவன் கொடுத்த இரண்டு கால்களில் உள்ள பத்து விரல்களைக் கொண்டு ரிப்பேர் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டார் ஹுஸைன். கடந்த பதினொரு ஆண்டுகளாக அவர் தன் சிரித்த முகத்துடன் செல்ஃபோன் ரிப்பேர் எனும் கருமமே கண்ணாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, தன்னைப் போன்றே ஊனமுற்ற பதின்மரை உறுப்பினராகக் கொண்டு, ‘லட்சியப்பாதை’ எனும் ஓர் அமைப்பையும் தோற்றுவித்தார்.

‘லட்சியப் பாதை’யின் லட்சியம் என்னெவென்றால், முதலில் ஊனமுற்றோருக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது. அடுத்து, மற்றவர்களைப்போல் ‘இருப்பதைக் கொண்டு’ உழைத்துவாழ வழிவகைகள் ஏற்படுத்துவது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த முஹம்மது ஹுஸைனின் தன்னம்பிக்கையும் பிறரைப்போல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் உத்வேகமும் நமக்கு வியப்பை அளிக்கிறதல்லவா?

பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர்-நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், “கடவுள், உடல் என்ற ஒரு முகத்தினை உனக்குக் கொடுத்திருக்கிறார்; உனக்கு இன்னொரு முகம் வேண்டுமெனில் உன்னுடைய விடாமுயற்சி மூலம்தான் அதை உருவாக்க முடியும்” என்று சொல்கிறார். மயிலுக்கு இறைவன் மிகவும் அசிங்கமான கால்களையும் அழகான தோகையையும் கொடுத்துள்ளான். ஆனால் மயில் தோகையினை எப்போது விரித்து மகிழ்ச்சியில் ஆடுகின்றதோ அப்போதுதான் மயிலின் அழகே வெளியுலகத்திற்குத் தெரியும்.

இன்னொரு குட்டிக்கதையும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு காட்டில் கலைமான் ஒன்று நீர்ச்சுனையில் நீர் அருந்தச் சென்று, தன் தலையைக் கவிழ்த்தது. அப்போது அதன் அழகான பல கிளைகள் உள்ள கொம்பு நீரில் தெரிய, மான் மிக்க மகிழ்ச்சியடைந்தது. பின்பு குனிந்து தன் கால்களைப் பார்த்தது. அவை ஒல்லியாக இருந்ததைப் பார்த்து மானுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அப்போது ஒரு புலி, மானை வேட்டையாட அதன் மீது பாய்ந்தது. உடனே மான் அரண்டு ஓட்டம் பிடித்தது. மானின் மெலிந்த கால்கள் அதற்கு வேகமாக தப்பித்து ஓட உதவி செய்தன. ஆனால் பல கிளைகளையுடைய அதன் கொம்பு, செடி-கொடிகளிடம் அவ்வப்போது சிக்கிக் கொண்டு, மான் வேகமாக ஓடுவதற்குத் தடங்கலாக இருந்தது. அப்போதுதான் மானுக்குப் புரிந்தது, புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்ற உதவியது தன் மெலிந்த அழகில்லாத கால்கள்தாம் என்று. ஆகவே கிடைக்கின்ற அல்லது படைத்த படைப்பினைப் பயன்படுத்தி முன்னேறுவதுதான் புத்திசாலிக்கு அழகு.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் கேரளாவில் உள்ள வர்கலாவிற்குச் சுற்றுலா வந்து ‘போட் ஹவுஸில்’ தங்கியிருந்தார். இரவில் அவர் பவுர்ணமி நிலவின் அழகினை ரசிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் போட்ஹவுஸுக்கு உள்ளேயிருந்ததால் நிலா தெரியவில்லை. கொஞ்சம் மேகமாக இருந்ததால் நிலா வரத் தாமதமாகிறதோ என எண்ணினார். தூக்கம் வேறு கண்ணைச் செருகியது. மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுக்க நினைத்தார். என்ன ஆச்சரியம்! நிலாவின் வெளிச்சம் அவருடைய போட் ஹவுஸ் ஜன்னல் வழியாக நுழைந்தது. உடனே வெளியே வந்தார் மனதிற்கு இதமான காற்று, சலசலத்து ஓடும் நீருடைய சலங்கை ஒலி, நீருக்கு வெளியே வந்து துள்ளிக் குதிக்கும் மீன்கள், ஆற்றில் நீர் அருந்தும் மான் கூட்டங்கள் என அனைத்தையும் பார்த்து, சுற்றுலாப் பயனை அடைந்தார். ஆகவே மனிதன் தன்னம்பிக்கையிழந்த சூழலிலிருந்து வெளியே வந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

வழக்கம்போல் இறுதியான சில சிந்தனைகளும் தீர்வுகளும்:

  1. பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்துக்கு உள்ளேயே காலங் காலமாகத் திருமணம் செய்து கொள்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மன நலம் குன்றிய பிள்ளைகள் பிறக்கின்றனர்.

  2. நகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், உடல் கோளாறு போன்றவை வராமல் நோய்த் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றுடன் பிறக்கின்றன. அவர்களைக் கவனிக்காததால் நாணமுற்று, உடல் கூனி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலருக்குப் பருவ வயதைக் கடந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் திருமணம் செய்யா நிலை தொடர்கிறது.

  3. காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் பார்வையற்றோர் போன்ற பலர், செயற்கை முறையில் அந்தத்திறனைக் கொடுக்கக்கூடிய கருவிகள் வாங்கிப் பொருத்திக் கொள்ள வசதி இல்லாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிறரின் தொடர் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளாகி ஒன்றும் செய்ய முடியாமல் குன்றிப்போய் கிடக்கின்றனர்.

  4. இன்றைய நவீன உலகில் சிகிச்கை செய்ய முடியா நோயே இல்லலையெனலாம். ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சிறந்த உதவிகளை முஸ்லிம் அமைப்புகள் செய்ய வேண்டும்.

  5. ஒருவரது ஊனத்தைச் சுட்டிக் காட்டும் கேலிப் பேச்சுகளையும் ஊனப் பெயரால் ஒருவர் விளிக்கப் படுவதையும் ரஸூலுல்லாஹ் (ஸல்) கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இருந்தும் பல ஊர்களில் ஒருவருடைய ஊனத்தினைச் சொல்லி அழைப்பதை இன்றும் காணலாம். அதனை முதலில் நிறுத்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் நிலையில் நாம் இருந்தால் நம் மனம் எப்படிப் புண்படும் என்று நினைக்க வேண்டும். அதற்கான பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

  6. முஸ்லிம் இயக்கங்கள் மாற்றுத்திரனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.   அரசு உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.

  7. மக்களுக்குத் தொண்டு செய்வதே மகேசனான அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவற்றை இங்குக் குறிப்பிடக் காரணம், சிறிய ஓர் இழப்போ சோதனையோ ஏற்பட்டுவிட்டால்கூட படைத்த இறைவனைத் திட்டுகின்றவர்கள் வாழும் இவ்வுலகில், தன்னைப் படைக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் படைத்த அல்லாஹ்வை ஐவேளையும் தொழுது நன்றி செலுத்தக்கூடிய ஹுஸைன் போன்றோர் நம் போற்றுதலுக்கும் உதவிகளுக்கும் உரியவர்களல்லவா என் சொந்தங்களே!

–  முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.