எகிப்த் நிகழ்வு: நசுக்கப்பட்ட ஜனநாயகம்

Share this:

ன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு எகிப்தில் மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது பற்றியே!

அஸ்மா மஃசூஸ் என்ற இளம்பெண் பற்ற வைத்த ஒரு பொறி மிகப் பெரிய தீயாக மாறி, 31 ஆண்டுகளாக கோலோச்சியிருந்த  சர்வாதிகார மாளிகையை இருந்த இடம் தெரியாமல் சாம்பலாக்கியது. கோர ஆட்சியாளர்களை எதிர்த்து மாதக் கணக்கில் வீதிகளில் திரண்ட லட்சக் கணக்கான மக்களை  தங்களது சீரிய தலைமையால் வழிநடத்திச்  சென்று கொடுங்கோலன் முபாரக்கை வெருண்டோடச்  செய்தனர் ”இக்வான்கள்” என்று அழைக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் புரட்சிக்குப் பின்னால் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் அனைவரின் அமோக ஆதரவுடன் இக்வான்களின் அரசியல் பிரிவான ”சுதந்திரம் மற்றும்  நீதிக்கான கட்சி” ( Freedom & Justice Party) யின் டாக்டர் முகமது முர்ஸி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முர்ஸி அதிபரான பிறகு புரட்சி வெடித்த அதே தஹ்ரீர் சதுக்கத்தில் எவ்வித ஆடம்பரமும் இன்றி மக்கள் முன் தோன்றி ”இது இறைவனிடமிருந்து எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு. நான் இந்த நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இரவு, பகல் பாராமல் ஓய்வின்றி உழைப்பேன் என்று அல்லாஹ்வின் முன்னிலையிலும், மக்களாகிய உங்கள் முன்னிலையிலும் சத்தியமிட்டுக் கூறுகின்றேன்” என்று வாக்குறுதி வழங்கினார்.

பதவியேற்ற பிறகு டாக்டர் முகமது முர்ஸி, தனது சத்தியத்தை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை உறுதியுடன் எடுத்தார். பொருளாதாரம், அரசியல், தொழில் வளம் என்று அனைத்திலும் திவாலாகிப் போன எகிப்தை மெல்ல மீட்டெடுக்கும் முயற்சியில் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு  தடைக்கற்களை சந்தித்தார்.

சர்வாதிகாரத்தால் கபளீகரம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தி மாற்றியமைக்க 100 அறிஞர்களைக் கொண்ட குழுவை அமைத்து வரைவு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். சர்வாதிகாரத்தின்  எச்சமாக இருந்த நீதித்துறையும், இராணுவமும் அதனை எதிர்க்கவே, மக்களிடம் வாக்கெடுப்பு  நடத்தப்பட்டு பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் விடாப்பிடியாக இராணுவம் பாராளுமன்றத்தைக் கூட்ட விடாமல் செய்து அந்த அரசியலமைப்பு சட்டம் வரவிடாமல்  தடுத்து விட்டது.

முர்ஸி செய்த சீர்திருத்த நடவடிக்கைகளில் இஸ்ரேலுடனான பழைய ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தது, இராணுவத்தின் அதிகாரங்களை குறைத்தது, அண்டை நாடுகளுக்கு பயணம் செய்து நல்லுறவு ஒப்பந்தங்கள்  செய்தது போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளையும், சமுதாயத்தினரையும் அரவணைத்து, மத சார்பற்ற ஒரு அரசை நிறுவுவதில் முர்ஸி வெற்றி அடைந்தார் என்றே கூறவேண்டும்.

ஆனாலும் ஒரு சில மேட்டுக்குடி மக்கள், அமெரிக்கா – இஸ்ரேல் போன்ற ஆதிக்க நாடுகளிடம் பிச்சை வாங்கி தின்று கொண்டிருக்கும் இராணுவம் மற்றும் சில அரசியல் கட்சிகள் ஆகியவை முர்ஸி வாக்குறுதி அளித்த ஜனநாயக அரசு வரவிடாதவாறு, அவர் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே போராடி வருகின்றன.

உச்சகட்டமாக கடந்த ஜூலை 12 ஆம் தேதி முர்ஸி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசை, மக்களின் அனுமதியின்றி இராணுவம் அகற்றியதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக “முர்ஸி கொடுங்கோல் ஆட்சி நடத்தினார்” என்று பல்வேறு கட்டுக் கதைகளை பரப்பி வருகின்றனர்.

இதனை  எதிர்த்து இக்வான்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் “மீண்டும் முர்ஸி வேண்டும்!” என்று வீதியில் இறங்கி விட்டனர். ஆனால் முர்ஸிக்கு எதிராக திரண்ட சில நூறு பேர்களை மீண்டும் மீண்டும் காட்டும் சியோனிச ஊடகங்கள், அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள லட்சோப லட்சம் மக்களை புறக்கணித்து வருகின்றன. தினமணி போன்ற சில இந்திய ஊடகங்களும் அதற்கு ஜால்ரா அடித்து வருகின்றனர்.

எங்கே எகிப்தில் முழுமையான ஜனநாயகம் மலர்ந்து, தங்களுக்கு பாதகம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி போன்ற நாடுகளால் பின்னப்பட்ட சதிவலையில் அப்பாவி எகிப்து மக்கள்  சிக்கிக் கொண்டு விட்டனர். ஆறு தலைமுறைகள் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த மக்களுக்கு, முர்ஸியின் ஒரு வருட நல்லாட்சியை சகித்து கொள்ளப் பொறுமை இல்லை.

விளைவு எகிப்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு மீண்டும் இராணுவ சர்வாதிகாரம் தலைதூக்கி விட்டது. ஜனநாயகம் எகிப்தில் மீண்டும் எழுந்து வர வேண்டும். உலக சர்வாதிகாரத்திற்கு மரண அடி விழ வேண்டும். இதுவே நடுநிலையாளர்களின் பேரவா!

இந்த தருணத்தில் முர்ஸியின் கூற்றை நினைவுக்கு வருகிறது.

”நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டாம், சட்ட ஆட்சியைக் காப்பாற்றுங்கள்.  நான்  அதன் பாதுகாவலன் மட்டுமே..!” ”என்னைப் பொறுத்த வரை நாட்டு மக்களின் இரத்தம் விலை மதிப்பு மிக்கது.  என் ஆற்றலையும் திறமையையும், கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர்களின் இரத்தத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை  நான்  எதிர் கொள்வேன்.” – எகிப்து அதிபர் டாக்டர் முகமது முர்ஸி

– அபுல் ஹசன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.